என் மலர்tooltip icon

    ஈரோடு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
    சென்னை:

    பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பா.ஜனதா கட்சிக்கு மாவட்டம் தோறும் புதிய அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. தற்போது வாணியம்பாடி, நெல்லை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 மாவட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன.

    இந்த அலுவலகங்களை இன்று திருப்பூரில் வைத்து காணொலி காட்சி மூலம் அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.

    தமிழகத்தை பொருத்தவரை பா.ஜனதா கட்சி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. ஆனால் பா.ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற முடியாத அளவுக்கு திட்டம் போட்டு பொய்யான தகவல்கள் மூலம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளனர். அதற்கு பல்வேறு தளங்களையும் கையில் எடுத்துள்ளனர்.

    ஆனால் அவற்றை நாங்கள் உடைத்து வருகிறோம். அதற்கு சாட்சி தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அடுத்து வரும் தேர்தலிலும் இந்த எண்ணிக்கை உயரும். எங்களை பொருத்தவரை கட்சி வளர்ச்சி என்பது மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து அதற்காக குரல் கொடுத்ததன் மூலம் கட்சி வளரும் என நம்புகிறோம்.

    உதாரணமாக முல்லை பெரியாறு, காவேரி பிரச்சினை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம். அதேநேரம் தி.மு.க. அரசு செய்யும் தவறுகளை எல்லாம் நாங்கள் சுட்டிக்காட்ட தவறுவதில்லை. மக்கள் மத்தியில் பொய்யான வாக்குறுதி கொடுத்து எல்லாவற்றையும் நிறைவேற்றியது போல அவர்களுடைய வழக்கமான பாணியில் மாய தோற்றத்தை உருவாக்கி வருகின்றார்கள்.

    பெட்ரோல்-டீசல் விலையை குறைப்போம் என்று அவர்கள் தான் சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் சொல்லாத மத்திய அரசு குறைத்து இருக்கிறது. இதைத்தான் சுட்டிக்காட்டி தி.மு.க. அரசை எதிர்த்து போராடுகிறோம்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. அதிக இடங்களை கைப்பற்றுவோம். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது. பா.ஜனதாவுக்கு எம்.பி.க்கள் இல்லாவிட்டாலும் கூட 2 கவர்னர்கள், ஒரு மத்திய மந்திரி உள்பட பல பொறுப்புகளை வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் காலம் பா.ஜனதா காலமாக மாறும். அதற்காகவே உழைத்து வருகிறோம். இன்றைய செயற்குழு கூட்டத்தில் கட்சி வளர்ச்சிக்காக பல திட்டங்கள் தீட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய பூக்கள் அம்மனுக்கு சூட்டப்பட்டு பூ சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (வியாழக்கிழமை) கம்பம் நடப்படுகிறது. வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரோட்டமும் நடக்கிறது.

    7-ந் தேதி கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 8-ந் தேதி கம்பம் பிடுங்கப்படுகிறது. 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
    மத்திய பிரதேசத்தில் சாராயத்தை இலுப்பை பூவைக் கொண்டு தயாரிப்பது மூலம், பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் தரும் என்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
    போபால்:

    மத்தியப் பிரதேசம் மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ் நாள் கொண்டாட்டத்தில், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    புதிய கலால் கொள்கையின்படி, பாரம்பரிய வழியில் இலுப்பை பூவில் இருந்து தயாரிக்கப்படும் சாராயம் இனி சட்டவிரோதம் ஆகாது. இது 'பாரம்பரிய மதுபானம்' என்ற பெயரில் மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும். இலுப்பை பூ பயன்படுத்துவதன் மூலம் பழங்குடியின மக்களுக்கு வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் ஏற்படுத்தி தரும்.
    இவ்வாறு அவர் கூறினார்.

    இலுப்பை பூ

    பாஜக தலைமையிலான மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் பாரம்பரிய மதுபான விற்பனை முயற்சியை காங்கிரஸ் கடுமையாக சாடி உள்ளது. இது பாஜகவின் தார்மீக வீழ்ச்சி என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே.மிஸ்ரா கூறி உள்ளார்.

    மேலும், "சமீபத்தில் கள்ளச் சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மூலிகை சாராயத்தை சட்டப்பூர்வமாக்கும் முடிவை அரசு எடுத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது" என்றும் அவர் கூறினார்.

    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் கோவிந்தன் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (52). இவரது மனைவி நித்தியா (40). இவர்களுக்கு காவியா (18), பவித்ரா (20) என்ற 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ஈஸ்வரியின் தந்தை முருகன் (75) என்பவரும் வசித்து வருகிறார்.

    ஈஸ்வரன் தனது வீட்டிலேயே கைத்தறியில் பட்டுப்புடவை நெய்யும் தொழில் செய்து வந்தார். இவரது வீடு மண்ணால் ஆன ஓட்டு வீடு ஆகும்.

    அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஈஸ்வரனின் மண் வீடு ஈரப்பதம் காரணமாக உறுதி தன்மையை இழந்து வந்தது.

    இந்நிலையில் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வீட்டின் உறுதி தன்மை மேலும் வலுவிழந்தது. மழை பெய்தபோது ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென வீட்டின் ஓடுகள் சரிந்து விழும் சத்தம் கேட்டது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் வீடு முழுவதும் இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமானது. சரியான நேரத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்ததால் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    பின்னர் ஈஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள உறவினர் வீட்டில் சென்று இரவு தங்கினர். இதுபற்றி தெரியவந்ததும் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ, பேரூராட்சி செயல் அலுவலர் ரவி, தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்று ஈஸ்வரனுக்கு ஆறுதல் கூறினர்.

    மேலும் வீடு இடிந்து விழுந்ததில் தலா ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பட்டு சேலைகள் தயார் செய்ய வைத்திருந்த நூல் பாவு சேதம் அடைந்தது. இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இந்த ஏர்ஃப்ரையர்கள் இன்னும் சில மாற்றங்களோடு ஸ்டெயின்லஸ் ஸ்பீலினால் செய்யப்பட்டு அவன் வடிவில் வந்திருப்பது இப்பொழுது புதுவரவு என்று சொல்லலாம்.
    வீட்டில் குழந்தைகளுக்கு சிப்ஸ், சிக்கன்-65, ஃப்ரன்ச் ஃப்ரைஸ் போன்ற எண்ணெயில் பொரிக்கும் உணவுகள் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல் நமக்கும் வடை, தந்தூரி சிக்கன், உருளைக்கிழங்கு டிக்கா என எண்ணெயுடன் மிகவும் நெருக்கமான உணவுகளை சாப்பிடுவது பிடிக்கும். ஆனால் உடல் நலத்தைத் கருத்தில் கொண்டு பிடித்தவற்றை விரும்பிச் சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல் திண்டாடுகின்றோம்.

    இந்த திண்டாட்டத்திற்கு ஒரு பெரிய குட் பை சொல்வது போல் வந்தவை தான் ஏர்ஃப்ரையர்கள். இந்த ஏர்ஃப்ரையர்கள் இன்னும் சில மாற்றங்களோடு ஸ்டெயின்லஸ் ஸ்பீலினால் செய்யப்பட்டு அவன் வடிவில் வந்திருப்பது இப்பொழுது புதுவரவு என்று சொல்லலாம்.

    இந்த ஏர்அவன்கள் ஒரு எண்ணெய் டின் போல சமயம் மைக்ரோ அவன் போன்ற ேதாற்றத்தில் இருக்கின்றன.

    இவற்றில் உணவுப் பொருட்களை பொரிப்பது மட்டுமல்லாமல் டோஸ்ட்டும் செய்ய முடியும்.

    ப்ராயிலிங் ரோஸ்ட் செய்ய முடியும்.

    பேக்கிங் செய்யும் வசதியும் உள்ளது.

    சமைத்த உணவுகளை மறுபடியும் சூடுபடுத்திக் கொள்ளும் வசதி உள்ளது.

    டீ ஹைட்ரேட்டிங் செய்து கொள்ள முடியும். அதாவது ஆப்பிள், வாழைப்பழம், வாழைக்காய் போன்றவற்றை துண்டுகளாக இதனுள் அறுத்து வைத்தோமென்றால் அவை சிப்ஸ் போலக் கிடைப்பதே டீ ஹைட்ரேட்டிங் ஆகும்.

    மொறு மொறுப்பாக வறுக்க முடியும்.

    தந்தூரி, ஷவர்மா போன்றவற்றை கடையில் வாங்குவது போலவே அதே ருசியுடன் இந்த ஏர்ஃப்ரையர் அவனில் செய்ய முடியும்.

    இதற்கு முன்பு வந்த ஏர்ஃப்ரையர் மாடலில் ஒரு சிறிய குடும்பத்திற்கு உணவைப் பொரிக்க முடியுமென்றால் இப்பொழுது வந்திருக்கும் இந்த அவன் மாடலில் ஒரு பெரிய குடும்பத்திற்கே உணவைப் பொரிக்குமளவிற்கு வசாலமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஏர்ஃப்ரையரின் கதவு கண்ணாடியால் செய்யப்பட்டு மேலிருந்து கீேழ திறப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவில் பொருத்தப்பட்டிருக்கும் கைப்பிடியானது உறுதியாக உள்ளது.

    ஏர்ஃப்ரையரின் உட்புறம் தகுந்த இடை வெளியில் வைத்துக் கொள்வது போல இரண்டு சதுர வடிவத்தட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் நாம் பொரிக்க மற்றும் வறுக்க வேண்டிய காய்கறிகளை வைத்து தேவைப்பட்டால் அதன் மேல் சிறிதளவு எண்ணெயை ப்ரஷ் கொண்டு தடவலாம். இந்த இரண்டு தட்டுகளுக்குக் கீழே ட்ரிப்பிங் ட்ரே அதாவது மேலே வைக்கப்பட்ட தட்டிலிருந்து ஒழுகும் மாசாலா உணவுத்துகள் மற்றும் எண்ணெயானது இந்தத் தட்டில் வந்து சேர்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. சமைத்து முடித்ததும் இந்த ட்ரிப்பிங் ட்ரேயை வெளியே எடுத்து சுலபமாகக் கழுவி விடலாம்.

    இத்துடன் ஸ்டெயின்லஸ் ஸ்டீலினால் செய்யப்பட்ட சுழலக்கூடிய கூடை ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடையில் போடப்படும் பொருளானது அனைத்து பக்கத்திலும் சமமாக சமைக்கப் படுகின்றது. குறிப்பாக ஃப்ரன்ச் ஃப்ரைஸ், ஃபிஷ் ஃபிங்கர், காலி ஃப்ளவர் மன்ச் சூரியன், நக்கட்ஸ், சிக்கன் விங்ஸ் போன்றவை மிகவும் மொறுகலாகவும், ருசியாகவும் கடையில் வாங்குவது போன்ற தோற்றத்திலும் கிடைப்பது அருமை என்றே சொல்லலாம்.

    ஏர்ஃப்ரையரின் வெளிபுறத்தில் ஃப்ரைபேக், ப்ராயில், ஹீட், டீ ஹைட்ரேட்டிங் என தனித்தனியே டிஜிட்டல் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதே போல் நேரத்தை கூட்டுவதற்கும் குறைப்பதற்கும், சூட்டை குறைப்பதற்கும், கூட்டுவதற்கும் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நமக்கு விருப்பமான உணவுகளை தேர்வு செய்து தேவையான நேரத்தை தேர்வு செய்து சமைத்து கொள்ளலாம்.

    சமைக்கும் நேரத்தை தேர்வு செய்த பிறகு இடையிலேயே ஏர்ஃப்ரையரைத் திறந்து சமைக்கும் பொருளை புரட்டிப் போட்டும் சமைக்கலாம். இந்த ஏர்ஃப்ரையரில் கொடுக்கப்பட்டிருக்கும் தட்டுகள் மற்றும் ரொடேடிங் கூடை என அனைத்தையும் டிஷ் வாஷரில் கழுவுவதற்கு ஏதுவாக வடிவமைத்து இருக்கிறார்கள். சூடான காற்றானது சமைக்கக்கூடிய பொருளின் மீது பட்டு உணவைச் சமைப்பதால் எண்ணெயில் பொரிப்பது போன்ற சுவையை இந்த ஏர்ஃப்ரையர்களால் நமக்குத் தரமுடிகிறது.

    சமைக்க கூடிய எந்த உணவிற்கும் எண்ணெயானது மிக மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் நம் உடலில் சேரக்கூடிய கெட்ட கொழுப்பு குறித்து பயம் கொள்ளத் தேவையில்லை. கடையில் கிடைப்பது போலவே சுவை இருப்பதால் குறைந்த செலவில் ஆரோக்கியமாக நம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிகின்றது.

    சிறிய அளவில் இருப்பதால் நாம் செல்லும் இடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது. மொத்தத்தில் மிக ஆரோக்கியமான சமையலறை உபகரணம் என்று இதைச் சொல்லலாம்.
    பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    பவானிசாகர் அருகே உள்ள பசுவாபாளையம் என்ற பகுதியில் விவசாயி ஒருவர் ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டு முன்பு கட்டியிருந்த ஒரு ஆட்டுக்குட்டியை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை தாக்கியது. இதையடுத்து ஆடுகள் சத்தம் போட்டது. இதையடுத்து வீட்டுக்குள் படுத்திருந்த விவசாயி வெளியே வந்து பார்த்தார். அப்போது ஒரு சிறுத்தை ஆட்டை அடித்து கொன்று ரத்தத்தை குடித்துக் கொண்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார்.

    இதையடுத்து அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆட்டுக்குட்டி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் சிறுத்தை கால்நடைகளை தாக்கி வேட்டையாடி வருகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக் கோரி அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தை அடித்து கொன்ற ஆட்டுக்குட்டி உடலை பசுவாபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டில் போட்டு சாலை மறியல் செய்தனர்.

    இது பற்றி தெரிய வந்ததும் வனத்துறை ரேஞ்சர் சிவக்குமார், சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயக்கோபாலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சாலைமறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமறியல் போராட்டம் காரணமாக அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் என்.சி.பி. மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறது.
    சொகுசு கப்பலில் நடைபெற்ற போதை பொருள் விருந்தில் கலந்து கொண்டு பொதை பொருள் பயன்படுத்தியதாகவும், போதை பொருள் வைத்திருந்ததாகவும் தேசிய பொதை பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகளால் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார்.

    என்.சி.பி. சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமீன் உத்தரவு குறித்த மும்பை உயர்நீதிமன்றத்தின் விவரம் முழுவதுமாக வெளியானது. அதில் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை என குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் என்.சி.பி. அதிகாரிகள் ஆர்யான் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆலோசித்து வருவதாக என்.சி.பி. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்ற ஜாமீன் உத்தரவை ஆய்வு செய்தபிறகு, சட்டப்பூர்வமான கருத்துகளை தற்போது எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
    ஈரோட்டில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் அம்பிகா. தறிப்பட்டறை தொழிலாளி. உடல் நலக்குறைவால் இவரது கணவர் சிவா 2 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகள் பாக்கியலட்சுமி (13) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை வழக்கம் போல் அம்பிகா தறிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பாக்கியலட்சுமி மட்டும் இருந்துள்ளார். அம்பிகா மதியம் சாப்பிடுவதற்காக 2.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார். ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் மாணவி பாக்கியலட்சுமி தொங்கி கொண்டிருந்தார்.

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாக்கியலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செல்போனில் பேசியதை கண்டித்ததால் பாக்கியலட்சுமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எனினும் இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச ஃபேஷன் ஷோ போட்டியில், 15 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் மாடல்கள் கலந்துக் கொள்ள உள்ளனர்.
    கோவை:

    கோவை, ராம்நகரைச் சேர்ந்த சிவக்குமார்-கோமதி தம்பதியின் மகன் ராணா (6). ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிவக்குமார் ஜவுளி தொழிலும், கோமதி அழகு நிலையமும் நடத்தி வருகின்றனர். ஒரு முறை கோமதியின் அழகு நிலையத்திற்கு, ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் வந்துள்ளார். அங்கு ராணாவைப் பார்த்த அவர், ராணா ஃபேஷன் ஷோவிற்கு தகுதியானவர் என்றும் ஏன் ஒரு முறை பேஷன் ஷோவில் பங்கேற்க முயற்சிக்கக் கூடாது என்றும் கேட்டுள்ளார்.

    ஜூனியர் மாடல் ராணா

    இதையடுத்து, கோவையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ ஒன்றில் முதல் முறையாக பங்கேற்ற ராணா முதல் பரிசு தட்டிச் சென்றார். அப்போது ராணாவுக்கு 3 வயது.

    முதல் பரிசு பெற்றது ராணாவின் குடும்பத்தினரை பெரிதும் உற்சாகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சென்னை, கோவை, சேலம், பெங்களூரு, கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜூனியர் ஃபேஷன் ஷோக்களில் ராணா பங்கேற்று பரிசுகளை குவித்தார். மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் இதுவரை 13-க்கும் மேற்பட்ட பதக்கங்களும், விருதுகளும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள சர்வதேச ஃபேஷன் ஷோ போட்டியில் ராணா முதல்முறையாக பங்கேற்க உள்ளார். வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள இப்போட்டி தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், 15 நாடுகளை சேர்ந்த ஜூனியர் மாடல்கள் கலந்துக் கொள்ள உள்ளனர். முதற்கட்ட தேர்வு ஆன்லைனில் நடைபெற்ற நிலையில், சர்வதேச போட்டி நேரடியாக துபாயில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து அவரது ராணாவின் தாய் கோமதி கூறுகையில், " ராணா மூன்று வயதில் இருந்தே மாடலிங் செய்து வருகிறார். மாடலிங் மட்டும் இல்லாமல், விளம்பரம் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். பல ஃபேஷன் ஷோக்களை வீடியோவாகவும், நேரடியாகவும் பார்த்து தன்னைத்தானே செதுக்கிக் கொண்டார் " என்றார்.

    மேலும், சிறுவன் ராணா கூறுகையில் "தனக்கு மாடலிங் செய்வது மிகவும் பிடிக்கும். எதிர்காலத்தில் கடற்படை அதிகாரியாக வேண்டும் என்பது என் ஆசை" என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படியுங்கள்..  202 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொரோனாவை வீழ்த்திய குஜராத் பெண்
    தொடர் மழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏக்கர் குளம் 30 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி வழிகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

    ஈரோட்டில் நேற்று மதியம் திடீரென வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் மாலை மீண்டும் மேகமூட்டமாக காணப்பட்டது. இதையடுத்து சாரல் மழை தூறியது. தொடர்ந்து இரவு 7 மணிக்கு இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாக்கடைகள் நிரம்பி மழை தண்ணீர் வீடுகள் முன்பு தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அதன் பிறகு மழை வெள்ளம் வடிந்தது.

    நம்பியூர் பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக மொட்டணம் கிராமம் மஜ்ரா பழையூர் பகுதியில் பாட்டப்பா கவுண்டர் (72) என்பவரது வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவர் தத்தளித்து கொண்டு இருந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்து சேதமானது. இதே போல் மழை காரணமாக சென்னியப்பன் என்பவருக்கு சொந்தமான வீட்டு சுவரும் இடிந்து விழுந்தது.

    தொடர் மழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 48 ஏக்கர் குளம் 30 ஆண்டுகளுக்கு பின்பு நிரம்பி வழிகிறது. தண்ணீர் சாலையில் 5 அடிக்கும் மேல் ஓடியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தண்ணீர் வடிந்ததும் போக்குவரத்து தொடங்கியது.

    இதே போல் அந்தியூர் அருகே உள்ள 130 ஏக்கர் பரப்பளவில் உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியும் நிரம்பி வழிகிறது. உபரி நீர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, நெல், கரும்பு, சோள பயிர்கள் அழுகி வருகிறது.

    இதேபோல் ஆப்பக்கூடல் அருகே உள்ள சஞ்சீவிராயன் ஏரியும் நிரம்பி வழிகிறது. தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

    ஈரோடு நகரில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் நடை பாலத்தை தொட்டப்படி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-25, நம்பியூர்-12, பெருந்துறை-7, எலந்தகுட்டை மேடு-3.2, அம்மாபேட்டை-1, கொடி வேரி-1.2, கோபி-2.2, பவானிசாகர்1.2, அம்மாபேட்டை-1, வரட்டுபள்ளம்-1.
    டீக்கடை நடத்தி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று பிரபலமான விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
    திருவனந்தபுரம்,

    கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கேஆர் விஜயன் (71). அவரது மனைவி மோகனா. கணவன் மனைவி இருவரும் இணைந்து கொச்சியில் ‘ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்’ என்ற பெயரில் சிறிய 'டீக்கடை’ ஒன்றை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையில், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று மோகனா தனது கணவர் விஜயனிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தங்கள் டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தின் சிறு பகுதியை (தினமும் 300 ரூபாய்) தினம் தினம் தம்பதியர் சேமித்து வைத்துள்ளனர்.

    இதன் பலனாக 2007-ம் ஆண்டு விஜயன் தனது மனைவியுடன் முதல் வெளிநாட்டு பயணம் செய்தார். அவர் முதல் முறையாக இஸ்ரேல் நாட்டிற்கு சுற்றுலா சென்றார். அதன் பின்னர் தங்கள் சேமிப்பு மற்றும் சிறு கடன்களின் உதவிகளுடன் கடந்த 14 ஆண்டுகளில் விஜயன் - மோகனா தம்பதி 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

    2019 ஆம் ஆண்டு இந்த தம்பதியரின் பயணத்திற்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா உதவி செய்துள்ளார். அதன் பின்னரே விஜயன் - மோகனா தம்பதியின் சுற்றுப்பயணங்கள் குறித்து தேசிய அளவில் பலருக்கு தெரியவந்தது.

    மனைவியுடன் 26 நாடுகளுக்கு சுற்றுலா சென்ற டீக்கடைக்காரர்

    இந்நிலையில், டீக்கடை நடத்தி உலகின் பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று பிரபலமான விஜயன் கொச்சியில் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். மரணமடைந்த விஜயன் தனது மனைவி மோகனாவுடன் கடைசியாக கடந்த மாதம் 21 -ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ரஷியாவுக்கு சுற்றுலா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படியுங்கள்...

    மரம் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர் மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் கடந்த வாரம் 4 முறை ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தது.

    இதனால் அந்தியூர்- மைசூரு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பல்வேறு மலைக்கிராமங்களுக்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. மேலும் மண் சரிவுகளும் தடுப்புகள் அமைத்து சரி செய்யப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    தொடர் மழை பெய்ததால் பர்கூர் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் ரோடுகளில் சரிந்து விழும்போல் மரங்கள், பாறைகள் தொங்கிக் கொண்டு இருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் தாமரைக்கரையில் இருந்து 2-வது கிலோமீட்டர் தொலைவில் ஒரு ராட்சத மரம் விழுந்தது. இதனால் பர்கூர்-மைசூரு இடையே போக்குவரத்து பாதிக்கப் பட்டது. மரம் விழுந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் வராததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

    மரம் விழுந்த தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்கு பின்பு போக்குவரத்து தொடங்கியது.

    தொடர்ந்து மலைப்பாதையில் அபாயகரமாக இருக்கும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×