search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு பள்ளி மாணவிகள்
    X
    அரசு பள்ளி மாணவிகள்

    நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு- ஏற்பாடுகள் தீவிரம்

    ஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    ஈரோடு:

    கொரோனா பாதிப்பு ஊரடங்குக்கு பின்னர் தமிழ்நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதலே பள்ளிக்கூடங்களில் தூய்மைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.

    முதல் கட்டமாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிக்கூடம் திறக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    குறிப்பாக பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ-மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் நேரடியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா (கோவிட்-19 )குறித்து சமுதாயத்தில் நிலவும் உண்மைக்கு புறம்பான மற்றும் தவறான கருத்துகள் குறித்த அச்சங்களை நீக்கும் வகையில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளிடம் பேசி உண்மையை உணர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பின்றி இருக்க மாணவ-மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக விலகல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த சுவரொட்டிகளை ஆசிரிய- ஆசிரியர்கள் உருவாக்கி பயன்படுத்த வேண்டும்.

    உள்ளூர் சூழ்நிலைகளை பொறுத்து மாணவர்கள் வருகை என்பது கட்டாயமாக்கப்படக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    பள்ளிக்கூடம் திறப்பை முன்னிட்டு ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டு உள்ளது. மாணவிகள் பயன்படுத்தும் பெஞ்ச், டெஸ்க் ஆகியவை புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பள்ளிக்கூடத்துக்கு மாணவ-மாணவிகள் வரும்போது அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்ய கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. காய்ச்சல் இருப்பதாக மாணவிகள் உணர்ந்தால், உடனடியாக பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் ஆசிரியைகள் இந்த பணிகளை செய்து வருகிறார்கள்.

    இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம்வகுப்புகள் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் மாணவ-மாணவிகளை வரவேற்க தயார் படுத்தப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் இருந்து விடுதியில் தங்கி இருந்து படிக்கும் மாணவ-மாணவிகள் கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்கிற சான்றுடன் வரவேண்டும். பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு பெறப்பட்ட சான்றாக இது இருக்க வேண்டும் என்று சில தனியார் பள்ளிக்கூடங்கள் அறிவுறுத்தி உள்ளன. அரசு பள்ளிக்கூடங்களை பொறுத்தவரை இத்தகைய எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் 10 மாதங்களுக்கு பின்னர் நாளை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகிறது. நோய்த்தொற்று எதுவும் இல்லாமல் பள்ளிக்கூடங்கள் முறையாக நடக்க வேண்டும். இது மாணவ-மாணவிகளின் எதிர்காலத்துக்கான வகுப்புகளாக இருப்பதால் இறைவன் கருணை காட்ட வேண்டும் என்றும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளை கடந்த ஆண்டு போல முழு தேர்ச்சி அறிவிக்கலாம் என்றும், எந்த முடிவாக இருந்தாலும் அதனை விரைவாக அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தரப்பில் கேட்டபோது ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×