என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விடிய விடிய போலீசார் அதிரடி சோதனை- ஈரோட்டில் 13 ரவுடிகள் கைது

    ஈரோட்டில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பழிக்குப்பழியாக நடக்கும் கொலை சம்பவங்கள் பொதுமக்களிடம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டவர்களும், கொலையானவர்களும் பலர் ரவுடிகள் பட்டியலில் இருந்தனர். இதேபோல் கொள்ளை சம்பவங்களும், வழிப்பறி சம்பவமும் தொடர்ந்து நடந்து வருகின்றன. போலீசார் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் இதுபோன்ற சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

    இதையடுத்து குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ரவுடிகள், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு கைதாகி ஜாமீனில் உள்ள ரவுடிகள், தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் குற்ற சம்பவம் தடுக்கும் வகையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 60 குழுக்கள் அமைக்கப்பட்டு ரவுடிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 13 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் அதிரடி தேடுதல் வேட்டை இன்றும் நடந்து வருகிறது.

    Next Story
    ×