என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    அருந்ததியர் இளைஞர் பேரவை மாநில அமைப்பாளர் என்.ஆர்.வடிவேலு தலைமையில், அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைப்பதற்காக நேற்று திரண்டு வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் சமாதானப்படுத்தியதை தொடர்ந்து ரேஷன் கார்டுகளை ஒப்படைக்காமல் தாங்கள் கொண்டுவந்த கோரிக்கை மனுவை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

    நாங்கள் குள்ளரங்கம்பாளையம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 60 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அனைவரும் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களில் 40 குடும்பத்தினருக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்றுவரை மீதமுள்ள 20 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. இட நெருக்கடி காரணமாக காலியாக உள்ள இடத்தில் ஓட்டு வீடு மற்றும் ஓலைக்குடிசை அமைத்து குடியிருந்து வருகிறோம். நாங்கள் பலமுறை வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டையை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்து உள்ளோம்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த மனுவில், 'நான் தொழில் நிமித்தமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் திங்களூர் அருகே உள்ள காசுக்காரன்பாளையம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தேன்.

    அப்போது எங்கள் வீட்டின் அருகில் வசித்து வந்த பெண் ஒருவர் என்னிடம் கடனாக ரூ.15 லட்சம் கேட்டார். அப்போது என்னிடம் பணம் இல்லாததால் எனக்கு தெரிந்த ஒருவரிடம் ரூ.12 லட்சம் வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுத்தேன். 4 மாதங்களில் திருப்பி தருவதாக கூறி கடன் பெற்ற அந்த பெண் 2 ஆண்டுகள் ஆகியும் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து வருகிறார்.

    எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தரவேண்டும்' என்று கூறி இருந்தார்.
    ஈரோட்டில், சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மகளிர் அணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கியாஸ் சிலிண்டர்களுடன் வந்து கோஷம் எழுப்பினார்கள்.
    ஈரோடு:

    நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வினை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மகளிர் அணியினர் மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு தெற்கு மாவட்டம் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று பிற்பகலில் நடந்தது. தி.மு.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சமையல் கியாஸ் சிலிண்டர்களுடன் வந்து கோஷங்கள் எழுப்பினார்கள். சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்று காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசும்போது கூறியதாவது:-

    மத்திய அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்து மக்களுக்கு துன்பம் தரும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தேர்தலுக்கு முன்பு, விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்றெல்லாம் கூறினார்கள்.

    நாம் இன்று கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் செய்கிறோம். மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், கியாஸ் விலை உயர்ந்தால் என்ன?. அதை வாங்க முடியாதவர்கள் விறகு அடுப்பில் சமைத்து பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.

    மோடி அரசாங்கம் அத்தியாவசிய பொருள் பட்டியலில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை எடுத்து விட்டதால் பதுக்கல் அதிகரிக்கும். விறகு அடுப்பில் சமைக்க பழகிக்கொண்டாலும் சமைக்க அரிசி பருப்பு இருக்காது. சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கும் மத்திய அரசுக்கு தமிழக அ.தி.மு.க. அரசு ஆதரவாக இருக்கிறது. அந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்ற தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் இளமதி வரவேற்று பேசினார். மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தன், கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் குமார் முருகேஷ், துணை செயலாளர்கள் ஆ.செந்தில்குமார், செல்லப்பொன்னி மனோகரன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், இளைஞர் அணி அமைப்பாளர் கே.இ.பிரகாஷ், பகுதி செயலாளர்கள் பொ.ராமசந்திரன், அக்னி சந்துரு, வி.சி.நடராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் மதன்மோகன், பொன்பூபதி, மகளிர் தொண்டர் அணி மாநகர பொறுப்பாளர் திலகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    ஈரோடு அருகே முதல் மனைவிக்கு மிரட்டல் விடுத்ததாக கிராம நிர்வாக அதிகாரி உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 38). இவர் சூரம்பட்டிவலசு கிராம நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

    இவருக்கும், திருப்பூர் தாராபுரம்ரோடு பி.கே.ஆர்.காலனியை சேர்ந்த ஜமுனாதேவிக்கும் (31) கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    கடந்த 2018-ம் ஆண்டு ஈரோடு ஆசிரியர்காலனியை சேர்ந்த ஜான்சி (26) என்பவரை கார்த்திகேயன் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜமுனாதேவி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில், விவாகரத்து பெற சொல்லி தன்னை கணவர் வற்புறுத்துவதாகவும், அவர்களது குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாகவும் கூறி இருந்தார்.

    இதைத்தொடர்ந்து ஜமுனாதேவியின் கணவர் கார்த்திகேயன், மாமனார் சுப்பிரமணி (60), மாமியார் தங்கமணி (50), 2-வது மனைவி ஜான்சி (26), அவரது தாய் ராஜாத்தி மேரி (45) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.









    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் தலமான மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள், பிரம்மா கோவில் உள்ளது. கரூர் மாவட்டம் தென்னிலை அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகனான பிளஸ்-2 படிக்கும் மாணவர் கேசவதிதன் (வயது 17), செல்லமுத்து என்பவரின் மகன் ராஜ்குமார் (30) உள்பட 12 பேர் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு வந்தனர்.

    அவர்கள் அங்குள்ள மணல்மேடு பகுதிக்கு சென்று குளிப்பதற்காக ஆற்றில் இறங்கி உள்ளனர். அப்போது கேசவதிதன் திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்டதும் அவரை காப்பாற்ற தண்ணீரில் ராஜ்குமார் குதித்து உள்ளார். இதில் 2 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

    தகவல் அறிந்ததும் கொடுமுடி நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர். திருவிழாவுக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு மாவட்டத்தில் நூல் விலை உயர்வை கண்டித்து 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசின் இலவச, வேட்டி சேலைகள் பல்வேறு கூட்டுறவு சொசைட்டி மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் 40 சதவீத இலவச வேட்டி, சேலைகள் ஈரோட்டில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் ரயான் துணி நூலின் விலை உயர்ந்துள்ளது. இதனால் ராயன் துணிகளை உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை தினமும் 24 லட்சம் மீட்டர் ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த பணியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். நூல் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டம் காரணமாக இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று விசைத்தறிகளில் ரயான் துணி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் அசோகபுரம் காளிங்கராயன் பாளையம் போன்ற பகுதியில் உள்ள விசைத்தறிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

    இதுகுறித்து ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ராயன் துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக ராயன் துணிகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நூல் விலை அதிகரித்துள்ளது.

    இங்கு 120 கிராம் 150 கிராம் நூல் அதிகமாக பயன்படுத்த வருகிறோம். தீபாவளியின்போது இந்நூல் ஒரு கோன் ரூ.150-க்கு வாங்கினோம். இதன் மூலம் ஒரு மீட்டர் துணி ரூ.20-க்கு விற்பனை செய்தோம்.

    தற்போது நூல் விலை ரூ.176 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் ஒரு மீட்டர் துணி விலை ரூ.22 என்ற நிலையிலேயே உள்ளது. நூல் அடக்க விலைக்கூட துணி விலை போகாததால் உற்பத்தியாளர்கள் கடும் நடத்தை சந்தித்து உள்ளனர்.எனவே இன்று முதல் வரும் 27-ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்தி உள்ளோம். இதனால் 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்படும். இதன் மூலம் ரூ.40 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும். எனவே நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பெருந்துறையில் நள்ளிரவில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நக்களப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி என்கிற முத்துப்பாண்டி வயது(30). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    முத்துப்பாண்டியின் மனைவி சூர்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவரது குழந்தைகள் உறவினர் வீட்டில் வளர்ந்து வருகின்றனர்.

    முத்துப்பாண்டி தனது தாயாருடன் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள துடுப்பதி ஸ்லேடர்நகர் என்ற பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து சிமெண்ட் ஷீட் பொருத்தும் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் துடுப்பதி செல்லும் சாலையில் சானடோரியம் அருகில் முத்துப்பாண்டி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மது குடிக்கும் தகராறில் அவருடன் வேலை பார்க்கும் சிலர் அவரை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதையடுத்து முத்துப்பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகள் குறித்தும், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக தான் ஆட்சியை பிடிக்கும் என்று கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கடத்தூர்:

    கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார்.

    பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியாவில் முதன் முதலாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா தான். தமிழக முதல்- அமைச்சர் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். இதைப்பார்த்து எதிர்கட்சிகள் வியந்து போய் உள்ளன. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் அரிசி அட்டையாக மாற்ற 21-ந் தேதி (அதாவது இன்று) கடைசி நாள் ஆகும். எனவே சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் பொங்கல் பரிசுகள் கிடைக்கும். தமிழகம் அமைதியாகவும், மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும் திகழ்கிறது.

    இங்கு தொழில் தொடங்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால், முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இன்னும் 6 மாத காலத்தில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கிராமங்கள் தோறும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை உருவாக்கி இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும். மீண்டும் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்பார்’ என்றார்.

    இதில் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிசந்திரன், மாவட்ட ஆவின் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெருந்துறை அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் கோபி. அவருடைய மகன் செல்வராஜ் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவர் தற்போது கோவையில் தங்கி வேலை செய்து வந்தார். செல்வராஜ் தனது உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக, கடந்த 17-ந் தேதி இரவு, மோட்டார் சைக்கிளில் கோவையில் இருந்து ஊத்தங்கரைக்கு சென்று கொண்டிருந்தார். 

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலை, ஓலப்பாளையம் பிரிவு அருகே அவர் சென்றபோது மோட்டார்சைக்கிளும், அந்த வழியாக வந்த ஒரு வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. 

    இந்த விபத்தில் செல்வராஜ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். விபத்து நடந்ததும் வாகனம் நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. 

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்வராஜை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி செல்வராஜ் நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு் நிற்காமல் சென்ற வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    அந்தியூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி மாக்கள் புதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் இறந்துவிட்டார். அவருடைய மனைவி சம்பூரணம் (வயது 52). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சம்பூரணம் கடந்த 13-ந் தேதி விஷத்தை குடித்துவிட்டு் வீட்டில் மயங்கி கிடந்தார்.


    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சம்பூரணத்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை சம்பூரணம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோட்டில் ஓடும் பஸ்சில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை சக பயணிகள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    ஈரோடு:

    சென்னை பெரம்பூர் பழனியாண்டவர் வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). இவர் சொந்த வேலை காரணமாக ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வெங்கடேஷ் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார். இந்த பஸ் அகில் மேடு வீதி பகுதியில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வெங்கடேசின் மேல் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். 

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், “திருடன் திருடன்” என கூச்சலிட்டார். உடனே சக பயணிகள் துரத்திச் சென்று அவரை மடக்கிப்பிடித்து ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி பகுதியைச் சேர்ந்த ஷேக் முகமது (30) என்பது தெரியவந்தது. 

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சேக் முகமதுவை கைது செய்தனர்.
    பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் மாலை வேளையில் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து குளித்து விட்டு செல்கின்றன.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் பவானி சாகர் வனச்சரகத்தில் உள்ள யானைகள் தினமும் பவானிசாகர் அணையின் ஜீரோ பாயிண்ட் என்ற இடத்தில் மாலை வேளையில் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து குளித்து விட்டு செல்கின்றன.

    நவம்பர், டிசம்பர், ஜனவரி இந்த மூன்று மாதம் யானைகளின் இனப்பெருக்க மாதம் என்பதால் முதுமலை, கர்நாடகா, ஓசூர் ஆகிய வனப் பகுதிகளில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் இடம்பெயர்ந்து தெங்குமரஹாடா மற்றும் பவானிசாகர் வனப்பகுதிக்கு வந்து சேரும்.

    இதனால் இந்த 3 மாதங்களில் யானைகள் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படும். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கின்றன. எனவே யானைகள் அருகே யாரும் செல்ல வேண்டாம், ஒற்றை யானையிடம் மிகவும் கவனமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    கடந்த 2018-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கணினி பழுது காரணமாக செல்போன் மூலமாக அந்த தேர்வு அறையில் இருந்தவர்கள் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.

    இதனால் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என்று கூறியது.

    அதைத்தொடர்ந்து தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர்.

    அப்போது முதலமைச்சரிடம் கலந்து ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

    இந்நிலையில் இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கோபியில் மீண்டும் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தனர்.

    அப்போது ஓரிரு நாளில் முதல்-அமைச்சரிடம் கலந்து பணி நியமன ஆணை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியதை தொடர்ந்து ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
    ×