என் மலர்
செய்திகள்

ஈரோடு மரப்பாலம் பகுதியில் பள்ளத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.
ஈரோடு மரப்பாலம் பகுதியில் நடுரோட்டில் திடீர் பள்ளம்- சிக்கி தவித்த வாகன ஓட்டிகள்
ஈரோடு மரப்பாலம் பகுதியில் நடுரோட்டில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மரப்பாலம் பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வீணாக சென்று கொண்டு இருந்தது. இதன் காரணமாக ஈரப்பதம் ஏற்பட்டு ரோட்டின் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்தவர் குரு (வயது 35) என்பவர் சொந்த வேலை காரணமாக தனது காரில் நேற்று காலை மரப்பாலம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்குள்ள பள்ளத்தில் அவருடைய கார் சிக்கியது. அதைத்தொடர்ந்து மேற்கொண்டு அவரால் காரை நகர்த்த முடியவில்லை. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் சேர்ந்து காரை பள்ளத்தில் இருந்து வெளியில் கொண்டுவர முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதைத்தொடர்ந்து அங்கு மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது.
இதேபோல் அந்த வழியாக வந்த ஒரு ஷேர் ஆட்டோவும் ரோட்டில் உள்ள பள்ளத்தில் சிக்கியது. பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோ சிறிது நேரத்தில் வெளியே எடுக்கப்பட்டது.
மேலும் மரப்பாலம் பகுதி வழியாக சென்ற சில இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் சென்றதையும் பார்க்க முடிந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து தார்ரோடு போட கோரிக்கை விடுத்தனர்.
Next Story






