என் மலர்tooltip icon

    ஈரோடு

    அத்தாணியில் ஆம்னி வேன் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை பகுதியை சேர்ந்தவர் ராசன் (42), கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (48). இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்கள்.

    நேற்று இரவு ராசன் தனது மோட்டார் சைக்கிளில் செல்வனுடன் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்தார்.

    இரவு 9.30மணி அளவில் அவர்கள் அத்தாணி கம்மங்காடு குடிநீர் வடிகால் வாரியம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே அத்தாணியில் இருந்து அந்தியூர் நோக்கி சின்னதம்பி பாளையம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் ஆம்னி வேன் ஓட்டி வந்தார்.

    அப்போது திடீரென ஆம்னி வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    விபத்தில் ராசன், செல்வன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் இந்த விபத்தில் ஆம்னி வேன் டிரைவர் ராஜேந்திரனும் காயமடைந்தார். அவரும் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புளியம்பட்டி அருகே நூற்பாலையில் பணியாற்றிய 17 வயது சிறுமியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பு.புளியம்பட்டி:

    கடலூர் மாவட்டம் நடுவீரன் பட்டி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஸ்வா (20 வயது). அதே பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர்கள் 2 பேரும் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் தொழிலாளர்களாக கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் 2 பேரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இடையே பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனர்.

    பொங்கல் விடுமுறையையொட்டி அவர்கள் 2பேரும் ஊருக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு செல்ல வில்லை. அவர்களை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை.

    இது குறித்து சிறுமியின் தந்தைபு. புளியம்பட்டி போலீசில் தனது மகள் மாயமாகி விட்டார். விஸ்வா என்பவர் கடத்தி சென்று இருக்கலாம் எனவும், அவரை கண்டு பிடித்து தருமாறு தெரிவித்திருந்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தேடி வந்தனர்.

    இதையடுத்து அவர்கள் 2 பேரும் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் சென்று அந்த சிறுமியை மீட்டனர். மேலும் அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    வாலிபர் விஸ்வா ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். பின்னர் கோபி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி, அட்டவணை வெளியிடப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிப்ரவரி 6-ந் தேதி கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான மறு ஆலோசனைக் கூட்டம் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.

    தற்போது 10, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு 92 சதவீதம் மாணவர்கள் வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கூடத்துக்கு அழைக்கப்படுவார்கள்.

    வாரத்தில் 6 நாட்கள் பள்ளிக்கூடங்கள் நடைபெறும். ஞாயிறு, மற்றும் அரசு விடுமுறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் பள்ளிக்கூடங்கள் செயல்படும். மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி தினமும் பள்ளிக்கூடம் முடிந்தவுடன் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதி, அதற்கான அட்டவணை வெளியிடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி: 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் நடத்த முடியாது என கல்வியாளர்கள் கூறி வருகிறார்கள். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’.

    பதில்: ‘இந்த பாடத்திட்டங்களை படித்தால் தான் மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வையும் சுலபமாக சந்திக்க முடியும்’ என்றார்.

    மற்ற வகுப்பு மாணவர்களுக்கு...

    கேள்வி: மேலும் மற்ற வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படுமா? அல்லது அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்களா?.

    பதில்: ‘பொறுத்திருந்து பாருங்கள்’.

    முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்புத்துறை அதிகாரிகள் லதா, மகேஸ்வரி, கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்துரவிச்சந்திரன், மாவட்ட பால் வள தலைவர் காளியப்பன், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நகரச் செயலாளர் காளியப்பன், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துரமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அம்மாபேட்டை அருகே கொரோனாவுக்கு முதியவர் பலியானார். மேலும் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 30-க் கும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் புதிதாக மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 14 ஆயிரத்து 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

    இதற்கிடையில் அம்மாபேட்டை அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 17-ந்தேதி சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அன்றே முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதுவரை மொத்தம் 13 ஆயிரத்து 829 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். மாவட்டத்தில் தற்போது தொற்று உள்ள 140 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    பள்ளிக்கூடம் திறப்பால் அச்சம் அடைந்து ஈரோட்டை சேர்ந்த பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஈரோடு:

    ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஆர்.எஸ்.தம்பி. இவர் முன்னாள் ஆவின் தலைவர். மேலும் இவர் நிதிநிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய மகன் சக்தி தருண் (வயது 17) . இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    ஆர்.எஸ்.தம்பி மற்றும் அவருடைய மனைவி இருவரும் நேற்று முன்தினம் காலை ஒரு வழக்கு விசாரணைக்காக ஈரோடு கோர்ட்டுக்கு சென்று விட்டனர். சக்தி தருண் மட்டும் ஆன்லைன் வகுப்பிற்காக வீட்டிலேயே இருந்துள்ளார். கோர்ட்டுக்கு சென்ற கணவன், மனைவி இருவரும் மதியம் வீடு திரும்பினார்கள்.

    அப்போது வீட்டின் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் சக்தி தருண் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்.எஸ்.தம்பி வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது சக்தி தருண் மின்விசிறியின் கொக்கியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கியபடி இருந்தது தெரியவந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று, மகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்தி தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சக்தி தருண் தூக்குப்போடுவதற்கு முன்பாக தனது தாய், தந்தையின் முகத்தை கடைசியாக பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதனால் அவர் தனது தந்தையை வீடியோ காலில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் தான் கோர்ட்டில் உள்ளதால் பேசமுடியாது என்றும், வெளியில் வந்ததும் பேசுகிறேன் என்றும் கூறி உள்ளார். இதன் பின்னர் தான் சக்தி தருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை நினைத்து பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    இது தொடர்பாக ஆர்.எஸ்.தம்பி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், ‘தனது மகன் என்னிடம் ஆன்லைன் வகுப்பு சரிவர புரியவில்லை எனவும், மன உளைச்சலாக உள்ளது எனவும் சில தினங்களாக கூறி வந்தான். மேலும், பள்ளிக்கூடங்கள் திறக்கும் அறிவிப்பினை கேட்டதில் இருந்து புலம்பி வந்ததாகவும், அந்த அச்சம் காரணமாக தனது மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்து உள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு அருகே ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், தொட்டிபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் வாலிபர் மற்றும் இளம்பெண் ரெயில் மோதி உடல் சிதறி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்தவர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி இச்சிப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவருடைய மகன் யுவராஜ் (வயது 29) , இச்சிபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சதாசிவம் என்பவருடைய மகள் பூர்ணிமா (26) ஆகியோர் என்பதும், இருவரும் காதல் ஜோடி என்பதும் தெரிய வந்தது.

    யுவராஜ் தனியார் நிதி நிறுவனத்திலும், பூர்ணிமா ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் தொழில்நுட்ப பிரிவில் ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் ஒன்றுசேர முடியாத காதல் ஜோடி மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பூர்ணிமா வீட்டை விட்டு வெளியேறி காதலன் யுவராஜை சந்தித்துள்ளார். பின்னர் 2 பேரும் ஸ்கூட்டரில் தொட்டிபாளையம் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
    தந்தை இறந்த துக்கம் தாங்காமல் வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி அண்ணா வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. இவருடைய மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 20). உடல் நலக்குறைவால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பாலசுப்பிரமணி இறந்துவிட்டார். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் கோகுலகிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுலகிருஷ்ணன் தூக்குப்போட்டு கொண்டார்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கோகுலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    டி.என்.பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் போலீசார் வாணிப்புத்தூரை அடுத்த மோதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வட்டமாக அமர்ந்தபடி பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் (32), திம்மையன் (51), பாக்யராஜ் (45), கண்ணன் (55), சின்னச்சாமி (65), கிட்டான் (75) ஆகியோர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட் டது.
    திங்களூர் அருகே வேனும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி விரிவுரையாளர் பரிதாபமாக இறந்தார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த திங்களூர் அருகே உள்ள சம்பளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் தென்னரசு (வயது33). இவர் சீனாபுரம் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். மேலும் விவசாயமும் செய்து வந்தார். இந்த நிலையில் தென்னரசு தான் வளர்க்கும் கால்நடைகளுக்கு திங்களூரில் தீவனம் வாங்கினார். மோட்டார்சைக்கிளின் பின்புறம் அதை வைத்துக்கொண்டு நேற்று முன்தினம் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

    இரவு 8 மணி அளவில் போலநாயக்கன்பாளையம் பிரிவு அருகே சென்றபோது மோட்டார்சைக்கிளும், எதிரே வந்த ஆம்னி வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் இருந்து தென்னரசு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தென்னரசு நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். மேலும் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி அதை ஓட்டி வந்த திங்களூரை சேர்ந்த பழ வியாபாரியான ஜெயபிரகாஷ் (34) என்பவரும் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திங்களூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தென்னரசு உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஜெயப்பிரகாஷ் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த தென்னரசுக்கு சுதா (32) என்ற மனைவி உள்ளார். பட்டதாரியான இவர், சீனாபுரத்தில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சச்சின் (8) என்கிற ஒரு மகன் உள்ளான். தென்னரசுவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    கடனை திருப்பி தருவதாக கூறி அழைத்து பெங்களூரு மளிகை கடைக்காரரை தாக்கிய 4 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
    பெருந்துறை:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு அய்யப்பா நகரைச் சேர்ந்தவர் நரேஷ் குமார். இவருடைய மகன் சூரஜ் குமார் (வயது 24). இவருக்கு பெங்களூர் கிருஷ்ணராஜபுரத்தில் 3 மளிகை கடைகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹரிபுல் ஹாஜி (26) என்பவர், நட்பின் அடிப்படையில் பெங்களூரில் வைத்து சூரஜ்குமாரிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை கடனாக வாங்கினார். பின்னர் அவர் தான் வாங்கிய கடனை கொடுக்காமல் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்துக்கு வந்துவிட்டார்.

    இந்த நிலையில் ஹரிபுல் ஹாஜியை ெசல்போனில் தொடர்பு கொண்ட சூரஜ்குமார் தான் கொடுத்த ரூ.25 ஆயிரம் கடனை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் பெருந்துறை வந்து கடனை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 15-ந் தேதி பெருந்துறைக்கு சூரஜ்குமார் வந்து ஹரிபுல் ஹாஜியை சந்தித்து உள்ளார். ஆனால் பணத்தை கொடுக்காமல் ஹரிபுல் ஹாஜி மற்றும் அவருடைய நண்பர்களான மேற்குவங்காளத்தை சேர்ந்த பாபு மொண்டல் (23), சபிக்காயல் (29), பெருந்துறை தோப்புபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (37) ஆகியோர் சேர்ந்து சூரஜ்குமாரை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஹரிபுல் ஹாஜி, பாபு மொண்டல், சபிக்காயல், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    ஈரோடு:

    கொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே பள்ளிக்கூடங்களில் தூய்மைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.

    முதல் கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    குறிப்பாக பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ-மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் நேரடியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா (கோவிட்-19 )குறித்து சமுதாயத்தில் நிலவும் உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான கருத்துகள் குறித்த அச்சங்களை நீக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் பேசி உண்மையை உணர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பின்றி இருக்க மாணவ-மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக விலகல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த சுவரொட்டிகளை ஆசிரிய- ஆசிரியர்கள் உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.

    உள்ளூர் சூழ்நிலைகளை பொறுத்து மாணவர்கள் வருகை என்பது கட்டாயமாக்கப்படக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    பள்ளிக்கூடம் திறப்பை முன்னிட்டு ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் பயன்படுத்தும் பெஞ்ச், டெஸ்க் ஆகியவை புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் வரும்போது அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்ய கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் இருப்பதாக மாணவிகள் உணர்ந்தால், உடனடியாக பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.

    இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்புகள் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ-மாணவிகளை வரவேற்க தயார் படுத்தப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து விடுதியில் தங்கி இருந்து படிக்கும் மாணவ-மாணவிகள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்கிற சான்றுடன் வரவேண்டும். பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட சான்றாக இது இருக்க வேண்டும் என்று சில தனியார் பள்ளிக்கூடங்கள் அறிவுறுத்தி உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை இத்தகைய எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் 10 மாதங்களுக்கு பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. நோய்த்தொற்று எதுவும் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் முறையாக நடக்க வேண்டும். இது மாணவ-மாணவிகளின் எதிர்காலத்துக்கான வகுப்புகளாக இருப்பதால் இறைவன் கருணை காட்ட வேண்டும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை கடந்த ஆண்டு போல முழு தேர்ச்சி அறிவிக்கலாம் என்றும், எந்த முடிவாக இருந்தாலும் அதனை விரைவாக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் கேட்டபோது ஒருவர் தெரிவித்தார்.

    அந்தியூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். அவருடைய மகன் பிரகாஷ் (வயது 23). இவர் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி பிரகாஷ் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி சிறுவர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜேசுராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் இறங்கி தண்ணீரில் பிரகாசின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கிணற்றில் இருந்த தண்ணீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றி பிரகாஷ் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ×