என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே வாலிபர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26). இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு திவின் (1) என்ற மகன் உள்ளான். மல்லிகா தனது மகனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பிரபாகரன் அவருடைய தாய் வாசுகியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாசுகி தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். அதனால் பிரபாகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பிரபாகரனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததால் மனம் உடைந்து இரவில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
    ஈரோடு அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 26). இவருடைய மனைவி மல்லிகா. இவர்களுக்கு திவின் (1) என்ற மகன் உள்ளான். மல்லிகா தனது மகனுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் பிரபாகரன் அவருடைய தாய் வாசுகியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாசுகி தறி பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். அதனால் பிரபாகரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். பிரபாகரனுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததால் மனம் உடைந்து இரவில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசிய ரவீந்திரநாத் எம்.பி. பதவி விலகவேண்டும் என்று ஈரோட்டில் மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் ஈரோடு மணல்மேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி கலா தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் முன்னிலை வகித்தார். மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட உத்தரபிரதேச பா.ஜ.க. அரசின் போலீஸ் துறையை வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதால் அங்கு நடைபெற்று கொண்டு இருக்கும் பா.ஜ.க. ஆட்சியை குடியரசு தலைவர் உடனடியாக கலைக்க வேண்டும். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், ‘தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அ.தி.மு.க.வை சேர்ந்த ரவீந்திரநாத், மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதால் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.

    கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் சித்ரா விஸ்வநாதன், வட்டார தலைவர்கள் சாந்தி, சுப்புலட்சுமி, செல்வி, முனீராபேகம், சித்ரா, நிர்மலா உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    அந்தியூர் அருகே தனியார் மருத்துவமனையில் மின்சாரம் தாக்கி நர்ஸ் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மகள் விஜயகுமாரி (வயது 26). இவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி இருந்து நர்சாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் டாக்டர் மருத்துவமனைக்கு வந்தபோது மருத்துவமனை பூட்டி கிடந்தது. இதனால் நர்ஸ் விஜயகுமாரிக்கு டாக்டர் போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்து, விஜயகுமாரி தங்கியிருக்கும் அறைக்கு சென்று அவர் பார்த்தார். அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் டாக்டர் கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு குளியலறையில் விஜயகுமாரி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், ‘குளிப்பதற்காக குளியலறைக்கு சென்ற விஜயகுமாரி ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி அவர் இறந்தது,’ தெரியவந்தது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் மூலம் 39 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில். சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று சம்பத்நகர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்தது.

    ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான தீப்தி அறிவுநிதி தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர், நீதிபதி ஆர்.மாலதி தலைமையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எஸ்.லட்சுமி, மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி எம்.தனபால், முதலாம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி.சிவக்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர். ஈரோடு பார் அசோசியேசன் தலைவர் கே.ரமேஷ், ஈரோடு அட்வகேட் அசோசியேசன் நல்லசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையில் இருந்த 39 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் 3 கோடியே 51 லட்சத்து 15 ஆயிரத்து 68 ரூபாய் மதிப்பில் உள்ள சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தது. குறிப்பாக 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாக பிரிவினை வழக்கில் சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சினைக்கு, இந்த மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசமாக தீர்வு காணப்பட்டது. கொரோனா காலத்திலும் மக்கள் நீதிமன்றம் மூலம் தங்கள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு காண உதவிய நீதிபதிகளுக்கு வழக்கில் தீர்வு பெற்றவர்கள் நன்றி தெரிவித்தனர்.
    சத்தியமங்கலம் அருகே வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகளை சேலையை வீசி காப்பாற்றிய பெண்ணை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே போயாகவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் கல்பனா (வயது 14). இவர் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் நகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன்-பூங்கொடி தம்பதியரின் மகள் தீபிகா (வயது 13). இவர் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கல்பனாவும், தீபிகாவும் தோழிகள் ஆவர். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணி அளவில் அருகில் உள்ள பெரிய வாய்க்காலுக்கு துணி துவைப்பதற்காக சென்றனர்.

    அப்போது தீபிகா கால் இடறி வாய்க்காலில் விழுந்தார். இதை பார்த்த கல்பனா, தோழியை காப்பாற்றுவதற்காக உடனே வாய்க்காலில் குதித்தார். பின்னர் தண்ணீரில் மூழ்கிய தீபிகாவை பிடித்து இழுக்க அவரை நோக்கி கையை நீட்டினார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை. தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது.

    இதனால் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு கத்தினர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் கணவனும், மனைவியும் சென்றனர்.

    வாய்க்கால் இருந்து மீட்கப்பட்ட தீபிகா, கல்பனா.


    அவர்களை கண்டதும் வாய்க்கால் கரையில் நின்று கொண்டிருந்த பெண்கள் “காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என கூக்குரலிட்டனர். உடனே ஸ்கூட்டரில் வந்த 2 பேரும் கூக்குரலிட்ட பெண்களின் அருகில் விரைந்து சென்றனர். அப்போது அங்கு 2 சிறுமிகள் வாய்க்கால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை பார்த்தனர். இதனால் ஸ்கூட்டரில் வந்த பெண் சுதாரித்து கொண்டு தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்து சிறுமிகளை நோக்கி வீசினார். உடனே அந்த சேலையை சிறுமிகளான தீபிகா மற்றும் கல்பனா ஆகியோர் கெட்டியாக பிடித்து கொண்டனர். இதற்கிடையே அந்த பெண்ணின் கணவர் வாய்க்காலில் குதித்து நீந்தி, 2 சிறுமிகளையும் கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றினார்.

    இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் கூறியதாவது:-

    என் பெயர் பாபு என்கிற பாலமுருகன் (வயது 47). நான் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக பணிகளை எடுத்து செய்து வருகிறேன். என்னுடைய மனைவி கவிதா (41). நாங்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள கூத்தனூரில் வசித்து வருகிறோம். இன்று (அதாவது நேற்று) சனிக்கிழமை என்பதால் நாங்கள் 2 பேரும் மில்மேடு அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தோம்.

    வாய்க்கால் மேடு அருகே சென்றபோது கரையில் நின்றிருந்த பெண்கள் சிலர், “காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று சத்தம் போட்டனர். உடனே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு அங்கு சென்று பார்த்தபோது வாய்க்காலில் 2 சிறுமிகள் தத்தளித்து கொண்டிருந்தனர். உடனே நான் வாய்க்காலில் குதித்தேன். நீச்சல் அடித்தபடியே சிறுமிகளை நோக்கி சென்றேன்.

    அதற்குள் எனது மனைவி சேலையை அவிழ்த்து சிறுமிகளை நோக்கி வீசினார். அந்த சேலையை ஒரு சிறுமி பிடிக்க, நான் நீந்தி சென்று அந்த சிறுமிகளை பிடித்துக்கொண்டேன். பின்னர் 2 பேரையும் இழுத்து சில நிமிடங்களில் கரைக்கு கொண்டு வந்து சேர்ந்தோம். தாமதித்திருந்தால் சிறுமிகள் வாய்க்கால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு இருப்பார்கள். தக்க சமயத்தில் 2 பேரையும் காப்பாற்றிவிட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கணவன்-மனைவி 2 பேரும் துணிச்சலாக செயல்பட்டு வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகளை காப்பாற்றியதற்கு அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தார்கள்.
    கோபி அருகே கணவர் உள்பட 3 பேரை தாக்கிவிட்டு புதுப்பெண்ணை காரில் கடத்திச்சென்ற 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையத்தைச் சேர்ந்தவர் அசோக் (வயது 25). நயினாம் பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தரநாயகி (22). அசோக்கும், சவுந்தரநாயகியும் கோபியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    அப்போது 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் சவுந்தரநாயகியின் வீட்டுக்கு தெரிய வந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சவுந்தரநாயகியின் வீட்டில் இந்த காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    இதைத்தொடர்ந்து அசோக்கும், சவுந்தரநாயகியும் கடந்த மாதம் 16-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் திருமணம் செய்து கொண்டு, கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் அசோக்கின் பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் சவுந்தரநாயகியின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து அசோக், சவுந்தரநாயகியை அவ்வையார்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சவுந்தரநாயகியிடம் உறவினர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, ‘உன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. உடனே வர வேண்டும்’ என்று அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து சவுந்தரநாயகி கணவர் அசோக்கை அழைத்துக்கொண்டு காரில் நயினார்பாளையத்துக்கு விரைந்தார். அவர்களுடன் அசோக்கின் தம்பி பரணீதரன், நண்பர் சூர்யா ஆகியோரும் சென்றனர்.

    சவுந்தரநாயகியின் வீட்டு முன்பு 4 பேரும் காரை விட்டு இறங்கியதும், 6 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் இருந்து திபுதிபுவென ஓடிவந்தது. இதை 4 பேரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. திடீரென அந்த கும்பல், சவுந்தரநாயகியை தரதரவென வீட்டுக்குள் இழுத்து சென்று ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி வைத்தனர்.

    அதன்பின்னர் அந்த கும்பல் அசோக், பரணீதரன், சூர்யா ஆகிய 3 பேரையும் கிரிக்கெட் ஸ்டம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கத்தியால் கீறி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அதைத்தொடர்ந்து அந்த கும்பல், சவுந்தரநாயகியை இழுத்து வந்து காருக்குள் பிடித்து தள்ளினர். பின்னர் அவரை கடத்திக்கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து அசோக் கோபி போலீசில் புகார் செய்தார். அந்தப்புகாரில் அவர், ‘என்னையும், எனது தம்பி, நண்பர் ஆகியோரையும் 6 பேர் கொண்ட கும்பல் தாக்கிவிட்டு எனது மனைவியை காரில் கடத்தி சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    அதன்பேரில் சவுந்தரநாயகியை கடத்திச் சென்ற வாசுதேவன், சின்னப்பன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்கள்.

    கணவர் உள்பட 3 பேரை தாக்கிவிட்டு இளம்பெண்ணை சினிமா பாணியில் காரில் கடத்திச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத 82 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று அரசு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை தொழிலாளர் ஆணையாளர் நந்தகோபால் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி கோவை கூடுதல் ஆணையாளர் செந்தில்குமாரி, இணை ஆணையாளர் தங்கவேல் ஆகியோர் அறிவுரையின்படி ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் தலைமையில் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார்கள்.

    இதில் மாவட்ட துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தனர்.

    கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், சில நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காததும், தொழிலாளர்களிடம் முன் அனுமதி பெறாமல் பணியில் அமர்த்தியதும் தெரியவந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத 38 கடைகள், 38 உணவகங்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 82 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு அருகே கணவரை கடத்தி சென்று விட்டதாக காதல் மனைவி போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார்.
    ஈரோடு:

    கரூர் மாவட்டம் வெள்ளியம்பாளையம் செல்வநகர் காலனி பகுதியை சேர்ந்த காயத்ரி (வயது 22) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

    நான் கடந்த 2015-ம் ஆண்டு கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தேன். அப்போது ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஆட்டுக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் காதலித்து 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் எனது கணவருடன், கொடுமுடி அருகே உள்ள குந்தாணிபாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். எங்களுக்கு நித்யஸ்ரீ (3) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் என்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு எனது கணவர் அவரது சொந்த ஊருக்கு சென்று விட்டார். இதுகுறித்து நான் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன்.

    அதன் பேரில் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது எனது கணவர் வேறு வீடு பார்த்து கடந்த மாதம் 20-ந்தேதி அழைத்து செல்வதாக கூறினார். இதை நம்பி நானும், எனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஆனால் அவர் கூறியபடி வரவில்லை. இதனால் கடந்த 22-ந்தேதி நான் எனது உறவினர்களுடன் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றபோது, அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் எனது சாதி பெயரை சொல்லி திட்டியதோடு, என்னையும், குழந்தையையும் கொன்று விடுவதாக மிரட்டினார்கள்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக எனது கணவர் சதீஷ்குமாரை காணவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. கலப்பு திருமணம் செய்து 4 ஆண்டுகள் குடும்பம் நடத்திய பின்னர் எங்களை பிரிக்க வேண்டும் என்ற நோக்கில் எனது கணவரை கடத்தி சென்று விட்டார்கள். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும். மேலும் எனக்கும், எனது குழந்தைக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.
    போலி இணையதள முகவரி மூலம் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4 லட்சத்தை இழந்த பேராசிரியர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் வசிப்பவர் பழனிச்சாமி. அவருடைய மகன் அன்பரசன் (வயது 34). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது வர்த்தகத்தின் மூலம் இவரது வங்கி கணக்கில் 4 நாட்களில் மளமளவென ரூ.80 லட்சம் வரை உயர்ந்துள்ளது. உடனே அன்பரசன் அந்தப் பணத்தை எடுப்பதற்காக ஆன்லைன் பரிவர்த்தனை செய்துள்ளார். ஆனால் அந்தப் பணம் பரிவர்த்தனை ஆகாததால் வர்த்தக நிறுவனத்தை தொடர்பு கொண்டு செல்போனில் பேசியுள்ளார்.

    அதற்கு செல்போனின் மறுமுனையில் இருந்து ஒருவர் பேசியுள்ளார். அவர் அன்பரசனிடம், ‘இந்த பணத்தை நீங்கள் பெற வேண்டுமானால் நாங்கள் கொடுத்துள்ள வங்கிக் கணக்கில் ரூ.4 லட்சம் செலுத்திய பின்னரே எடுக்க முடியும்’ என தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய அவர், வெளிநாட்டு வர்த்தகம் என்ற இணையதள முகவரி வாயிலாக “ஸ்பே டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் புதுடெல்லி“ கணக்கு எண் 38 62 0 3 12254 என்ற வங்கி கணக்கிற்கு ரூ.4 லட்சம் செலுத்தியுள்ளார்.

    அதன்பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.80 லட்சமும் படிப்படியாக குறையத் தொடங்கியது. அப்போது தான் அன்பரசன், போலி இணையதள முகவரி மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்தை இழந்தது தெரிய வந்தது.

    உடனே இதுபற்றி அவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அந்தப்புகாரில் அவர், ‘போலியான இணையதள முகவரியை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அவரது புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பில் தமிழகம் தான் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும் செயல்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான சூழல் தற்போதைக்கு இல்லை. கொரோனா தாக்கம் குறைந்த பின்பு தான் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான பாடப்புத்தகங்கள் கூடுதலாகவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.24 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்; அவர்களுக்கு பாட புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது.

    மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு இலவச மடிக்கணினி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவது கொரோனா பரவல் காரணமாக தாமதமாகி வருகிறது.

    தமிழகத்தில் மலைக்கிராமங்கள் உள்பட 52 பின்தங்கிய கிராமங்களில் இணையதள சிக்னல் கிடைக்காமல் உள்ளதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண குழு அமைக்கப்பட்டு விரைவில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாநிலம் முழுவதும் 14 தனியார் பள்ளிகள் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தது. இதில் 5 பள்ளிகள் சரியான விளக்கம் அளித்துள்ளனர். மீதமுள்ள 9 பள்ளிகள் மீது நீதிமன்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு மரப்பாலம் பகுதியில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வீணாக சென்று கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஈரப்பதம் ஏற்பட்டு ரோட்டின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் குரு (வயது 35) என்பவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் நேற்று காலை மரப்பாலம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்குள்ள பள்ளத்தில் அவருடைய கார் சிக்கியது. அதைத்தொடர்ந்து மேற்கொண்டு அவரால் காரை நகர்த்த முடியவில்லை. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சேர்ந்து காரை பள்ளத்தில் இருந்து வெளியில் கொண்டுவர முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதைத்தொடர்ந்து அங்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது.

    இதேபோல் அந்த வழியாக வந்த ஒரு ஷேர் ஆட்டோவும் ரோட்டில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோ சிறிது நேரத்தில் வெளியே எடுக்கப்பட்டது.

    மேலும் மரப்பாலம் பகுதி வழியாக சென்ற சில இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் சென்றதையும் பார்க்க முடிந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தார்ரோடு போட கோரிக்கை விடுத்தனர்.
    ×