என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கொடுமுடி அருகே காவலாளிகளை மிரட்டி டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற கும்பல்

    கொடுமுடி அருகே காவலாளிகளை மிரட்டி டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூரில் இருந்து சோளசிராமணி செல்லும் வழியில் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைந்துள்ளது. இதன் அருகே ஒதுக்குப்புறமான கரும்பு தோட்டத்துக்குள் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையின் சூப்பர்வைசராக கதிர்வேல், விற்பனையாளராக முகமது ரபிக் ஆகியோர் வேலைப்பார்த்து வருகிறார்கள்.

    நேற்று இரவு 9 மணியளவில் கடையின் சூப்பர் வைசர் கதிர்வேல் வீட்டிற்கு சென்று விட்டார். இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு விற்பனையாளர் முகமது ரபிக் விற்பனை கணக்குகளை சரிபார்த்து கொண்டு இருந்தார்.

    பின்னர் அவரும் இரவு 11.30 மணி அளவில் வீட்டிற்கு சென்று விட்டார். கடையின் முன் பகுதியில் காவலாளிகள் கருப்புசாமி (50), சினனதம்பி (52), ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது 10 பேர் கொண்ட கும்பல் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மதுக்கடைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் காவலாளிகளை மிரட்டி மதுக்கடைக்கு பின்பகுதியில் உள்ள பாருக்கு அழைத்து சென்றனர். காவலாளிகளை சுற்றி 3 பேர் நின்று கொண்டு சத்தம் போட்டால் தீர்த்து கட்டிவிடுவோம் என்று மிரட்டி கொண்டு இருந்தனர்.

    அந்த நேரத்தில் 7 பேர் கும்பல் மதுக்கடையின் சட்டரை கடப்பாரையால் உடைத்து கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கு பணம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்தனர். வசூலான பணத்தை விற்பனையாளர் கொண்டு சென்றதால் அங்கு பணம் ஏதும் இல்லை.

    இதையடுத்து ஏமாற்றம் அடைந்த கும்பல் டாஸ்மாக் கடையில் இருந்த விலை உயர்ந்த மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டு இருந்த 6 சி.சி.டி.வி. கேமிராவையும் கழற்றிசென்று விட்டனர்.

    பின்னர் காவலாளிகள் 2 பேரும் கடையின் சூப்பர் வைசருக்கு தகவல் கொடுத்தனர். அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் மலையம் பாளையம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கடையில் கொள்ளை போன மதுபாட்டில்களின் மதிப்பு குறித்து கடையின் சூப்பர் வைசர் மற்றும் விற்பனையாளர் கணக்கிட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×