என் மலர்
ஈரோடு
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 45). இவரது மனைவி தங்கமணி (35). இவர்களது மகன் பிரனித் (5). இவர்கள் 3 பேரும் ஈரோட்டிற்கு வேலை விஷயமாக மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
பின்னர் வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஈரோடு அருகே ஆணைக் கல்பாளையம் ரிங் ரோடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக கந்தசாமி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கந்தசாமி, அவரது மனைவி தங்கமணி, மகன் பிரனித் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்தப் பகுதியாக வந்த மக்கள் விபத்து நடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். விபத்து நடந்த பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது. விபத்து குறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடலை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு துணை மின் நிலையத்தில் வருகிற 6-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சூரம்பட்டி வலசு, வீரப்பன் சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துறை ரோடு, சம்பத் நகர், வெட்டுகாட்டு வலசு, மாணிக்கம் பாளையம், ஆண்டிகாடு, பாண்டியன் நகர், சக்தி நகர், வக்கீல் தோட்டம், பெரிய சேமூர், ராம் நகர், பழைய பாளையம், பெரிய வலசு, பாப்பாத்தி காடு, பாரதிதாசன் வீதி, கருங்கல் பாளையம், நாராயண வலசு, குமலன் குட்டை, டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர். சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை ஈரோடு மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார். மற்றவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் வெளி மாவட்டங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் படி மகாராஷ்டிராவில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்த ஒருவர், கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவர், சென்னையில் பணியாற்றி ஈரோடு சூளை பகுதிக்கு திரும்பிய ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் கொடுமுடியை சேர்ந்தவர் விமானம் மூலம் வந்ததால் அவர் கோவை விமான நிலைய தொற்று கணக்கில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னிமலையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கோவையில் திருமணம் நடக்க இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வந்தார்.
அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கொரோனா தொற்று கண்டறியப்படும் ஒருவர் கடைசி 14 நாட்கள் எங்கு இருந்தாரோ அந்த மாவட்டத்தில் தான் அவரை பாதிப்பு எண்ணிக்கை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
நேற்று ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 2 பேரும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அவர்களில் ஒருவர் கோவையிலும், ஒருவர் செங்கல்பட்டிலும் உள்ளனர். எனவே அவர்களின் பெயர் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து அகற்றப்பட வாய்ப்புள்ளது என்றனர்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.
மேலும் பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.
பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 12 ஆயிரத்து 864 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பொது தேர்வு மையங்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா? அங்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு உள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து முதன்மை தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் துணை தேர்வு மையங்களாகவும் மாற்றப்பட்டு உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன். விவசாயி. இவரது மகன்கள் கணேசன் (22). பி.காம் பட்டதாரி. சிவராஜ் (18). பி.காம். சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் நீச்சல் தெரியாது என்பதால் அவர்களை நீச்சல் பழக தந்தை தமிழ்செல்வன் பவானி ஆற்றுக்கு சென்றார். கீழ்வாணி பகுதியில் அவர்கள் நீச்சல் பழகி கொண்டு இருந்தனர்.
அப்போது இருவரும் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று விட்டனர். அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களை காப்பாற்ற தந்தை தமிழ் செல்வன் முயன்றார்.
ஆனால் முடியவில்லை. இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். அப்பகுதியில் உள்ளவர்கள் விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி சுமார் 30 நிமிடங்கள் போராடி பலியான கணேசன், சிவராஜ் ஆகியோர் உடல்களை மீட்டனர்.
மகன்களின் உடலை பார்த்து தமிழ்செல்வன் தகறி அழுதார். தனது மகன்களின் சாவுக்கு தானே காரணமாகி போகதாக கூறி தமிழ்செல்வன் கதறினார். இருவரின் உடல்களை ஏற்றி செல்ல வந்த ஆம்புலன் முன் படுத்து கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க செய்தது.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வருவாய் சரக பகுதியில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு கும்பகோணம் சப்-கலெக்டர் வீராசாமி, பாபநாசம் தாசில்தார் கண்ணன், வருவாய் அதிகாரி ராஜ்குமார், வருவாய் உதவியாளர் நேதாஜி உள்ளிட்ட வருவாய்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது புத்தூர் கிராம பகுதி, கிராம சாலையில் வந்த ஓரு மினிலோடு வேனை வழி மறித்தனர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் வேனை நிறுத்தி விட்டு ஓடிவிட்டார். வருவாய்த்துறையினர் வேனை சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வேனை பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
இதேபோல் அம்மா பேட்டை அருகே உக்கடை கிராம பகுதியில் வந்த ஒரு மினிவேனை நிறுத்தியபோது வேனை நிறுத்திவிட்டு டிரைவர் ஓடிவிட்டார். வேனில் அனுமதியின்றி வெண்ணாற்றிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
வேனை பறிமுதல் செய்து அம்மாபேட்டை போலீசில் ஓப்படைத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து டிரைவர்களை தேடிவருகின்றனர்.
பவானி:
பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று ஈரோடு, சத்தி, ஆப்பக்கூடல், அத்தாணி, மேட்டூர், சேலம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
டிரைவர்கள் முக கவசம் மற்றும் கையுறை அணிந்து பஸ்களை ஓட்டி சென்றனர். கண்டக்டர்கள் மின்னணு டிக்கெட் கொடுக்கும் கருவி இல்லாதால் பெரும்பாலான கண்டக்டர்கள் கையில் டிக்கெட் கிழித்து கொடுத்தனர்.
அவர்கள் கையுறை அணிந்து இருப்பதால் டிக்கெட் கிழிக்கும் போது 2, 3 டிக்கெட்டுகள் சேர்ந்து வந்து விடுவதால் சிரமமாக இருக்கிறது என்றனர். அதனால் சிலர் கையுறை அணியாமல் டிக்கெட் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
மின்னணு டிக்கெட் கொடுக்கும் கருவி இருந்தால் நன்றாக இருக்கும். மேலும் கையுறை அணிந்து டிக்கெட் கொடுப்பதில் சிரமம் இருக்காது என்றனர்.
பவானி பணிமனையில் இருந்து இன்று 28 அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபரால் அங்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் மிதமாக பாதிக்கப்பட்ட பகுதியாக மாறியது.
இதையடுத்து தமிழகம் பச்சை மாவட்டம் இல்லாத மாநிலமாக மாறியது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மாவட்டம் பச்சை மாவட்டமாக மாறியது. கடந்த 28 நாட்களாக அங்கு புதிதாகவோ, வெளிமாநிலங்களில் இருந்து வந்த நபர்களுக்கோ கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
நேற்றைய நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 144 பேரும் குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்புகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 70 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார். மற்ற 69 பேர் குணமாகி வீடு திரும்பினார்கள். இதனால் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறியது.
இந்த நிலையில் மீண்டும் ஈரோட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்த 40 வயதுடையவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் மகாராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கொடுமுடி வந்து இருந்தார்.
தற்போது அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு சூளை பகுதியை சேர்ந்த 35 வயது பெண் சென்னையில் வேலை பார்த்து வந்தார். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால் சொந்த ஊரான ஈரோடு திரும்ப அவர் நேற்று விமானம் மூலம் சேலம் வந்தார். அங்கு அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொடுமுடியை சேர்ந்தவர் மற்றும் சூளையை சேர்ந்த பெண் ஆகிய 2 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 72 ஆக உயர்ந்து உள்ளது. மகாராஷ்டிரத்தில் இருந்து கொடுமுடி வந்தவர் மாநில அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அதனையும் சேர்த்தால் ஈரோட்டில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 73 ஆக உயரும்.
சென்னையில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தொடர்ந்து அவர் வசித்து வந்த வீடு தனிமைப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மகன், உறவினர் உள்பட 4 பேரை தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-
சென்னையில் இருந்து அப்பெண் வந்த 3 மணி நேரத்தில் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்பகுதியில் 5 வீடுகளில் வசித்து வருபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அனைத்து துறையினருடன் இணைந்து முடிவு செய்த பின்னர் தான் 10-ம் வகுப்பு தேர்வு சம்பந்தமாக அட்டவணைகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. மாணவர்கள் யாரும் பயப்பட தேவையில்லை. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடு செய்து தரப்படும். எங்கள் உயிரை விட மாணவர்கள் உயிரே மேலானது.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு அனைத்து வித ஏற்பாடுகளையும் பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. குறிப்பாக விடுதிகள் திறப்பதற்கும், மாணவர்கள் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசின் வரலாற்றில் முதன் முறையாக மாணவர்கள் எந்த பள்ளியில் படித்தார்களோ அந்த பள்ளிகளிலே தேர்வு எழுதலாம். 12,864 மையங்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் பள்ளி திறப்பு சம்பந்தமாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 10,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 145-ஆக உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 559 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. 6,304 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக உள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.






