search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 74 ஆக உயர்வு

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இறந்தார். மற்றவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

    இந்த நிலையில் வெளி மாவட்டங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    அதன் படி மகாராஷ்டிராவில் இருந்து வந்த கொடுமுடியை சேர்ந்த ஒருவர், கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவர், சென்னையில் பணியாற்றி ஈரோடு சூளை பகுதிக்கு திரும்பிய ஒரு பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இவர்களில் கொடுமுடியை சேர்ந்தவர் விமானம் மூலம் வந்ததால் அவர் கோவை விமான நிலைய தொற்று கணக்கில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது.

    இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    சென்னிமலையை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் செங்கல்பட்டில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு கடந்த மாதம் சென்றார். அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    சென்னையில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கோவையில் திருமணம் நடக்க இருந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வந்தார்.

    அங்கு அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, கொரோனா தொற்று கண்டறியப்படும் ஒருவர் கடைசி 14 நாட்கள் எங்கு இருந்தாரோ அந்த மாவட்டத்தில் தான் அவரை பாதிப்பு எண்ணிக்கை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    நேற்று ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 2 பேரும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகி விட்டது. அவர்களில் ஒருவர் கோவையிலும், ஒருவர் செங்கல்பட்டிலும் உள்ளனர். எனவே அவர்களின் பெயர் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து அகற்றப்பட வாய்ப்புள்ளது என்றனர்.
    Next Story
    ×