search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடம்பூர் வனப்பகுதியில் அருவி போல் மழை வெள்ளம் கொட்டுவதை காணலாம்
    X
    கடம்பூர் வனப்பகுதியில் அருவி போல் மழை வெள்ளம் கொட்டுவதை காணலாம்

    ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால் வனப்பகுதிகளில் கொட்டும் அருவிகள்

    மழை காரணமாக சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 11 அடியை எட்டியுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வரட்டுப்பள்ளம், குண்டேரிபள்ளம் அணை மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

    இதன் காரணமாக அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதனால் வாழை, கரும்பு, நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. மாலை பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே இருந்தது.

    ஈரோடு மாநகரில் பெய்து வரும் மழை காரணமாக பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதேபோல் பவானி, கோபி, நம்பியூர், கவுந்தப்பாடி, அந்தியூர், ஆப்பக்கூடல், அத்தாணி, பெருந்துறை, சென்னிமலை, மொடக்குறிச்சி, சத்தியமங்கலம், கடம்பூர், தாளவாடி, ஆசனூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.

    மழை காரணமாக சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 11 அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது வெளியேற்றப்படும் தண்ணீரில் உப்புத்தன்மை 1200 டிடிஎஸ் என்ற அளவில் உள்ளதால் கரையோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாளவாடி, கடம்பூர், பர்கூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வர முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மேலும் பல்வேறு பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் சிலர் ஆபத்தை உணராமல் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலை பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. மேலும் கடும் குளிரும் நிலவி வருகிறது.

    கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அரிக்கியம், கம்பத்துராயன் வீதி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் அருவி கொட்டுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    Next Story
    ×