என் மலர்tooltip icon

    ஈரோடு

    மழை காரணமாக சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 11 அடியை எட்டியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம் அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

    இதன் காரணமாக அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, கரும்பு, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மாலை பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது.

    ஈரோடு மாநகரில் பெய்து வரும் மழை காரணமாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பவானி, கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

    மழை காரணமாக சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 11 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வெளியேற்றப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை 1200 டிடிஎஸ் என்ற அளவில் உள்ளதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாளவாடி, கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிலர் ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கடும் குளிரும் நிலவி வருகிறது.

    கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அரிக்கியம், கம்பத்துராயன் வீதி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அருவி கொட்டுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வந்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு 7 ஆயிரத்து 815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 6300 கனஅடி என மொத்தம் 7800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானி ஆற்றில் 6300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.
    புதுடெல்லி:

    ஆட்டோ சேவை 2 விதங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல், நேரடியாக கட்டணம் பேசி ஆட்டோவில் பயணம் செய்வது ஒருவகை. செயலிகள் மூலமாக பதிவு செய்து ஆட்டோவில் பயணம் செய்வது இன்னொரு வகை.

    இந்த இரண்டு வகையான ஆட்டோ சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயணம் செய்யும் ஆட்டோ சேவைக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கிறது. வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

    மத்திய அரசு

    இதனால், ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆட்டோவில் பயணிப்பதற்கு கட்டணம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், நேரடியாக பேசி ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஜி.எஸ்.டி. விலக்கு நீடிக்கும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய் துறை தனது அறிவிப்பாணையில் கூறியுள்ளது.

    இந்த உத்தரவு, இருவிதமான ஆட்டோ சேவையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என்றும், ஆன்லைன் பதிவு ஆட்டோ சேவை நிறுவனங்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் என்றும் இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.







    சமையல் கூடத்திலிருந்து பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.
    ஈரோடு:

    தமிழகத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதியுடன் இருந்து வருகிறது. இதற்காக ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் ஒரு தலைமையாசிரியர் முயற்சியால் சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்துள்ளது.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 1061 மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் சமையல் கூடம் சுகாதாரமற்ற முறையில், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதை கண்டு தலைமை ஆசிரியர் மாலா அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து சமையல் கூடத்தை அழகுப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கினார். இதையடுத்து சமையல் கூடம் முழுவதும் டைல்ஸ் கொண்டு செப்பனிட்டு வர்ணம் அடிக்கப்பட்டது.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை சமையல் கூடத்திலிருந்து முற்றிலும் ஒழிக்கும் விதமாக பெற்றோர்களிடம் கல்விச்சீராக சமையல் கூடத்திற்கு தேவையான எவர்சில்வர் மற்றும் மண் பாத்திரங்கள் பெறப்பட்டது.

    மேலும் மாணவிகளுக்கு சுகாதார முறையில் சமைக்கும் பொருட்டு ஆர்.ஓ தண்ணீர் பொருத்தி, அந்த நீரில் மட்டுமே சமைக்க தலைமை ஆசிரியர் மாலா நடவடிக்கை எடுத்தார். மேலும் காய்கறிகளை சமைப்பதற்கு முன்பு மஞ்சள் நீரால் கழுவியும், சமைக்கும் சமையலர்கள் நகங்கள் வெட்டி இருக்க வேண்டும், வளையல் மற்றும் மோதிரங்கள் அணிந்து இருக்கக்கூடாது என்றும் முடி உணவில் விழாமல் இருக்க தலையில் தொப்பி அணிந்து மாணவிகளுக்கு சமையல் செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

    ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற கருங்கல்பாளையம் மாநகராட்சி பள்ளி சமையல் கூடம்

    அதை முறையாக சமையலர்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அறிய ஆசிரியர் குழு ஒன்றை நியமித்தார் தலைமை ஆசிரியர். மேலும் பள்ளியிலேயே ஆர்கானிக் காய்கறி தோட்டம் அமைத்து அதில் விளையும் காய்கறிகளை வாரத்தில் ஒரு நாள் சமையலுக்கு பயன்படுத்தி வரப்படுகிறது. மேலும் மாணவிகள் சாப்பிட பயன்படுத்தும் தட்டுகள் வெந்நீரில் சுத்தம் செய்து தரப்படுகிறது. மேலும் அவர்களுக்கு வெந்நீர் மட்டுமே கொடுக்க உத்தரவிட்டார். மேலும் இவை அனைத்தும் முறையாக தவறாமல் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை அறிய 2 சிசிடிவி கேமராவை சமையல் கூடத்தில் பொருத்தி தனது அறையிலிருந்து தலைமை ஆசிரியர் கண்காணித்து வருகிறார். மாணவிகளின் பெற்றோர்களும் எந்த நேரமும் சமையல் அறையை சென்று பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே ஆய்வுக்கு வந்த சத்துணவு ஒருங்கிணைப்பாளர்கள் கொடுத்த உற்சாகத்தில் சமையல் கூடத்திற்கு என ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் வேண்டி விண்ணப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளியின் சமையல் கூடத்தில் 4 முறை ஆய்வு செய்த ஐ.எஸ்.ஓ தரச்சான்று அதிகாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என்பதாலும், பணியாளர்களின் நேர்த்தியாலும், உணவின் சுவையாலும், மாணவிகளின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதாலும் கடந்த மாதம் இந்த பள்ளியின் சமையல் கூடத்துக்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் வழங்கினர்.

    தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளி சமையல் கூடத்திற்கு ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் கிடைக்க ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் தலைமையாசிரியர் மாலா நன்றியை தெரிவித்துக்கொண்டார். சமையல் கூடம் மட்டுமின்றி பள்ளியில் ஒவ்வொரு கட்டிடங்களுக்கும் தமிழகத்தின் வீர மங்கைகள் பெயரும், பள்ளியின் நேரத்தில் ஏற்படும் மன அழுத்ததை போக்க வகுப்பு அறைகளின் முன் தூரி கட்டி விளையாடவும், மாணவிகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க முருங்கை சூப் வழங்குதல், டிஜிட்டல் நூலகம் அமைத்தல் என இந்த மாநகராட்சி பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராகவே திகழ்ந்து வருகிறது.



    தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    அவிநாசி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் அவிநாசியில்  நடைபெற்றது. அவிநாசி கூட்டுறவு சங்கங்களில் நிலவி வரும் உர தட்டுப்பாட்டால் விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. 

    இதனால் வெளிச்சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக உர தட்டுப்பாட்டை நீக்க வேண்டும். அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை சேர்க்க வேண்டும். 

    தமிழகம் முழுவதும் கடுமையான மழை காரணமாக பயிர்கள் அழுகி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

    எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க மாநிலக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய நிர்வாகிகள் முத்துரத்தினம், வேலுச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளான சத்தியமங்கலம், அந்தியூர், கோபி, நம்பியூர், தாளவாடி, பவானிசாகர், அணை பகுதிகளான குண்டே ரிபள்ளம், வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.

    இந்நிலையில் ஈரோட்டில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. மாநகர பகுதியிலும் பகல் முழுவதும் வெயில் வெளுத்து வாங்கியது. மாலை 5.30 மணிக்கு வானில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதைத் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த சாரல் மழை இரவு முழுவதும் தொடர்ந்தது.

    இதேபோல் கொடுமுடியில் இரவு 8 மணி முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மொடக்குறிச்சி, ஏழுமாதூர் பகுதியில் இரவு 7 மணிமுதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர், நம்பியூர், சென்னிமலை போன்ற பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிபள்ளம் அணை பகுதியில் 34.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு-20, கொடு முடி-31.6, பெருந்துறை-18.5, பவானி-15.2, கோபி-9.4, சத்தியமங்கலம்-13.4, பவானிசாகர்-8.4, நம்பியூர்-6, சென்னிமலை-14, மொடக்குறிச்சி-20, கவுந்தப்பாடி-13.2, அம்மாபேட்டை-10.2, கொடிவேரி-8, குண்டேரிபள்ளம்-34.6.

    குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி வருகிறது. இதுவரை 1050 வீடுகள் இடிந்துள்ளன.
    நாகர்கோவில்:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி நேற்று காலை முதல் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    அதிகாலையில் தொடங்கிய மழை நாள் முழுவதும் விடாது பெய்தபடி இருந்தது. கன்னியாகுமரி, கொட்டாரம், சுசீந்திரம், நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, களியக்காவிளை, குலசேகரம், திருவட்டார், பேச்சிப்பாறை, பூதப்பாண்டி என மாவட்டம் முழுவதும் மழை பெய்தபடி இருந்தது.

    இதனால் குமரி மேற்கு மாவட்டத்தின் மலை கிராமங்களுக்கு செல்லும் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியது. கோதையாறு, குற்றியாறு பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக மோதிரமலை, தச்சமலை, முடவன் பொற்றை, கல்லாறு உள்பட 12 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. தரை பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அங்குள்ள மக்கள் நகர் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த 12-ந் தேதி பெய்த மழையின்போதும் இக்கிராமங்கள் துண்டிக்கப்பட்டு மக்கள் அவதிக்கு ஆளானார்கள். இந்த நிலையில் இப்போது பெய்து வரும் மழையால் மீண்டும் இந்த கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மலைப்பகுதியில் பெய்யும் மழையுடன், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் மற்றும் அனைத்து அணைகளுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்தது.

    அணைகள் அனைத்தும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருந்ததால் அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீருடன், மழை வெள்ளமும் சேர்ந்து கொள்ள குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேநேரம் மழை இன்னும் ஓயாததால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கூடுதல் வெள்ளம் வர வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    எனவே ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவித்து உள்ளார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இந்த பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    குமரியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி வருகிறது. இதுவரை 1050 வீடுகள் இடிந்துள்ளன.

    மழை

    இந்த நிலையில் இப்போது மீண்டும் மழை பெய்து வருவதால் நேற்றும் ஒரே நாளில் 26 வீடுகள் இடிந்தன. இதில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 26 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் 5 வீடுகளும், கிள்ளியூர் தாலுகாவில் 6 வீடுகளும் என மொத்தம் 26 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    குமரி மாவட்டத்தில் கடந்த 12 மற்றும் 13-ந் தேதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதனால் மாவட்டமே வெள்ளத்தில் மிதந்தது. சுமார் 50 ஆயிரம் வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. வைக்கலூர், கலிங்கராஜபுரம், பள்ளிக்கல், தோவாளை, சுசீந்திரம் என பல பகுதிகளிலும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

    ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டன. குளங்கள், கால்வாய்கள் உடைந்தது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் நிலங்கள் சேதமடைந்தன. குமரியின் மழை சேதங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 15-ந் தேதி நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்து வருவது மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.


    ஈரோடு வ. உ. சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது.

    இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது.

    இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.20 வரை விற்ற தக்காளி பின்னர் ஜெட் வேகத்தில் வேகமாக உயர்ந்து சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.140 வரை விற்பனையானது.

    தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஈரோடு வ. உ. சி. பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடியிலிருந்து தக்காளி அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

    பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தினமும் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பெட்டி தக்காளிகள் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. குறைந்த அளவில் தக்காளி கொண்டு வரப்பட்டதால் விலை அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில நாட்களாக 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,500 வரை விற்பனையானது. இதேபோல் 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1200 வரை விற்பனையானது.

    இந்நிலையில் இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இன்று 7 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரத்தானது. இதன் காரணமாக இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை திடீரென குறைந்தது. 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.1000 முதல் 1050 வரையும், 14 கிலோ பெட்டி ரூ.650 முதல் ரூ.700 வரையும் விற்பனையானது.

    இதனால் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வருகிறது. நேற்றை விட இன்று கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
    கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு மக்களும் சிறப்பித்தனர். மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் கிலேரியஸ் மந்திரித்து, குருசு (சிலுவை) கொடியை வடக்கூர் தலைவர் சகாய திலகராஜிடமும், புனித சவேரியார் கொடியை தெக்கூர் தலைவர் சவரிமுத்துவிடமும் வழங்கப்பட்டது. கொடியேற்றுத்துக்கான மலர்களை தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் செயலாளர்கள் அந்தோணி சவரிமுத்து, கின்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவருடைய தலைமையில் பேராலய வளாகத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல் நாள் திருவிழாவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் திருவிழா நடக்கிறது. 5-வது நாள் திருவிழாவான 28-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாளத் திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. . ஒவ்வொரு நாள் திருவிழாவையும் பக்த சபைகள், சங்கங்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    தேர்ப்பவனியின்போது புனித சவேரியார், மாதா தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதுதான் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
    நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.
    ஈரோடு:

    பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 2 வாரத்துக்கும் மேலாக நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் தெங்குமரகடா பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இதனால் அணையில் 104 அடி மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி ஆற்றில் அதிகபட்சமாக 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. ஆனாலும் அணையின் நீர்மட்டம் 104 அடியிலேயே நீடித்து வருகிறது.

    இதற்கிடையே நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் அதிகரித்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1800 கனஅடியும், பவானி ஆற்றில் 2 ஆயிரம் கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.
    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், காட்டுப்பிரிங்கியம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்த அருள்செல்வன் (வயது 35) என்பவர் தமிழ் ஆசிரியராக 5 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி, பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து அருள்செல்வன் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுதொடர்பாக அந்த மாணவி தலைமை ஆசிரியை(பொறுப்பு) லதாவிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அவர் நேற்று முன்தினம் மாலை 6 மணி வரை ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

    இந்தநிலையில், ஆசிரியர் அருள்செல்வன் வழக்கம்போல நேற்று காலை பள்ளிக்கு வந்தார். இந்த தகவல் அறிந்த கிராம மக்கள், ஆசிரியர் மீதும், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால், பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் துரைமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர், தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி குற்றத்தை மறைக்க முயற்சித்து மாணவிகளை சமாதானப்படுத்தியது தெரியவந்தது.

    விசாரணையை தொடர்ந்து, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அருள்செல்வன் மற்றும் அதனை மறைக்க முயன்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார், இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தனர். பின்னர் இரு வரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ஈரோட்டில் கல்லூரி மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு திண்டல் காரப்பாறை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (28). லேத் பட்டறை தொழிலாளி. இவர் ஈரோட்டில் உள்ள ஒரு 17 வயது கல்லூரி மாணவியிடம் பழகி வந்தார்.

    இந்நிலையில் பிரகாஷ் அந்த மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி கடந்த 31-ந் தேதி கடத்திச் சென்றார். பின்னர் அவர் மாணவியை திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்நிலையில் ஈரோட்டில் ஒரு வீட்டில் தங்கியிருந்த பிரகாசை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த மாணவியையும் போலீசார் மீட்டனர். மாணவியை கடத்தி திருமணம் செய்ததற்காக பிரகாஷ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    ×