என் மலர்tooltip icon

    ஈரோடு

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது.
    ஈரோடு:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது.

    இதில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது. இந்த ரெயிலில் உள்ள நெல் மூட்டைகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலமாக நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    ஈரோடு:

    தமிழக சுகாதாரத்துறை சார்பில் தினமும் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த பட்டியல் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 127 ஆக உயர்ந்தது.

    இதில் நேற்று 43 பேர் குணமடைந்தார்கள். இதுவரை 12 ஆயிரத்து 637 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளார்கள். 348 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 142 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.
    ஈரோட்டில் கட்டுமான நிறுவன அலுவலகம், வீட்டில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற பெயரில் பிரபல கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. மேலும், ரியல் எஸ்டேட் தொழில், மசாலா தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே தங்கபெருமாள் வீதியில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக அலுவலகத்துக்குள் நுழைந்தனர்.

    அப்போது அலுவலகத்தின் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்ற அதிகாரிகள் அங்குள்ள பணியாளர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. மேலும், அவர்களிடம் இருந்த செல்போன்களை அதிகாரிகள் வாங்கி கொண்டனர். அங்குள்ள தொலைபேசியை பயன்படுத்த தடை விதித்தனர்.

    இதைத்தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகளை வாங்கி சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட தொடங்கினார்கள். இதேபோல் ஈரோடு அருகே கஸ்பாபேட்டையில் இந்த நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து வீடு முழுவதும் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.

    வருமானத்துக்கு ஏற்ப உரிய வரி செலுத்தப்பட்டு உள்ளதா? என்று அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினார்கள். இந்த சோதனை நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்தது. முதல் நாள் சோதனையில் கணக்கில் வராத பணம் சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நீடித்து வருகிறது. காளைமாடு சிலை அருகே உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் வெளிப்புறமாக பூட்டப்பட்டு உள்ளது. உள்ளே யாரும் அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் கஸ்பா பேட்டை பகுதியில் உள்ள உரிமையாளர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை செய்து வருகின்றனர்.

    ஈரோடு, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த சோதனை முடிவில் தான் எவ்வளவு பணம், ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது? என்பன போன்ற விவரம் தெரியவரும்.

    ஈரோட்டில் திருமணமான 3 மாதத்தில் நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் கீர்த்தி (27) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு முன்பு சண்முகம் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து சரவணனுக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மணிக்கூண்டு பகுதியில் நகைக்கடை வைத்து கொடுத்தார்.

    கடந்த சில வாரங்களாக சரவணன் தனது தந்தையிடம் தொழிலை விரிவு படுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு சண்முகம், ‘தற்போது தன்னிடம் பணம் இல்லை, பணம் வந்ததும் தருகிறேன், அதுவரை இருக்கும் தொழிலை கவனி’ என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று தனது தந்தையிடம் பணம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் சண்முகம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சரவணன், தனது தந்தை கண் முன்னே விஷம் குடித்தார்.

    இதைப்பார்த்த சண்முகம் மற்றும் அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரவணன் இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
    திமுக போராட்டத்தில் பங்கேற்ற கிராம நிர்வாக அலுவலரை சஸ்பெண்டு செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார்.
    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், சோளசிராமணி அருகே உள்ள பொன்னம் பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(வயது42). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா புஞ்சைகாளமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கணபதிபாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் கடந்த 24-ந் தேதி பரமத்தி வேலூர் தி.மு.க. எம்.எல்.ஏ.மூர்த்தியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்து அக்கட்சி நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதாக புகார் எழுந்தது. மேலும் போராட்டத்தில் பங்கேற்ற போட்டோக்களை மோகன்ராஜ் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பதிவிட்டார்.

    இதை பார்த்த சிலர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்த கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். இது குறித்து மொடக்குறிச்சி தாசில்தார் சங்கர்கணேஷ் விசாரணை நடத்தி ஆர்.டி.ஓ சைபுதீனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

    இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜை சஸ்பெண்டு செய்து ஆர்.டி.ஓ உத்தரவிட்டுள்ளார். மோகன்ராஜிடம் அவர் தரப்பு கருத்தை கூற விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் விளக்கம் அளித்த பிறகு அடுத்த நடவடிக்கை குறித்து தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி அருகே சாமி சிலை உடைப்பை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கனககிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாச்சல குமரன் முருகன் கோவில் உள்ளது.

    மலை அடிவாரத்தில் விநாயகர் கோவில் மலைக்கு செல்லும் நடு பகுதியில் ஆதி வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மொடக்குறிச்சி, எழுமாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சிலர் வந்தனர். அவர்கள் பெருமாள் கோவில் முன்பு உள்ள கருடாழ்வார் சாமி சிலையை உடைத்தனர். இதில் சாமி சிலையின் தலைப்பகுதி துண்டாகி கீழே விழுந்து கிடந்தது.

    மேலும் அந்த மர்ம நபர்கள் கோவில் மலைப்பகுதியில் மது பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு சென்றனர்.

    இந்த நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு சாமி சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரச்சலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சாமி சிலையை உடைத்தவர்களை தேடி வருகிறார்கள்.

    இது குறித்த தகவல் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. வினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதிக்கு திரண்டு வந்தனர். பாரதிய ஜனதா ஒன்றிய துணை அமைப்பாளர் கவுரிசங்கர் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சாமி சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உட னடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் சாமி சிலை உடைப்பை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) எழுமாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

    எழுமாத்தூர் பகுதியில் மளிகை கடைகள், டீக்கடைகள், மெடிக்கல் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், பால் பூத்கள் மட்டும் செயல்பட்டன. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.


    கொடுமுடி அருகே காவலாளிகளை மிரட்டி டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூரில் இருந்து சோளசிராமணி செல்லும் வழியில் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ளது. இதன் அருகே ஒதுக்குப்புறமான கரும்பு தோட்டத்துக்குள் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையின் சூப்பர்வைசராக கதிர்வேல், விற்பனையாளராக முகமது ரபிக் ஆகியோர் வேலைப்பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 9 மணியளவில் கடையின் சூப்பர் வைசர் கதிர்வேல் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு விற்பனையாளர் முகமது ரபிக் விற்பனை கணக்குகளை சரிபார்த்து கொண்டு இருந்தார்.

    பின்னர் அவரும் இரவு 11.30 மணி அளவில் வீட்டிற்கு சென்று விட்டார். கடையின் முன் பகுதியில் காவலாளிகள் கருப்புசாமி (50), சினனதம்பி (52), ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மதுக்கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காவலாளிகளை மிரட்டி மதுக்கடைக்கு பின்பகுதியில் உள்ள பாருக்கு அழைத்து சென்றனர். காவலாளிகளை சுற்றி 3 பேர் நின்று கொண்டு சத்தம் போட்டால் தீர்த்து கட்டிவிடுவோம் என்று மிரட்டி கொண்டு இருந்தனர்.

    அந்த நேரத்தில் 7 பேர் கும்பல் மதுக்கடையின் சட்டரை கடப்பாரையால் உடைத்து கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கு பணம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்தனர். வசூலான பணத்தை விற்பனையாளர் கொண்டு சென்றதால் அங்கு பணம் ஏதும் இல்லை.

    இதையடுத்து ஏமாற்றம் அடைந்த கும்பல் டாஸ்மாக் கடையில் இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த 6 சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றிசென்று விட்டனர்.

    பின்னர் காவலாளிகள் 2 பேரும் கடையின் சூப்பர் வைசருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் மலையம் பாளையம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கடையில் கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு குறித்து கடையின் சூப்பர் வைசர் மற்றும் விற்பனையாளர் கணக்கிட்டு வருகிறார்கள்.

    ஈரோட்டில் திருமணமான 3 மாதத்தில் நகைக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சரவணன் (வயது 30). இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் கீர்த்தி (27) என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு முன்பு சண்முகம் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து சரவணனுக்கு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மணிக்கூண்டு பகுதியில் நகைக்கடை வைத்து கொடுத்தார்.

    கடந்த சில வாரங்களாக சரவணன் தனது தந்தையிடம் தொழிலை விரிவு படுத்துவதற்காக பணம் கேட்டுள்ளார். அதற்கு சண்முகம், ‘தற்போது தன்னிடம் பணம் இல்லை, பணம் வந்ததும் தருகிறேன், அதுவரை இருக்கும் தொழிலை கவனி’ என்று கூறி உள்ளார்.

    இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று தனது தந்தையிடம் பணம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் சண்முகம் பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சரவணன், தனது தந்தை கண் முன்னே விஷம் குடித்தார்.

    இதைப்பார்த்த சண்முகம் மற்றும் அக்கம் பக்கத்தினர் சரவணனை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சரவணன் இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
    நேதாஜி படையில் பணியாற்றிய 101 வயதான சுதந்திர போராட்ட தியாகி துரைராஜ் மரணம் அடைந்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியத்தை சேர்ந்தவர் எஸ்.துரைராஜ். இவர் சுதந்திர போராட்ட காலத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். சுதந்திரத்துக்காக போராடியதற்காக மலேசிய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், சுதந்திரத்துக்கு பின்னர் நாடு திரும்பினார். அவர் ஈரோட்டில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இவருக்கு 7 மகன்-மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு 100 வயதை கடந்து 101 வயதில் வாழ்ந்து கொண்டிருந்த தியாகி துரைராஜ் நேற்று பிற்பகலில் மரணம் அடைந்தார்.

    கடந்த சுதந்திர தினம் அன்று மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் அதிகாரிகள் தியாகி துரைராஜ் வீட்டுக்கு நேரடியாக சென்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தியாகியின் மரண செய்தி கேட்டு, உறவினர்கள், குடும்ப நண்பர்கள் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது இறுதி சடங்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு எல்லைமாரியம்மன் கோவில் அருகே உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் நடக்கிறது.
    கோபி அருகே உள்ள கொடிவேரி அணை 9 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அணையை சுற்றி பார்க்கவும், குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    கோபி:

    கோபி அருகே உள்ள கொடிவேரி அணை ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்களில் பிரசித்து பெற்று திகழ்ந்து வருகிறது.

    இந்த அணைக்கு ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் பஸ், கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் வருவார்கள்.

    அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். மேலும் மக்கள் கொண்டு வரும் உணவு வகைகளை அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த பகுதியில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களை வாங்கி சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதனால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு மூடப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சுற்றுலா தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

    இதையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணை 9 மாதங்களுக்கு பிறகு நாளை (திங்கட் கிழமை) முதல் திறக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் அணையை சுற்றி பார்க்கவும், குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள், மக்கள் மற்றும் அந்த பகுதியில் கடை வைத்து நடத்தி வரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வாலிபர்கள் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குளித்தலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    குளித்தலை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வடிவேல் முருகன் என்பவரது மனைவி காயத்திரி (வயது 26). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி தாய் செல்லம்மாளுடன் திருச்சி அருகேயுள்ள துடையூரில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து வந்த 2 பேர், காயத்திரி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை காயத்திரி விரட்டி சென்றபோது, அவர்கள் இருவரும் லாலாபேட்டை ரெயில்வே சுரங்கப்பாதையில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு அருகில் இருந்த காவிரி ஆற்றில் குதித்து தப்பினர்.

    இதுகுறித்து காயத்திரி அளித்த புகாரின்பேரில், தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு ஆற்றில் குதித்து தப்பி ஓடியவர்கள் குறித்து திருச்சி மாவட்டம் தொட்டியம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் நீந்தி வந்த அவர்கள் இருவரையும் தொட்டியம் போலீசார் பிடித்து, லாலாபேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கச் சங்கிலியை பறித்து சென்றது, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த மொட்டையன் மகன் வடிவேல் (25), தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார் (26) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு குளித்தலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த வடிவேல் மற்றும் அருண்குமாருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தினேஷ்குமார் தீர்ப்புகூறினார்.
    தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து நாய்களை சிறுத்தை கடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம், தலமலை உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் புலி, சிறுத்தை போன்றவை கிராமம் மற்றும் தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை கடித்து கொல்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் தாளவாடி அருகே உள்ள கிராமத்துக்குள் புகுந்து நாய்களை கடித்து கொன்ற சம்பவம் நடந்து உள்ளது.

    தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட பாரதிபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சித்தன் (வயது 48). விவசாயி. இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். மேலும் காவலுக்காக வீட்டில் 2 நாயும் வளர்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் முன்பு நாயை கட்டி வைத்து விட்டு தூங்க சென்றுவிட்டார். நேற்று காலையில் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த நாய்களில் ஒன்றை காணவில்லை. மற்றொரு நாய் கழுத்தில் கடிபட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுகுறித்து தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த நாயை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பதிவான கால் தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் என தெரியவந்தது.

    நள்ளிரவில் சித்தன் வீட்டு பகுதிக்கு வந்த சிறுத்தை ஒன்று 2 நாய்களை கடித்து கொன்றதுடன், அதில் ஒரு நாயை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றதும் தெரியவந்தது.

    கிராமத்துக்குள் புகுந்து நாய்களை சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
    ×