என் மலர்tooltip icon

    ஈரோடு

    அந்தியூர் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு ஆண் குழந்தையை தண்ணீரில் அமுக்கி கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி காலனியை சேர்ந்தவர் மணி. ரிக்வண்டி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு யுவராணி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்த பவித்ராவுக்கு கடந்த மாதம் 3-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் பவித்ரா தனது குழந்தையுடன் சென்னம்பட்டி காலனிக்கு திரும்பினார். இந்த நிலையில் குழந்தை பிறந்து 19-வது நாளில் அதிகாலை பால்குடித்த போது குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக மணி மற்றும் பவித்ரா ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தையின் உடல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஆண் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஈரோடு மாவட்ட சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இது குறித்து போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, மற்றும் வெள்ளி திருப்பூர் போலீசார், சைல்டு லைன் அமைப்பினர், மருத்துவ துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.

    ஆண் குழந்தை சாவில் மர்மம் குறித்து சென்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தமிழ் செல்வி என்பவர் வெள்ளி திருப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் பெருந்துறை மருத்துவ கல்லூரியில் இருந்து டாக்டர்கள் சென்னம்பட்டி காலனிக்கு வந்து குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்பக்க தலையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடுவதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து குழந்தையின் தந்தை மணியை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மணி சென்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வியிடம் சரண் அடைந்தார். அவர் அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்.

    போலீசாரிடம் குழந்தையை தான் கொலை செய்ததாக மணி தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:-

    எனது மனைவி பவித்ராவுக்கு ஏற்கனவே சதீஷ் என்பவருடன் திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் 2-வதாக நான் பவித்ராவை திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

    நான் ரிக் வண்டிக் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று விடுவேன். இந்த நிலையில் ஊரில் உள்ளவர்கள் எனது மனைவி பவித்ராவுக்கும், எனது தம்பி ரஞ்சித்துக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பேசி கொண்டனர். இதனால் எனக்கு எனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.

    மேலும் குழந்தையும் என் முக சாயலில் இல்லை. இதனால் குழந்தையை கொலை செய்ய முடிவு செய்தேன். சம்பவத்தன்று அதிகாலை குழந்தை என் மனைவி அருகே தூங்கி கொண்டு இருந்தது. அப்போது நான் குழந்தையை தூக்கிகொண்டு அருகில் இருந்த ஒரு தொட்டியில் இருந்த தண்ணீரில் குழந்தையை அமுக்கி கொலை செய்தேன்.

    பின்னர் மீண்டும் குழந்தையை என் மனைவி அருகே கொண்டு சென்று வைத்து விட்டேன். காலையில் எழுந்த என் மனைவி குழந்தை பால் குடித்த போது மூச்சு திணறி இறந்து இருக்கலாம் என்று கருதி கொண்டார். குழந்தையை கொன்றது குறித்து எனது தம்பி ரஞ்சித்திடம் தெரிவித்தேன். அவன் எதற்கு அவரசப்பட்டு கொலை செய்தாய் என்று கேட்டான். மேலும் நாங்கள் 2 பேரும் இதை யாரிடமும் சொல்லாமல் குழந்தையை குழி தோண்டி புதைத்து விட்டோம்.

    ஊரில் உள்ளவர்கள் இதுப்பற்றி தெரிந்து கொண்டு புகார் செய்ததால் நாங்கள் சிக்கி கொண்டோம். 

    இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

    மேலும் குழந்தை கொலை தொடர்பாக மணிக்கு உதவியாக இருந்த அவரது தம்பி ரஞ்சித்தையும் போலீசார் கைது செய்தனர்.

    தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

    தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

    * தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம். ஆட்சேபம் இல்லை.

    * அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது.

    * அரசு சரியாக செயல்படுவதால் பள்ளிக்கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவையில்லை.

    * 50% பாட குறைப்பு மட்டுமின்றி நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற 31-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு (3 ஆண்டுகள்) படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவ-மாணவிகளுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எந்த நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழில்படிப்பு உள்ளிட்ட பிற படிப்புகளுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை கோரும் மாணவ-மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை அவரவர் படிக்கும் கல்வி நிறுவனங்களில் வழங்க வேண்டும்.

    கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு ஈரோடு கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் சி.கதிரவன் கூறி உள்ளார்.
    கருங்கல்பாளையம் சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்து அதிகரித்தது. சந்தைக்கு கேரளா வியாபாரிகள் வரவில்லை.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள மாட்டுச்சந்தை வாரம்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் நடந்த சந்தைக்கு, 50 வளர்ப்பு கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.

    இதை பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் விலை பேசி பிடித்து சென்றனர். நேற்று வழக்கமான சந்தை கூடியது. இதற்கு ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன. 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

    இதில் எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.45 ஆயிரத்துக்கும் விற்பனையா னது. பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும், கர்நாடகா, ஆந்திரா, கோவா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகளும் விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.

    இதுகுறித்து சந்தை நிர்வாகி ராஜேந்திரன் கூறும்போது, ‘கடந்த வாரத்தைவிட இந்த வாரம் கூடுதலாக மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கருங்கல்பாளையம் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீதம் விற்பனையானது. கேரளா மாநிலத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றதால் அந்த மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை’ என்றார்.
    ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊஞ்சலூர்:

    ஊஞ்சலூர் அருகே உள்ள வள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 42). இவர் நேற்று காலை தனது சேலையை துவைத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த கம்பியில் காய போட்டு உள்ளார். 

    அப்போது மின் கசிவு ஏற்பட்டு அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    ஈரோட்டில் கைதான 2 பெண்களுக்கு கருமுட்டை, குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் ஆரம்ப சுகாதார நிலைகத்தில் நர்சாக பணிபுரிபவர் அகிலா. இவரது செல்போனுக்கு கடந்த 5-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய பெண் ஒருவர் விலைக்கு பச்சிளம் குழந்தை வேண்டும். குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள் இருந்தால் தெரிவிக்கலாம். சட்டரீதியான பிரச்சனை வராமல் பார்த்து கொள்ளலாம் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் சந்தேகம் அடைந்த நர்ஸ் அகிலா இதுகுறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசிலும் புகார் அளித்தார்.

    போலீசாரின் ஆலோசனைபடி போனில் பேசிய பெண்ணிடம் நர்ஸ் அகிலா போன் செய்து, நீங்கள் கேட்டது போல் குழந்தை உள்ளது. நீங்கள் உடனடியாக பி.பி.அக்ரஹாரம் பகுதிக்கு வருமாறு கூறினார்.

    இதை நம்பி 3 பெண்கள் ஒரு ஆண் என 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை கருங்கல்பாளையம் போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அவர்கள் கோவையை சேர்ந்த சங்கரேஸ்வரி(வயது30). சேலம் களரம்பட்டியை சேர்ந்த கோகிலா(32), மோகனபிரியா(24), பள்ளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார்(32) என தெரிய வந்தது.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் பவானி லட்சுமி நகரை சேர்ந்த சண்முகபிரியாவுக்காக தான் குழந்தையை கேட்டதாக கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் பவானிக்கு சென்றனர்.

    ஆனால் அதற்குள் சண்முகபிரியா தலைமறைவாகி விட்டார். போலீசார் விசாரணையில் அவருக்கு ஏற்கனவே 14 வயது பெண் குழந்தை இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது,

    பிடிபட்டுள்ள மோகன பிரியா, கோகிலா ஆகியோர் தங்களது கருமுட்டைகளை ஆஸ்பத்திரியில் அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து உள்ளனர். மேலும் பச்சிளம் குழந்தைகளை வாங்கி விற்கும் இடைத்தரகர்களாவும் செயல்பட்டுள்ளனர்.

    இதில் நந்தகுமார், சங்கரேஸ்வரி இருவரும் இடைத்தரகராக செயல்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். தற்போது சண்முக பிரியா தலைமறைவாக உள்ளார். அவர் பிடிபட்டால் தான் இந்த கும்பலுக்கு வேறு யாருடன் தொடர்பு உள்ளது போன்ற முழு விவரமும் தெரிய வரும்.

    தலைமறைவாக உள்ள சண்முக பிரியாவை பிடிக்க கருங்கல்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்த வருகிறது. அவர்கள் மீது குழந்தைகளை விற்பனை செய்வது, குழந்தைகளை விற்பனை செய்ய முயற்சித்தல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் என்றனர். கைதான 4 பேரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் 43 சொசைட்டி மூலம் 61 லட்சம் வேட்டிகள், 59.50 லட்சம் சேலை உற்பத்தி செய்யும் பணி நடைபெறுகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான உற்பத்தி பணிகள் ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 40 சதவீதம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணி 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.

    கொரோனா தாக்கம் காரணமாக முதலில் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி சிறிது தொய்வு ஏற்பட்டாலும் பின்னர் நிலைமை சீராகி இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி மும்முரம் அடைந்துள்ளது. தற்போது, இலவச வேட்டி, சேலை உற்பத்தி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டத்தில் 43 சொசைட்டி மூலம் 61 லட்சம் வேட்டிகள், 59.50 லட்சம் சேலை உற்பத்தி செய்யும் பணி நடக்கிறது. தற்போது வரை 48.75 லட்சம் வேட்டியும், 38.91 லட்சம் சேலைகளும் உற்பத்தி நிறைவு பெற்றுள்ளது.

    மீதமுள்ள வேட்டி, சேலை உற்பத்தி பணி வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் நிறைவு செய்து அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியுள்ளார்.
    கொடுமுடி பகுதியில் விளை நிலங்களில் கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், தொழிற் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் இதை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 3 வேளாண் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், கொடுமுடி அடுத்த பழனிக்கவுண்டன் பாளையம், பாம்ப கவுண்டன் பாளையம், சாணார்பாளையம், சோளங்காபாளையம், கிளாம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் வீடுகள் மற்றும் விளை நிலங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடிகளை ஏற்றி விவசாயிகள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். டெல்லி செல்ல முடியாததால் சட்டத் தை எதிர்த்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி இருப்ப தாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

    மஞ்சள், வாழை, கரும்பு உள்ளிட்ட விளை பொருட்களுக்கு ஏற்கனவே கட்டுபடி ஆகாத விலை உள்ள நிலையில் இது போன்ற சட்டங்களால் தங்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

    ஈரோட்டில் குழந்தையை விலைக்கு வாங்க சென்ற கோவையை சேர்ந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் செயல்பட்டு வரும் கிராம சுகாதார அலுவலகத்தில் அகிலா என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அகிலாவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், ‘தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்றும், குழந்தையை வளர்க்க முடியாத நிலையில் உள்ளவர்கள் யாராவது இருந்தால் தகவல் தெரிவிக்கவும் என்றும்’ கூறியுள்ளார்.

    மேலும் அவர் சட்ட பிரச்சினை ஏதும் இல்லாத வகையில், வக்கீலுடன் வந்து குழந்தையை பெற்றுக்கொள்வதாகவும் கூறி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகிலா இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசாரின் ஆலோசனைப்படி, அந்த பெண்ணிடம் செல்போனில் பேசிய செவிலியர் அகிலா, நீங்கள் கேட்பது போன்று குழந்தை உள்ளதாகவும், வந்தால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார். அதனால் குழந்தையை விலைக்கு வாங்குவதற்காக 3 பெண்கள் ஒரு ஆண் என 4 பேர் ஈரோடு கருங்கல்பாளையத்துக்கு வந்தனர்.

    அப்போது மறைந்திருந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்டவர்கள், கோவை மாவட்டத்தை சேர்ந்த சங்கரேஸ்வரி, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோகிலா, மோகன பிரியா, மற்றும் நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் 4 பேருக்கும் ஏற்கனவே குழந்தைகள் இருப்பதும், அவர்களிடம் ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமிநகர் பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் பெண் குழந்தை கேட்டதும் தெரியவந்தது. இதனால் போலீசார் பவானி லட்சுமிநகர் விரைந்தனர். போலீசார் வருவதை அறிந்த சண்முகப்பிரியா அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். மேலும் போலீசார் அங்கு விசாரித்தபோது, சண்முகப்பிரியாவுக்கு 15 வயதில் பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

    அவர் பிடிபட்டால் தான் குழந்தை யாருக்காக கேட்கப்பட்டது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?, இவர்களுக்கும், குழந்தை கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்ட விபரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரேஸ்வரி, கோகிலா, மோகன பிரியா, நந்தகுமார் ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சண்முகப்பிரியாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்ட கலெக்டரின் மனுநீதி திட்ட முகாம் நேற்று கொல்லம்பாளையம் ஆசிரமம் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டரின் மனுநீதி திட்ட முகாம் நேற்று கொல்லம்பாளையம் ஆசிரமம் பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. இந்த முகாமில் ஈரோடு “இ” கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். முகாமில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். மொத்தம் 77 பேருக்கு 9 லட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு இலவச ஸ்கூட்டர்கள், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன.

    முன்னதாக பொதுமக்களிடம் இருந்து 190 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டார்.

    முகாமில் ஈரோடு ஆர்.டி.ஓ. எஸ்.சைபுதீன், மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி சீனிவாசன், மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பூங்கோதை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி இளங்கோ, ஈரோடு மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், ஈரோடு தாசில்தார் அ.பரிமளாதேவி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மாலதி, அ.தி.மு.க. பகுதி செயலாளர் கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் கேபிள் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூக்களை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் போராட்ட களத்தில் குதித்தன.

    நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்து கோம்புபள்ளத்தில் பூக்களை ரோட்டில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோட்டில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு அளித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் டி.சிம்ரன், ஹாசினி, நிக்கிசா, அமிர்தா, தனு ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

    எங்களிடம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை உள்ளது. நாங்கள்இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல முறை விண்ணப்பித்தும் இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் தகுதி இல்லாத சிலருக்கு இலவச வீட்டுமனை வழங்கப்பட்டு உள்ளது. அப்படி வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். திருநங்கைகளாக இல்லாத சிலர் போலி அடையாள அட்டை வைத்துக்கொண்டு சுற்றி வருகிறார்கள். அவர்களை அதிகாரிகள் கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

    இதேபோல் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர்களாக உள்ளோம். சுகாதார கணக்கெடுப்பு, தனிநபர் கழிப்பிடம் அமைப்பது, கொரோனா தடுப்பு பணிகள், டெங்கு ஒழிப்பு பணி மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். தற்போது புதிதாக டெண்டர் எடுத்த ஒரு தனியார் நிறுவனம் எங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த ரூ.14 ஆயிரத்து 259-க்கு பதிலாக ரூ.6 ஆயிரத்து 500 மட்டுமே கொடுக்கிறார்கள். எனவே எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு நிர்ணயித்து உள்ள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.

    ×