என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபிசெட்டிபாளையம் அருகே லாரியில் கடத்த முயன்ற 12 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எலத்தூர் செம்மாண்டாபதியில் தனியாருக்கு சொந்தமான மஞ்சள் குடோன் உள்ளது. இந்த குடோன் அருகே லாரியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கடத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதைத்தொடர்ந்து கோபி டி.எஸ்.பி ஆறுமுகம், கடத்தூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் செம்மாண்டாபதி சென்றனர். அப்போது சரக்கு வேனில் இருந்து லாரியில் ரேசன் அரிசி மூட்டைகள் ஏற்றப்படுவது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து லாரி மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்த நிலையில் அங்கு ரேசன் அரிசி மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்த பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த நந்தகுமார், புளியம்பட்டி அருகே உள்ள காவலி பாளையத்தை சேர்ந்த குப்புசாமி, சத்தியமங்கலத்தை சேர்ந்த ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில், ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபரான சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜன்பாபு என்கிற தாடி ராஜா தப்பியோடியது தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து தப்பியோடிய தாடி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். தப்பியோடிய தாடி ராஜா கடந்த வாரம் ரேசன் அரிசி கடத்தலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஜாமீனில் வந்தவுடன் மீண்டும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    போலீசார் 12 டன் ரேசன் அரிசி, லாரி மற்றும் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து ஈரோடு உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 500 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. எனினும் மிதமான அளவு தண்ணீர் தொடர்ந்து வருவதால் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியை நெருங்கி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 104.77 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2,431 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1,800 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 500 கனஅடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,400 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு மாநகரில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, என்.எம்.மஸ் காம்பவுண்ட், அகில்மேடு வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

    சமீபகாலமாக நூலின் விலை ஏற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை குறைத்து உள்ளனர்.

    சில இடங்களில் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். நூல் விலையை ஒழுங்குமுறை படுத்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் நூல் விலை சீரானது.

    இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பேரிடியாக ஜி.எஸ்.டி.வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான ஜவுளி தொழில்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை நிலவியது.

    இந்த ஜி.எஸ்.டி வரி உயர்வுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மெர்ச் சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இன்று ஒரு நாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி இன்று ஈரோட்டில் அனைத்து ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகரில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, என்.எம்.மஸ் காம்பவுண்ட், அகில்மேடு வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

    ஜவுளி சந்தையில் உள்ள 272 தினசரி ஜவுளி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து விசைத்தறி உற்பத்தியை ஒருநாள் நிறுத்தியுள்ளனர். இந்த கடை அடைப்பு காரணமாக ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:-

    மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகள், தொடர்ந்து உயர்த்தப்படும் நூல் விலை, கொரோனா பரவல் தடுப்பூக்கான பொது முடக்கம் போன்ற காரணத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் முடங்கிப்போனது.

    விசைத்தறி, டையிங், பிரிண்டிங், பிளீச்சிங், காலண்டரிங், ஆயத்த ஆடை உள்ளிட்ட பிற ஆடை தயாரிப்பு, ஜவுளி விற்பனை என அனைத்து நிலையிலும் ஆர்டர்கள் பெற்று, குறைந்தபட்ச லாபம் கூட ஈட்ட முடியாமல், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.

    இந்நிலையில் ஜவுளிக்கான, 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை, 12 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். இதனால், அனைத்து வகையான ஜவுளி தொழிலும் மேலும் நஷ்டத்தையும், சிக்கலையும் சந்திக்கும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜவுளி விலை உயரும்.

    ஜவுளி தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளதால், நூல் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி. உயர்வை ரத்து செய்ய வேண்டும், என வலியுறுத்தி இன்று, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகையான ஜவுளி சார்ந்த நிறுவனங்களும் கடையடைப்பில் ஈடுபடுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கடந்த சில நாட்களாக கனமழை எதிரொலியாக வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. குறிப்பாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மிகவும் குறைந்து உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.30 முதல் 20 வரை விற்பனையானது. கனமழை காரணமாக வரத்து அடியோடு குறைந்ததால் மின்னல் வேகத்தில் தக்காளி விலை எகிறி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. பின்னர் வரத்து அதிகம் ஆனதால் மீண்டும் தக்காளி விலை ரூ.60 முதல் 80 வரை விற்பனையானது.

    இதேப்போல் மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது. ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி பெரிய மார்க்கெட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவு வரத்தாகி வந்தது.

    கடந்த சில நாட்களாக கனமழை எதிரொலியாக வ. உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. குறிப்பாக முருங்கைக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. இதன் எதிரொலியாக முருங்கைக்காய் விலை கிலோவுக்கு விண்ணைத் தொடும் அளவுக்கு விலை எகிறியது.

    கடந்த வாரம் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.150-க்கு விற்பனையானது. பின்னர் மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.250 முதல் ரூ.280 வரை விற்பனையானது. முருங்கைக்காய் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடுவ.உ.சி.நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் தினமும் 100 மூட்டை முருங்கக்காய்  வந்த நிலையில் தற்போது தினமும் வெறும் 6 முட்டைகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக முருங்கைக்காய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
    ஆடல், பாடல் கற்பித்தலால், வகுப்பறை கல்வியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன் ஆசிரியர், மாணவர் இடையே தோழமை உணர்வு அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் மிக குறைந்த மாணவர்களே பயின்று வந்த இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்த ஆண்டு 520 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு தளர்வாக கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட பின், ஒன்றரை ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் சிறகு முளைத்த பறவைகள் போல் பள்ளிகளுக்கு வந்தனர். சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்காமல் பாடங்களை நடத்த இந்த பள்ளியின் ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    அதன்படி, வகுப்பறைகளில் வழக்கமான கற்பித்தலை மாற்றி, பாடங்களுக்கு ஏற்ப வில்லுப்பாட்டு, நடனம், குரலிசை, ஆடல்-பாடல், என கல்வி சூழலை மாற்றி அமைத்தனர். கடந்த ஒரு மாத காலத்தில், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு வரவேற்பும் நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.

    தொடக்கத்தில் 70 சதவீதம் இருந்த மாணவர்களின் வருகைப்பதிவு தற்போது 99 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்படுவதாகவும், கற்றல் திறன் அதிகரித்திருப்பதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி கூறினார்.

    ஆடல், பாடல் கற்பித்தலால், வகுப்பறை கல்வியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன் ஆசிரியர், மாணவர் இடையே தோழமை உணர்வு அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அரசு பள்ளிகளுக்கு வரும் பலதரப்பட்ட மாணவர்களின் மனநிலையையும் கவனித்து ஒருமுகபடுத்த யோகாவும், உடற்பயிற்சியும், வகுப்பறைகளை தாண்டிய புத்துணர்வை அவர்களுக்கு உருவாக்குகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசின் நிதியை எதிர்பாராமல், ஆசிரியர்களே இணைந்து ரூ.2.50 லட்சம் செலவிட்டு பள்ளி வளாகத்தை அழகிய வண்ண பூச்சுகளுடன் மெருகேற்றி உள்ளனர். பொது சுகாதாரம், போக்குவரத்து விதிகள், நல்பழக்கங்கள், பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் படக்காட்சிகளுடன், அறிவியல், கணிதம், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களை எளிதில் புரிய வைக்கும் ஓவியங்களும் சுவர்களை அலங்கரித்துள்ளன.

    மூத்தோர் சொல்மிக்க பொன்மொழிகளும் ஆங்காங்கே அச்சிடப்பட்டுள்ளன. கட்டமைப்பிலும், கற்பித்தலிலும் புதுமையை புகுத்திய அரசு பள்ளியின் ஆசிரியர்கள் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

    கொடிவேரி அணையில் 2 மாதமாக குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தினமும் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தடுப்பணையில் குளித்து மகிழ்வார்கள்.

    அணை பகுதியில் விற்கப்படும் மீன்களை சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தடுப்பணையில் அதிகளவு தண்ணீர் கொட்டி வருவதால் ஏற்கனவே தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து இன்று 6 ஆயிரம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பணையில் தண்ணீர் அதிகளவு ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொடிவேரி தடுப்பணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 58 நாட்களாக இந்த தடை நீடித்து வருகிறது.

    இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளே செல்ல தடை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

    2 மாதமாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    திம்பம் மலைப்பாதையில் நேற்று இரவு 27-வது கொண்டை ஊசிவளைவு அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டைஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக தினந்தோறும் கார், லாரி, பஸ், வேன் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் திம்பம், ஆசனூர், தாளவாடி, தலமலை ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதமாக விட்டு விட்டு தொடர் மழை பெய்துவருகிறது. இதனால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கொடுத்து ஓடுகிறது. குளம், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.

    இந்த நிலையில் 2 நாட்களாக தாளவாடி சுற்று வட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதை 27-வது கொண்டை ஊசிவளைவு அருகே திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

    இதுபற்றி வாகன ஓட்டிகள் ஆசனூர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திக்கு சென்ற ஆசனூர் போலீசார் மண்சரிவு ஏற்பட்டுள்ள இடத்தில் தடுப்புகள் அமைத்தனர். வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகவும் மெதுவாகவும் செல்ல அறிவுறுத்தி வருகின்றனர். மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை.


    இன்று (திங்கட்கிழமை) இரவில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைக்க உள்ளனர்.
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25-ந் தேதி கோவிலின் முன்பு கம்பங்கள் நடப்பட்டன.

    தினமும் பக்தர்கள் கம்பங்களுக்கு புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் சின்ன மாரியம்மன் கோவில் வளாகத்தில் குண்டம் தயார் செய்வதற்கு தேவையான கரும்புகள் (விறகு) அடுக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று காலையில் குண்டம் தயார் செய்யப்பட்டது.

    கோவிலின் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் குண்டம் இறங்கினார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் பூசாரிகள் குண்டம் இறங்குவதை காணுவதற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் சுற்றிலும் நின்று கொண்டு குண்டம் விழாவை பார்த்தனர். விழாவையொட்டி சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதன்பிறகு தேரோட்டம் நடந்தது. அம்மனின் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) இரவில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைக்க உள்ளனர். தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 8-ந் தேதி இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி இரவு மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.
    ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 3 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது மழை எதிரொலியாக 350 முதல் 500 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கிடுகிடு என உயர்ந்து வருகிறது.

    குறிப்பாக தக்காளி விலை கடந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ.20 முதல் 30 வரை விற்பனையானது. கனமழை காரணமாக வரத்து அடியோடு குறைந்ததால் மின்னல் வேகத்தில் தக்காளி விலை எகிறி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது.

    பின்னர் வரத்து அதிகம் ஆனதால் மீண்டும் தக்காளி விலை ரூ.60 முதல் 80 வரை விற்பனையானது. இதேப்போல் மற்ற காய்கறிகள் விலையும் எகிறியது.

    ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி பெரிய மார்க்கெட்டில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    கடந்த சில நாட்களாக கனமழை எதிரொலியாக வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் கத்திரிக்காய், பீன்ஸ், பட்ட அவரை, முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியது.

    குறிப்பாக முருங்கைக்காய் விலை கிலோவுக்கு விண்ணைத் தொடும் அளவுக்கு விலை எகிறியது. நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 150 க்கு விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200 க்கு விற்பனை ஆனது. இதனால் காய்கறி வாங்க பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும் 3 டன் முருங்கைக்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படும். தற்போது மழை எதிரொலியாக 350 முதல் 500 கிலோ வரை மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாகவே இன்று முருங்கைக்காய் விலை உயர்ந்தது.

    இதேபோல் மற்ற காய்கறி விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஈரோடு மார்க்கெட்டில் இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை கிலோவுக்கு வருமாறு:-

    கத்திரிக்காய் - 130, பீன்ஸ் -100, பீர்க்கங்காய், புடலங்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் - 80, முட்டைக்கோஸ் - 50, கேரட் - 70, பீட்ரூட் - 80, பட்ட அவரை - 100, கருப்பு அவரை - 130 - 150, சின்ன வெங்காயம் - 50, பெரிய வெங்காயம் - 45, தக்காளி - ரூ.100 முதல் 120.
    மாணவ -மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அல்லது தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியதை அடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ- மாணவிகள் நேரடி வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் சில தினங்களாக ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுதவிர பள்ளி அல்லாத பிற இடங்களிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் முதற்கட்டமாக பாலியல் தொந்தரவு குறித்து மாணவியர் புகார் தெரிவிக்க வசதியாக கல்வி உதவி வழிகாட்டி மையம், குழந்தைகள் உதவி எண் குழந்தைகள் நலக் குழுமத்தின் வாட்ஸ்-அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவ மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொந்தரவுகள் குறித்து தெரிவிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் திண்டலில் நடந்தது. இதில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 420-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் போக்சோ சட்ட பிரிவு குறித்தும், பள்ளியில் வீட்டில் பொது இடங்களில் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாணவ மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொந்தரவு குறித்து தகவல் தெரிவிக்க முன் வரவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக்கொண்டார். பள்ளியில் புகார் பெட்டி பயன்பாடு, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    மாணவ -மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அல்லது தங்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள் குறித்தும் தைரியமாக புகார் தெரிவிக்கும் வகையில் அந்தந்த பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இந்த புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

    அதில் மாணவ- மாணவிகள் தங்கள் பிரச்சனையை குறித்து தெரிவிக்கலாம். ஒவ்வொரு புகார் பெட்டிக்கும் இரண்டு சாவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சாவி மாவட்ட கல்வி அலுவலகத்திலும் மற்றொரு சாவி அந்தந்த பள்ளிகளுக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திலும் இருக்கும். புகார் பெட்டி குறிப்பிட்ட நாட்களில் ஒருமுறை திறக்கப்படும். புகார்பெட்டியில் யார் மீதாவது புகார் இருந்தால் அது குறித்து முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 140 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த தேர்த்திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான்சேவியர் தலைமையில், காங்கேயம் குழந்தை மாதா திருத்தல அதிபரும், பங்குத்தந்தையுமான கிளாடியஸ் திருப்பலி (பூஜை) நிறைவேற்றினார். பின்னர் அமல அன்னையின் திருவிழா கொடியை ஏற்றி வைத்தார்.

    அன்னை மரியாள் உருவம் பதித்த கொடியை பங்குத்தந்தையர்கள் ஏற்றியபோது கூடி இருந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். விழாவையொட்டி நற்கருணை (புதுநன்மை) வழங்கும் வழிபாடும் நடந்தது. விழாவில் உதவி பங்குத்தந்தை ராயப்ப தாஸ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு சேலம் செவ்வாய்ப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய உதவி பங்குத்தந்தை சார்லஸ் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது. 9-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை இம்மானுவேல் தலைமையில் நவநாள் திருப்பலி நடக்கிறது.

    10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ரத்தினபுரி புனித சின்னப்பர் ஆலய பங்குத்தந்தை அருள் இருதயராஜ் நவநாள் திருப்பலி, ஆராதனை மற்றும் திருப்பலி நடக்கிறது. நவநாள் திருப்பலிகளுடன் சிறப்பு மறையுரை நடக்கிறது.

    12-ந் தேதி புனித அமல அன்னை தேர்த்திருவிழா சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. அன்றைய தினம் காலை 6 மணிக்கு ஈரோடு மறைவட்ட முதன்மை குரு ஜான் சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு மறைமாவட்ட வக்கீலும் பங்குத்தந்தையுமான ஆரோக்கிய பிரதீப் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோவைப்புதூர் குழந்தை ஏசு திருத்தல உதவி பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இந்த 3 திருப்பலிகளின் போதும், திருப்பலி முடிந்ததும் ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்பட உள்ளது.

    இதுபற்றி பங்குத்தந்தை ஜான் சேவியர் கூறும்போது, ‘புனித அமல அன்னை தேர்த்திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி திருவிழா சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 12-ந் தேதி தேர்த்திருவிழா அன்று மாலையில் தேர் வீதி ஊர்வலம் நடைபெறாது. அதற்கு பதிலாக ஆலயத்தை சுற்றி வேண்டுதல் தேர் எடுக்கப்படும்’ என்றார்.
    கோபி உழவர் சந்தையில் கடந்த மாதம் காய்கறிகள் மொத்தம் ரூ.77 லட்சத்து 2 ஆயிரத்து 441-க்கு விற்பனை ஆனது.
    கோபி:

    கோபி அருகே உள்ள மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியாம்பாளையம், கொளப்பலூர், வெள்ளாங்கோவில், சுண்டப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

    கடந்த நவம்பர் மாதம் 735 வியாபாரிகள் 2 லட்சத்து 2 ஆயிரத்து 782 கிலோ காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த காய்கறிகள் மொத்தம் ரூ.77 லட்சத்து 2 ஆயிரத்து 441-க்கு விற்பனை ஆனது. மொத்தம் 965 நுகர்வோர்கள் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி சென்று உள்ளனர்.

    இந்த தகவலை மொடச்சூர் உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    ×