search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கொடியேற்றம் நடைபெற்றதையும், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.
    X
    கொடியேற்றம் நடைபெற்றதையும், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.

    கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமும் ஒன்று. கத்தோலிக்க திருச்சபையின் கோட்டார் மறைமாவட்ட தலைமை பேராலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடைவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான 10 நாள் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 6.15 மணி திருப்பலியை ராஜாவூர் பங்கு மக்களும், 8 மணி திருப்பலியை அருகுவிளை பங்கு மக்களும் சிறப்பித்தனர். மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கொடியேற்றத்துக்கான மலர்களை ராஜாவூர் மக்களும், அருகுவிளை மக்களும் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட்டார் தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் மக்கள் சார்பில் கொடியேற்றத்துக்கு வந்த கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ்சுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை குருகுல முதல்வர் கிலேரியஸ் மந்திரித்து, குருசு (சிலுவை) கொடியை வடக்கூர் தலைவர் சகாய திலகராஜிடமும், புனித சவேரியார் கொடியை தெக்கூர் தலைவர் சவரிமுத்துவிடமும் வழங்கப்பட்டது. கொடியேற்றுத்துக்கான மலர்களை தெற்கு ஊர் மற்றும் வடக்கு ஊர் செயலாளர்கள் அந்தோணி சவரிமுத்து, கின்சன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.

    இதையடுத்து கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் கிலேரியஸ் கொடியேற்றி வைத்தார். பின்னர் அவருடைய தலைமையில் பேராலய வளாகத்தில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் வட்டார குருகுல முதல்வர் சகாய ஆனந்த், கோட்டார் புனித சவேரியார் பேராலய பங்குத்தந்தை ஸ்டான்லி சகாய சீலன், இணை பங்குத்தந்தை சிலுவை பிராங்கோ பிரான்சிஸ் மற்றும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல் நாள் திருவிழாவை மாவட்ட காவல்துறையினர் சிறப்பித்தனர்.

    இன்று (வியாழக்கிழமை) 2-வது நாள் திருவிழா நடக்கிறது. 5-வது நாள் திருவிழாவான 28-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், 11 மணிக்கு குணமளிக்கும் திருப்பலியும் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான 1-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.

    9-ம் நாள் திருவிழாவான 2-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. பின்னர் இரவு 10.30 மணிக்கு 2-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. 10-ம் நாள் திருவிழா 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் புனித சவேரியாரின் பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணியாளர் கிளாடின் அலெக்ஸ் தலைமையில் மலையாளத் திருப்பலி நடக்கிறது. காலை 11 மணிக்கு 3-வது நாள் தேர்ப்பவனி நடக்கிறது. மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத் திருப்பலியுடன் திருவிழா நிறைவடைகிறது. . ஒவ்வொரு நாள் திருவிழாவையும் பக்த சபைகள், சங்கங்கள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    தேர்ப்பவனியின்போது புனித சவேரியார், மாதா தேர்களின் பின்னால் பக்தர்கள் தரையில் கும்பிடு நமஸ்காரம் செய்வதும், உருண்டு வேண்டுவதுதான் இந்த திருவிழாவின் சிறப்பம்சமாகும்.
    Next Story
    ×