என் மலர்tooltip icon

    ஈரோடு

    யானை தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவத்தையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் நடைபெற்று வந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, கடம்பூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் மழைக்காலத்துக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. 10 வனச்சரகங்களிலும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 350 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


    விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்கு பகுதியில் வனவர் பொன் கணேஷ் தலைமையில் வனகாவலர் சதீஷ் (வயது 21), வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அவர்களிடம் துப்பாக்கி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டுயானை ஒன்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை திடீரென துரத்த தொடங்கியது. யானையிடமிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள வனஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆளுக்கொரு திசையாக தப்பித்து ஓடினர்.

    இதில் வனவர் பொன்கணேஷை யானை தாக்க தொடங்கியது. அவரை காப்பாற்றுவதற்காக வன காவலர் சதீஷ் சென்றார். அவரை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்து கொன்றது. தொடர்ந்து ஆக்ரோ‌ஷம் அடங்காத யானை தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தைச் சேர்ந்த தன்னார்வலரான முத்துபிரபாகர சேரன் பாண்டியன் (27) என்பவரை துரத்த தொடங்கியது. அவர் உயிருக்கு பயந்து அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறினார்.

    ஆனாலும் அந்த யானை சுமார் ஒரு மணி நேரமாக அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்து அந்த மரத்தை தும்பிக்கையால் இடித்தது. இதில் கீழே விழுந்த முத்துபிரபாகர சேரன் பாண்டியனை யானை கொடூரமாக மிதித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் விளாமுண்டி வனசரகர் சரவணன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த பொன்கணேஷை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யானை தாக்கி உயிரிழந்த வனகாவலர் சதீஷ், தன்னார்வலர் முத்துபிரபாகர சேரன் பாண்டியன் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    கணக்கெடுப்பு பணியில் யானை தாக்கி வனகாவலர் மற்றும் தன்னார்வலர் இறந்ததால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற குழுவினர் அச்சம் அடைந்தனர்.

    இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் நடைபெற்று வந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    2 பேரை கொன்ற யானையை பிடிக்கும் முயற்சியில் சத்தியமங்கலம் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.


    கட்டுமான நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க, வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு தங்கபெருமாள் வீதியில் ஸ்ரீபதி அசோசியேட்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அரசு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், திருமண மண்டபம், மசாலா பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனம், பஸ் போக்குவரத்து போன்ற தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகார் அடிப்படையில் ஈரோடு, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 14-ந் தேதி இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம், கஸ்பா பேட்டையில் உள்ள இயக்குனர்கள் வீடு, முள்ளாம்பரப்பில் உள்ள அலுவலகங்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக நுழைந்து சோதனை ஈடுபட்டனர்.

    இந்த சோதனை நேற்று 4-வது நாளாக நடைபெற்று நிறைவடைந்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.21 கோடி ரொக்க பணம் சிக்கியது. மேலும் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்களும் சிக்கியது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஹார்ட் டிஸ்க்களும் கைப்பற்றப்பட்டன.

    இந்த நிறுவனங்களுடன் வர்த்தக ரீதியாக தொடர்பில் இருந்த நிறுவனங்கள், நபர்களிடமும் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தினர் தங்களது பணத்தை ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளது வருமான வரித்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

    மேலும் ரூ.150 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இது சம்பந்தமாக கட்டுமான நிறுவனத்தின் இயக்குனர்களிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்க வருமான வரித்துறையினர் சம்பந்தப்பட்ட இயக்குனர்களுக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளனர்.
    ஈரோட்டில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. இதில் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    ஈரோடு:

    ‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வந்தனர். 4-வது நாளாக தொடர்ந்த இந்த சோதனை நேற்று பகலில் நிறைவு அடைந்தது. 15 இடங்களில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது.

    இந்த கட்டுமான நிறுவனத்தின் சார்பில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்படுகிறது. மேலும், பஸ் போக்குவரத்து, ரியல் எஸ்டேட், மசாலா நிறுவனம், திருமண மண்டபம் போன்ற தொழில்களும் நடக்கிறது.

    வருமானவரி சோதனையில் கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கணக்கில் வராத ரூ.21 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட பணத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் மற்ற தொழில்கள் விரிவாக்கம் செய்வதற்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோட்டில் 4 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.700 கோடி மதிப்பிலான ஆவணங்களும், ரூ.21 கோடியும் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சுமுகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
    ஈரோடு:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையத்தில் ஏர் கலப்பையுடன் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் ரஜினிகாந்த் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தான் கட்சியைத் தொடங்குவார். ஏன் என்றால் அன்றைக்கு தான் முட்டாள்கள் தினமாகும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் அதிக பாதிப்பு அ.தி.மு.க.வுக்குத்தான் ஏற்படும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் சுமூகமாக பேசி, கணிசமான இடங்களைப் கேட்டுப்பெறுவோம். எல்லோரும் எம்.ஜி.ஆர். ஆக முடியாது. அவருடைய செல்வாக்கே தனியானது. வேல் யாத்திரை நடத்தினாலும், எத்தனை கோடி செலவு செய்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கிருஷ்ணம்பாளையம்ரோட்டில் நேற்று ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்றதாக கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றுவோம் என்று தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் மறைந்த முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைகள் திறப்பு, அ.தி.மு.க. கொடிஏற்று விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். 18 லட்சம் தொண்டர்களுடன் அ.தி.மு.க.வை ஜெயலலிதாவிடம் விட்டுச்சென்றார். அந்த 18 லட்சம் தொண்டர்களை 1½ கோடியாக உயர்த்தியவர் ஜெயலலிதா. வருகிற 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் என்பது ஜெயலலிதாவின் விருப்பத்தை அ.தி.மு.க.வினர் நிறைவேற்றும் சூழலை ஏற்படுத்தி உள்ளது.

    தனக்கு பிறகும் நூற்றாண்டு காலம் அ.தி.மு.க. தமிழக மக்களுக்கு சேவை செய்யும், தனக்கு பிறகும் ஆட்சி நூறாண்டு காலம் நடக்கும் என்று சட்டமன்றத்தில் சபதம் ஏற்றார். அந்த நல்ல சபதத்தை நாம் நினைவு கூரவேண்டும்.

    சட்டமன்றத்தில் தனது எதிர் திசையில் உட்கார்ந்து இருந்த மு.க.ஸ்டாலினை பார்த்து, ஜெயலலிதா ஒற்றை விரல் காட்டி, நான் அமர்ந்து இருக்கும் இந்த நாற்காலியிலே எனக்கு பிறகும் உங்களை அமர விடமாட்டேன் என்று சபதம் செய்தார். அந்த சபதத்தை நினைவுகூர்ந்து அவரது சபதத்தை நிறைவேற்றுவோம். கழகமே உயிர் மூச்சு, வெற்றியே நமது ஜீவநாடி என்று உழைப்போம், வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசினார்.
    சென்னிமலை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபரை அடித்துக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). இவர் சொந்தமாக ரிக் வண்டி வைத்துள்ளார். இவரிடம் சத்தீஸ்கர் மாநிலம், ராய்ஹர் மாவட்டம், சோரங்கா பகுதியை சேர்ந்த சுமன் (வயது 18), சுசில் ராஜக் (27), முன்னாராம் (35) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்த சேசுராஜ் (வயது 34) ஆகியோர் வேலைபார்த்து வந்தனர். இவர்கள் 4 பேரும் ஈங்கூர் அருகே உள்ள மோளக்காடு தோட்டத்து வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர்.

    இந்த நிலையில் 4 பேரும் வேலை முடிந்து வழக்கம்போல் நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மோளக்காடு தோட்டத்து வீட்டுக்கு வந்தனர். அப்போது சுசில் ராஜக், முன்னாராம் மற்றும் சேசுராஜ் ஆகியோர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் சுமனிடம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர்கள் 3 பேரும் சுமனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அங்கு தோட்டத்துக்கு வந்த ரமேஷ் இதை பார்த்துள்ளார். உடனே தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த சுசில் ராஜக், முன்னாராம், சேசுராஜ் ஆகிய 3 பேரையும் சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இரவு 8.15 மணி அளவில் சுசில் ராஜக், முன்னாராம் மற்றும் சேசுராஜ் ஆகியோர் மீண்டும் சுமனிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் அங்கிருந்த ஒரு குழாயை எடுத்து சுமனின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதனால் அவர் அலறியபடி கீழே சாய்ந்தார். அதன்பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அப்போது ரிக் வண்டி மேலாளர் பரணி என்பவர் அங்கு வந்துள்ளார். பின்னர் மயங்கிக் கிடந்த சுமனை மீட்டு சிகிச்சைக்காக ஒரு வாகனம் மூலம் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சுமன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ரிக் வண்டி உரிமையாளர் ரமேஷ் சென்னிமலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து சுமனை கொலை செய்ததாக சுசில் ராஜக், முன்னாராம், சேசுராஜ் ஆகியோரை கைது செய்தார்.

    மதுபோதை தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈங்கூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விளையாட்டில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஈரோடு:

    ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஜெயலலிதா வழியில் நடைபெறும் இந்த அரசு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது.

    விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு இந்த அரசு ஊக்கத்தொகை அளித்து வருகிறது. விளையாட்டுத்துறை மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெற 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்தார்.

    விளையாட்டில் மாணவ-மாணவிகளை சிறுவயதிலிருந்தே ஊக்கம் அளிக்கும் வகையில் ரூ.67 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து கிராம ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    தமிழகத்தை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேவைப்படும் பட்சத்தில் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம்.

    பாடத்திட்டங்கள் குறைப்பதை பொறுத்தவரை 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 50 சதவீதமும், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 35 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள் உடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவு அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
    ஈரோடு:

    கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் மூடப்பட்டன. இதுவரையில் திறக்கப்படவில்லை. இதனால் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

    தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பதாவது:

    * அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

    * பாடத்திட்டங்கள் 9ம் வகுப்பு வரை 50 சதவீதம், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.

    * தனியார் பள்ளிகள் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    ஈரோட்டில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் இருந்து ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    ‘ஸ்ரீபதி அசோசியேட்ஸ்’ என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் ஈரோடு காளைமாட்டுசிலை அருகில் தங்கபெருமாள் வீதியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். கோவை, ஈரோடு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டார்கள்.

    மேலும், சோதனை நடத்தப்படும் நிறுவனத்துக்கு சொந்தமாக பஸ் போக்குவரத்து, மசாலா பொருட்கள் உற்பத்தி நிறுவனம், கல்குவாரி, கட்டுமான பொருட்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களும் நடத்தப்படுகிறது. எனவே ஈரோடு, கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு போன்ற பகுதிகளில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளரின் வீடு உள்பட 15 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனை விடிய விடிய நடத்தப்பட்டு உள்ளது. நேற்று 2-வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனை நடத்தப்படும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனையின்போது அனைத்து கோப்புகளையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.

    அப்போது கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சோதனையில் சுமார் ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து உரிமையாளர்கள், பணியாளர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கி கிராம நிர்வாக அதிகாரிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சிவமூர்த்தி (வயது 50). இவர் பட்டா பெயர் மாறுதலுக்காக நல்லாம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு விண்ணப்பிக்க சென்றார். அப்போது கிராம நிர்வாக அதிகாரியாக இருந்த அரச்சாலகுமார் (36) பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்டு உள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவமூர்த்தி ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்பேரில், ரசாயனப்பொடி தடவிய ரூபாய் நோட்டுகளுடன் சிவமூர்த்தி கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந் தேதி கிராம நிர்வாக அதிகாரியை சந்திக்க சென்றார். அவரிடம் ரூ.2 ஆயிரத்து 900 லஞ்சமாக சிவமூர்த்தி கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அரச்சாலகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    கைதான அரச்சாலகுமார் மீது ஈரோடு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கே.ஆர்.ஜோதி நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில் அவர், லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக அரச்சாலகுமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    அரச்சாலகுமார் அரசு ஊழியராக பணியாற்றி வருவதால், அவரை பணிநீக்கம் செய்வது தொடர்பாக ஈரோடு மாவட்ட கலெக்டருக்கு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பரிந்துரை செய்ய உள்ளனர்.
    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது.
    ஈரோடு:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், ஈரோடு மாவட்ட பொதுவினியோக திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டது.

    இதில் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டிற்கு வந்தது. இந்த ரெயிலில் உள்ள நெல் மூட்டைகள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலமாக நேற்று நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
    ×