என் மலர்
செய்திகள்

மொடக்குறிச்சி அருகே சாமி சிலை உடைப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டம்
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே கனககிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாச்சல குமரன் முருகன் கோவில் உள்ளது.
மலை அடிவாரத்தில் விநாயகர் கோவில் மலைக்கு செல்லும் நடு பகுதியில் ஆதி வெங்கடேச பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு மொடக்குறிச்சி, எழுமாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மலை பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சிலர் வந்தனர். அவர்கள் பெருமாள் கோவில் முன்பு உள்ள கருடாழ்வார் சாமி சிலையை உடைத்தனர். இதில் சாமி சிலையின் தலைப்பகுதி துண்டாகி கீழே விழுந்து கிடந்தது.
மேலும் அந்த மர்ம நபர்கள் கோவில் மலைப்பகுதியில் மது பாட்டில்களை உடைத்து போட்டு விட்டு சென்றனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அங்கு சாமி சிலை உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அரச்சலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சாமி சிலையை உடைத்தவர்களை தேடி வருகிறார்கள்.
இது குறித்த தகவல் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க. வினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் எழுமாத்தூர் பஸ் நிறுத்தம் பகுதிக்கு திரண்டு வந்தனர். பாரதிய ஜனதா ஒன்றிய துணை அமைப்பாளர் கவுரிசங்கர் தலைமையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. சாமி சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உட னடியாக செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சாமி சிலை உடைப்பை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று (திங்கட்கிழமை) எழுமாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், பா.ஜ.க., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.
எழுமாத்தூர் பகுதியில் மளிகை கடைகள், டீக்கடைகள், மெடிக்கல் கடைகள் என ஏராளமான கடைகள் உள்ளன. இதில் 80-க்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், பால் பூத்கள் மட்டும் செயல்பட்டன. மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.






