என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    யானை தாக்கி 2 வாலிபர்கள் பலி - சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு ரத்து

    யானை தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவத்தையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் நடைபெற்று வந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, கடம்பூர் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள், யானைகள், கரடிகள், காட்டெருமை, மான்கள் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் மழைக்காலத்துக்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது. 10 வனச்சரகங்களிலும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என மொத்தம் 350 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


    விளாமுண்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கல்லம்பாளையம் வனப்பகுதியில் மாயாற்றுக்கு தெற்கு பகுதியில் வனவர் பொன் கணேஷ் தலைமையில் வனகாவலர் சதீஷ் (வயது 21), வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அவர்களிடம் துப்பாக்கி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டுயானை ஒன்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்களை திடீரென துரத்த தொடங்கியது. யானையிடமிருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள வனஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆளுக்கொரு திசையாக தப்பித்து ஓடினர்.

    இதில் வனவர் பொன்கணேஷை யானை தாக்க தொடங்கியது. அவரை காப்பாற்றுவதற்காக வன காவலர் சதீஷ் சென்றார். அவரை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்து கொன்றது. தொடர்ந்து ஆக்ரோ‌ஷம் அடங்காத யானை தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளத்தைச் சேர்ந்த தன்னார்வலரான முத்துபிரபாகர சேரன் பாண்டியன் (27) என்பவரை துரத்த தொடங்கியது. அவர் உயிருக்கு பயந்து அருகில் உள்ள ஒரு மரத்தின் மீது ஏறினார்.

    ஆனாலும் அந்த யானை சுமார் ஒரு மணி நேரமாக அந்த மரத்தை சுற்றி சுற்றி வந்து அந்த மரத்தை தும்பிக்கையால் இடித்தது. இதில் கீழே விழுந்த முத்துபிரபாகர சேரன் பாண்டியனை யானை கொடூரமாக மிதித்து கொன்றது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் விளாமுண்டி வனசரகர் சரவணன் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த பொன்கணேஷை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யானை தாக்கி உயிரிழந்த வனகாவலர் சதீஷ், தன்னார்வலர் முத்துபிரபாகர சேரன் பாண்டியன் ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று காலை இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வனத்துறை அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    கணக்கெடுப்பு பணியில் யானை தாக்கி வனகாவலர் மற்றும் தன்னார்வலர் இறந்ததால் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற குழுவினர் அச்சம் அடைந்தனர்.

    இதையடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச்சரகங்களில் நடைபெற்று வந்த வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    2 பேரை கொன்ற யானையை பிடிக்கும் முயற்சியில் சத்தியமங்கலம் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.


    Next Story
    ×