என் மலர்
ஈரோடு
இன்று காலை 8 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றி, அமல அன்னை திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார்.
தொடர்ந்து வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.
10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.
12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.
இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘கொரோனா தொற்றுப்பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. எனவே பக்தர்கள் போதிய இடைவெளி கடைபிடிப்பதுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு மாலையில் தேர் ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக 12-ந் தேதி 3 திருப்பலிகளின்போதும் வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
ஈரோடு:
ஈரோட்டில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் மலை பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ராஜன் நகர், அரியப்பம்பாளையம், கடம்பூர், ஆசனூர், பண்ணாரி மற்றும் வனப் பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது.
இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடம்பூர் அடுத்த மாக்கம்பாளையம் செல்லும் வழியில் மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில் ஒரு பஸ் நடு வழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் செய்வது அறியாமல் தவித்தனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலை முதல் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகரில் தூறிக்கொண்டு இருந்த மழை திடீரென காலை 8.30 மணி அளவில் பலத்த மழையாக கொட்டியது.
இதேபோல் அந்தியூர், தவிட்டுப்பாளையம், பர்கூர், பவானி, சென்னிமலை, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், கடம்பூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது.
மழை காரணமாக இன்று காலை பள்ளி, கல்லூரி சென்ற மாணவ- மாணவிகள் அவதி அடைந்தனர். அவர்கள் குடை பிடித்தபடி சென்று வந்தனர். மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடம்பூர், பர்கூர், ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலை பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வந்து செல்லும் வாகனங்கள் பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது.
தொடர்ந்து மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகிறது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று வழக்கம்போல் பூக்கள் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2½ டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,207-க்கும், முல்லை ரூ.860-க்கும், காக்கடா ரூ.675-க்கும், செண்டுமல்லி ரூ.87-க்கும், பட்டுப்பூ ரூ.145-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.1,105-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.400-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.
ஈரோடு:
தமிழகத்தில் விவசாயிகளின் விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம், ராசிபாளையம் முதல் தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, ஈரோடு ஆகிய தாலுகா வழியாக உயர்மின் கோபுரம் விளைநிலங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை இந்த பணிகள் நிறைவடைந்துவிட்டன.
இந்தத் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும் அதையும் மீறி விவசாய நிலங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. மேலும் அரசு சார்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் முன்பு பெரும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி ஈரோட்டில் நசியனூர் அருகே உள்ள சித்தன் குட்டை அருகே உள்ள உயர்மின் கோபுரம் விளை நிலங்களில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழக விவசயிகள் போராட்டக்குழு சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் கவின் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயர் மின் கோபுரம் அருகே வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பணிகள் தற்போது விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டப்பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு ஆணை 54 படி உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
உயர் மின் கோபுரம் களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்று அடிக்கடி உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தமிழகத்திலும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜெர்மனி, உள்பட 23-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமுறை உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தத் தொற்று விரைவாக பரவக்கூடியது என்றும், நோய் எதிர்ப்பை எளிதில் தவிர்க்க கூடிய தன்மை உடையது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் மாநில சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தி உள்ளனர். குறிப்பாக விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
அவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும் அவர்களை வீடுகளில் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தி மீண்டும் பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் வெளியே நடமாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தி அவர்களை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோட்டுக்கு நேற்று ஒரே நாளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 13 பேர் விமானம் மூலம் கோவை, திருச்சிக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் என முடிவு வந்தது. ஆனாலும் அவர்கள் தங்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கி இருக்கும் பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.
ஒரு வாரம் கழிந்ததும் மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் அவர்களுக்கு பாதிப்பில்லை என்று முடிவு வந்தால் அவர்கள் வெளியே நடமாடலாம். பாதிப்பு என்று முடிவு வந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
மேலும் அவர்களுக்கு எந்த வகையான வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக அவர்களது சளி, ரத்த மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி 105 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
இதன் காரணமாக கடந்த 12 நாட்களாக பவானிசாகர் அணை நீர்மட்டம் 104 அடியில் இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 2 ஆயிரம் கனஅடி நீர் வந்த நிலையில் நேற்று வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
நேற்று இரவும் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.50 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 507 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ் பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, பவானி ஆற்றுக்கு 7,700 கனஅடி என மொத்தம் 9 ஆயிரத்து 500 கன அடி வீதம் அணையில் இருந்து தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக பவானி ஆற்றில் 7,700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் பவானி ஆற்றில் குளிக்க, துணி துவைக்க கூடாது என்றும், மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை ஆற்றுப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர், பொதுப்பணித்துறையினர் கரையோர பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.
அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.
கடந்த 4 நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் மீண்டும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நீர் மட்டமும் 105 அடியை நெருங்கி உள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.49 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 622 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 1,900 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை 105 அடியை நெருங்கி வருகிறது. 105 அடியை தொட்டதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றில் திருப்பி விடப்படும்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி துருசனாபாளையம் தேக்கமரத்துகாடு என்ற பகுதியை சேர்ந்தவர் தொட்டமாதையன் (58) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார்.
விவசாய பயிர்களை இரவு நேரத்தில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நாசம் செய்து வந்தது. இதையடுத்து தொட்டமாதையன் தனது தோட்டத்துக்கு இரவு காவலுக்கு சென்று வந்தார்.
இதேபோல் நேற்று இரவும் வீட்டில் சாப்பிட்டு விட்டு அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு காவலுக்கு சென்றார். அப்போது அவர் தோட்டத்தில் உள்ள ஒரு குடிசை வீட்டில் இரவு தூங்கினார்.
நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. இதையடுத்து வீட்டிற்குள் படுத்திருந்த தொட்டமாதையன் வெளியே வந்து பார்த்தார்.
அப்போது இரவு நேரம் என்பதால் அவருக்கு பின்னால் இருந்த ஒரு யானையை அவர் கவனிக்கவில்லை. இதையடுத்து யானை தொட்டமாதையனை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இரவு நேரம் என்பதால் இதுகுறித்து யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை தொட்டமாதையன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு அவர் யானை மிதித்து இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பர்கூர் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தொட்டமாதையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த வடபழனி குமரன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் விக்ரமன் (வயது 40). ஜே.சி.பி டிரைவர். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விக்கிரமனுக்கு நேற்று திருமண நாள். இதனால் மனைவி, குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாட வீட்டில் இருந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக அரச்சலூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து வீட்டிற்கு முன் பக்கம் உள்ள ஆட்டுக்கொட்டகைக்கு மின் இணைப்பு கொடுப்பதற்காக விக்ரமன் ஒயரை இழுத்தபோது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விக்ரமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விக்ரமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விக்ரமன் உடலை பார்த்து அவரது மனைவி மற்றும் குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நாளன்று ஜே.சி.பி. டிரைவர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, பெரிய வலசு, சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். எலக்ட்ரீசியன். இவரது மனைவி மணிமேகலை. தறிப்பட்டறை தொழிலாளி. இவர்களது மகன் திருநிறைச்செல்வன் (வயது 16). நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநிறைச்செல்வன் திடீரென பெட்ரோலை குடித்தார். இதையடுத்து திருநிறைச்செல்வன் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர் குணமடைந்தார்.
இதையடுத்து சிறிது நாளில் திருநிறைச்செல்வன் மீண்டும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சம்பவத்தன்று திருநிறைச்செல்வன் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வெளியே சென்றுவிட்டு மாலை வீட்டுக்கு வந்தனர்.
அப்போது மகன் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியே உள்ள கழிவறை கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினார்கள். ஆனால் எந்த ஒரு பதிலும் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த திருநிறைச்செல்வனின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு திருநிறைச்செல்வன் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திருநிறைச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பவானிசாகர் அணையின் மூலம் பல்வேறு நீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
120 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த ஆண்டில் 2 -வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த 10 நாட்களாக 104 அடியில் நீடித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104 அடியில் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரத்து 511 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 1,000 கன அடி என மொத்தம் 2,500 கன அடி நீர் பவானிசாகர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.







