என் மலர்
ஈரோடு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பழிக்குப்பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன.
இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். இதேபோல் கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
இதையடுத்து குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் குற்ற சம்பவம் தடுக்கும் வகையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை இன்றும் நடந்து வருகிறது.
பவானி அருகே உள்ள சித்தோடு, செங்குந்தபுரம் கிழக்குவீதியை சேர்ந்தவர் அய்யாசாமி. இவரது மகள் தாரணி (14). சித்தோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் தாரணி நேற்று இரவு 7.30 மணியளவில் தனது வீட்டில் இருந்து பக்கத்து வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டுக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக தாரணி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தாரணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தியாகராஜன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கடை எண் 3601-ல் விற்பனையாளராக பணியாற்றி வந்த எம்.அர்ச்சுனன் மதுபானங்களை அடக்க விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். மேலும், நுகர்வோரிடம் அலட்சியமாக பேசி உள்ளார். இதனால் விற்பனையாளர் அர்ச்சுனன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விலை பட்டியலை நுகர்வோர் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுவை விற்கக்கூடாது. இதை மீறி செயல்படும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரையன் (52). மரம் ஏறும் தொழிலாளி. இவர் தாளாவாடி அடுத்த தொட்டகாஜனூர் என்ற பகுதியில் மரம் ஏறும் தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் துரையன் தொட்டகாஜனூர் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரது தோட்டத்துக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் ஏற முயன்றார். அப்போது தோட்டத்தைச் சுற்றி அமைத்து இருந்த மின் வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு துரையன் இறந்து விட்டார்.
இது குறித்து தாளவாடி போலீசாருக்கு தெரிய வந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தோட்டத்துக்கு போட்டிருந்த மின்வேலியில் சிக்கி துரையன் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மின்வேலி அமைத்த மனோகரனை தேடி வருகின்றனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ் பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்ட ஒரு வார காலத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து பவானி சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
வாய்க்கால் உடைப்பு சரிசெய்யும்பணி தீவிரமாக நடந்தது. இதையடுத்து கடந்த வாரம் முதல் மீண்டும் கீழ் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில் வினாடிக்கு 200 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை 6 மணியளவில் கீழ் பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீர் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து வாய்க்காலை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2518 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் வினாடிக்கு 464 கனஅடியும், கீழ் பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கனஅடியும், பவானி ஆற்றில் 36 கனஅடியும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகளில் அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வடக்கு வீதியில் செயல்பட்டு வரும் ஒரு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை விற்பனையாளர் அர்ச்சுணன் (43) என்பவர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததுடன் இது குறித்து கேள்வி எழுப்பிய வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது.
இது பற்றி தெரியவந்ததும் டாஸ்மாக் அதிகாரிகள் விசாரணை நடத்தி கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் அர்ச்சுணனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான கடைகளிலும் விலைப்பட்டியலை நுகர்வோர் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும் எனவும், விற்பனை விலையை விட கூடுதலாக விற்பனை செய்யக்கூடாது எனவும் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கோபி செட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் சுமார் 2 ஆயிரம் மாணவ,மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று முதல் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
இந்த நிலையில் மலையப்பம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட 160 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் பிளஸ்-1 மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் அவர் படித்த பள்ளி மற்றும் வசித்த குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதே போல் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி என்ற பகுதியில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா மாணவிகள் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தங்கி உள்ள ஒரு மாணவி குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து பள்ளியில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9-ம் வகுப்பு மாணவிகள் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் படித்த பள்ளி மற்றும் உண்டு உறைவிடப்பள்ளியில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஒலகடம் பேரூராட்சிக்குட்பட்ட எட்டிக்கொட்டை தாள பாளையம், கூனாக்க பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சிறு, குறு விவசாயிகள் செவ்வாழை, கதலி, நேந்திரம் உள்ளிட்ட வாழை ரகங்களை பயரிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக 50 ஏக்கர் பரப்பளவிலான 50 ஆயிரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
கதலி, செவ்வாழை, நேந்திரம் வாழை ரகங்களை பயிடப்பட்டிருந்து. நேற்றிரவு பெய்த கனமழையால் 2 மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் அடியோடி சரிந்து விழுந்துள்ளது. இதனால் ரூ.2 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் விவசாயத்தை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஏற்படும் இழப்புகளை வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அறுவடைக்கு தாயார் நிலையில் இருந்த வாழைகள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 5-வது தளத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் சிவகிரி கொல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) என்பவர் சீனியர் வருவாய் ஆய்வாளராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.
சதீஷ்குமார் அலுவலகத்தில் தன்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்துக்கு வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அதை டுவிட்டரில் பதிவேற்றி வந்துள்ளார்.
இதனை பார்த்த சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஊழியரின் பெற்றோர் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் சதீஷ்குமாரின் டுவிட்டரை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஊழியர்களின் படம் பதிவேற்றி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதகுறித்து சைபர் கிரைம் போலீசார் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கையாக சதீஷ்குமாரை சஸ்பெண்டு செய்து மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (திங்கட்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மொடக்குறிச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
மேலும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பவானி கிழக்கு, நகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்திலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கோபி வைரவிழா தொடக்க பள்ளிக்கூடத்திலும், 22-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெருந்துறை கிழக்கு அக்ரஹார வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்திலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
சிறப்பு முகாமில் தலா 500 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. எனவே இது வரை தடுப்பூசி போடாமல் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்ததற்கான அட்டை, ஆதார் கார்டுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0424 2275592 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த தடுப்பணையில் நீர்வீழ்ச்சி போல் கொட்டும் தண்ணீரில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
சிறந்த சுற்றுலா தலமான கொடிவேரி அணையில் குளிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இந்த நிலையில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக அணை மூடப்பட்டது. இதற்கிடையே கடந்த மாதம் மீண்டும் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும், பவானி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் கடந்த மாதம் 31-ந் தேதி முதல் கொடிவேரி அணை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது பவானி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் வருவதால் 20 நாட்களுக்கு பிறகு நாளை (21-ந்தேதி) முதல் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து கொடிவேரி அணை பகுதியில் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பட்டிமணியகாரன் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் படிக்கும் 253 மாணவர்கள், 26 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர் வசித்த பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
இதே போல் கடத்தூர் பள்ளிக்கூட பிரிவு என்ற பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து பள்ளியில் 210 மாணவர்கள், 30 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதுவரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது.






