என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 671 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது. இதன் காரணமாக இந்த ஆண்டில் 2 முறை அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டது.

    அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையிலும் நீர்மட்டம் தொடர்ந்து 100 அடிக்கு மேலே இருந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக பவானி சாகர் அணையில் 105 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி அணையின் நீர்மட்டம் 104 அடியை எட்டியது. தொடர்ந்து 105 அடியை எட்டும் நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 27 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியில் நீடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 104.76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 671 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலில் 500 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும், குடிநீருக்கு 100 கனஅடியும் என மொத்தம் 2900 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் பேரை அரிவாளால் வெட்டிய 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ளது இடையன் காட்டு வலசு. இந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக மணிகண்டன் காளீஸ்வரன் (44), சிவக்குமார் (38) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு விற்பனை முடிந்ததும் இவர்கள் 2 பேரும் கடையில் வசூலான பணத்தை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

    அவர்கள் 2 பேரும் கண்ணாங்காட்டு பாளையம் பிரிவு என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது 4 வாலிபர்கள் திடீரென அவர்களை வழிமறித்தனர். மேலும் டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை கேட்டு மிரட்டினர்.

    ஆனால் மணிகண்டன் காளீஸ்வரன், சிவக்குமார் ஆகியோர் பணத்தை தர மறுத்தனர். இதையடுத்து 4 பேர் கும்பல் திடீரென அரிவாளால் 2 பேரையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் கடத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டாஸ்மாக் ஊழியர்களை பணம் கேட்டு மிரட்டி அரிவாளால் வெட்டியது கூடக்கரை என்ற பகுதியை சேர்ந்த பழனிசாமி (21), அன்பழகன் (21) என்பது தெரியவந்தது. மேலும் அந்த கும்பலை சேர்ந்த 2 பேர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி அருகே பிளஸ்-2 மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் அருகே உள்ள கண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் சவுமியா (17).

    இவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள வெளியங்காட்டுப்புதூரில் உள்ள தனது பெரியப்பா ரவி என்பவரது வீட்டில் தங்கி சிவகிரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி சவுமியாவை அவரது பெரியப்பா வீட்டு வேலைகளை கற்று கொள்ள வேண்டும் என்று கூறி திட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி சவுமியா ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார்.

    அந்த கடிதத்தில் பெரியப்பா உங்கள் மீது எந்த கோபமும் இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று உருக்கமாக எழுதி இருந்தார். இதையடுத்து ரவி தனது தம்பி பழனிச்சாமிக்கு தகவல் தெரிவித்தார். அவரும் வெளியங்காட்டுபுதூருக்கு விரைந்து வந்தார். பின்னர் அனைவரும் மாணவியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ரவி வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் ஒரு பெண் பிணம் மிதப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக மிதந்த பெண்ணை மீட்டு விசாரித்தனர். அப்போது அது மாயமான மாணவி சவுமியா என்று தெரிய வந்தது.

    இதையடுத்து மாணவியின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மாணவி உடலை மீட்டு போலீசார் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    மேலும் மாணவி உயிரிழப்புக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கவுந்தபாடி அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தனியார் கல்லூரி ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்க பாளையம் டேம் வீதியை சேர்ந்தவர் செங்கோட்டையன் (70). இவர் விராலிமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து கல்லூரிக்கு சென்று வருகிறார்.

    கல்லூரிக்கு செல்வதற்காக தனது மொபட்டில் கவுந்தப்பாடி நால்ரோடு வழியாக ஈரோடு செல்லும் ரோட்டில் சென்று சாலையை கடக்க முயன்றார். அப்போது கவுந்தப்பாடியை நோக்கி அய்யம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்து மொபட் மீதுமோதினார்.

    இதில் செங்கோட்டையன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டையன் இறந்தார்.
    இச்சம்பவம் குறித்து அவரது மகன் ராம்குமார் கொடுத்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.
    முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் உறவினர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்பட 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாநகர் பகுதியில் முனியப்பன் கோவில் வீதியில் சிவானந்தம் என்பவர் வீட்டில் இன்று காலை முதல் 5-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.

    இதேபோல் ஈரோடு பண்ணை நகரில் உள்ள சிவானந்தத்தின் தம்பி செந்தில்நாதன் என்பவர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. இதேபோல் பாரி வீதியில் உள்ள உறவினர் வீடு, கணபதி நகரில் உள்ள உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் பவானி, சித்தோடு உள்பட ஈரோடு மாவட்டம் முழுவதும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள் வீடுகள் உள்பட 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் சோதனை நடந்து வரும் வீடுகள் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.



    புஞ்சைபுளியம்பட்டி அருகே கூலித்தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புஞ்சைபுளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்த குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் நேற்று இரவு அண்ணாமலைக்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    அப்போது உறவினர் அரிவால் பின்பகுதியால் அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அண்ணாமலை வீட்டுக்கு சென்று தூங்க சென்று விட்டார்.

    இன்று காலை அண்ணாமலை நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்றனர். அப்போது அண்ணமலை இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சத்தியமங்கலம் டி.எஸ்.பி. ஜெயபால், புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி ஆகியோர் சம்பவம் வந்து விசாரணை நடத்தினார். அண்ணமலை உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணமலையுடன் தகராறில் ஈடுபட்ட உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் எந்த காரணத்திற்காக தகராறு ஏற்பட்டது. மேலும் அண்ணாமலையை தாக்கியவர்கள் குறித்து விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூலித்தொழிலாளி அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நடப்பாண்டில் ரெயில் மோதி இறந்த 58 பேரில் 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரின் அடையாளம் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பாண்டில் ரெயில் மோதி மற்றும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 48 ஆண்கள், 10 பெண்கள் உள்ளிட்ட 58 பேர் பலியாகி உள்ளனர்.

    ஈரோடு ரங்கம்பாளையம் மற்றும் மகுடஞ்சாவடி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் 2 காதல் ஜோடிகள் மற்றும் வாலிபர் ஒருவர் என மொத்தம் 5 பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மீதமுள்ளவர்களில் 39 ஆண்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 47 பேர் ரெயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது ரெயில் மோதி இறந்துள்ளனர். ஓடும் ரெயில்களில் இருந்து 6 பேர் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

    இதில் ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை மட்டும் சங்ககிரி போலீசாருக்கு ரெயில்வே போலீசார் மாற்றி உள்ளனர். நடப்பாண்டில் ரெயில் மோதி இறந்த 58 பேரில் 2 பெண்கள் உள்ளிட்ட 10 பேரின் அடையாளம் மட்டும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.
    வீட்டுமனை நிலத்தில் திடீரென பள்ளம் உருவானது. அதில் புதையல் இருப்பதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் திரண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எல்லமடையில் கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம், அந்த ஆலையில் வேலை செய்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனைகளை வழங்கியது.

    வீட்டுமனைகளை பெற்ற தொழிலாளர்கள் கட்டிடம் கட்டாமல் நிலத்தை அப்படியே போட்டு வைத்திருந்தனர். செடிகள் கொடிகள் அங்கு முளைத்துவிட்டதால், இடத்தின் உரிமையாளர் கடந்த 2 நாட்களாக அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அப்போது ஒரு வீட்டுமனையில் திடீரென 10 அடி ஆழத்துக்கு பள்ளம் உருவானது. உடனே சுத்தம் செய்தவர்கள் உள்ளே எட்டிப்பார்த்தார்கள். அதில் ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு குழி தெரிந்தது.

    இதற்கிடையே பள்ளம் உருவான இடத்தில் புதையல் இருப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டுவிட்டார்கள்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்கள்.

    இந்த பகுதியை சேர மன்னர்களும் மற்றும் பாரி மன்னரும் ஆண்டுள்ளார்கள். அதனால் குழிக்குள் புதையல் இருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில் உறுதியாக நம்பப்பட்டது. இதையடுத்து போலீசார் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து குழி ஏற்பட்ட இடத்தை தோண்டினார்கள். ஆனால் புதையல் எதுவும் கிடைக்கவில்லை.

    எனினும் இந்த பகுதியில் கட்டிடம் கட்டும்போது, கவனமாக இருக்கவேண்டும் என்று அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மனையின் உரிமையாளர்களிடம் கூறிவிட்டு சென்றார்கள்.

    இதுகுறித்து அப்பகுதியினர் கூறும்போது, திடீர் பள்ளம் குறித்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு நடத்தி உண்மையை விளக்க வேண்டும் என்றார்கள்.
    கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் புனரமைப்பு பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. இதற்கான திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தெய்வீக காசி என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை அனைத்து பக்தர்களும் பார்க்கும் வகையில் கோவில்களில் திரை அமைத்து, ஒளிபரப்ப பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    பிரசித்திபெற்ற கொடுமுடி மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவிலிலும் இதற்கான ஏற்பாடுகளை மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க. நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

    ஆனால் கோவில் செயல் அதிகாரி, கோவிலுக்குள் ஒளிபரப்ப கூடாது என்று அனுமதி மறுத்ததாக தெரிகிறது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து சரஸ்வதி எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜ.க.வினர் நேற்று காலை கோவிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், கோவில் நடையை அடைத்துவிட்டார்கள். எனவே நீங்கள் கோவிலுக்குள் இருக்கக்கூடாது என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோவிலைவிட்டு வெளியேறினார்கள்.

    அதன்பின்னர் கோவில் புதுச்சத்திரத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற தெய்வீக காசி நிகழ்ச்சி திரையிடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 24½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-ம் அலை வேகமாக பரவியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் சிறப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாபெரும் முகாம் நடத்தப்பட்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 14 கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 23 லட்சத்து 77 ஆயிரத்து 315 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 லட்சத்து 9 ஆயிரத்து 100 பேர் உள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி மொத்தம் 24 லட்சத்து 54 ஆயிரத்து 232 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கருங்கல்பாளையம் குயில் தோப்பு பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் வரத்து மிதமான அளவே வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய விளை நிலங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணை 100 அடியை எட்டி இருந்தது.

    இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்ததன் காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டில் 2-வது முறையாக பவானிசாகர் அணை 100 அடியை தாண்டியது. தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வந்தது.

    கடந்த நவம்பர் மாதம் பவானிசாகர் அணை 104 அடியை எட்டியது. அதிலிருந்து தொடர்ந்து 104 அடியில் நீடித்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கி உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.85 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2421 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 1800 கன அடியும், தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 100 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அணையின் பாதுகாப்பை கருதி 105 அடியை எட்டியதும் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்படும். தற்போது அணை 104.85 அடியை எட்டி உள்ளதால் பொதுப்பணித் துறை, வருவாய் துறை, பவானிசாகர் பேரூராட்சி சார்பில் தண்டோரா மூலம் பவானி ஆற்றங்கரை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி பவானிசாகர் ஆற்றங்கரையோரம் உள்ள சத்தியமங்கலம், அக்ரஹாரம், தொட்டம்பாளையம், பாத்திமா நகர், அரியப்பம்பாளையம், சதுமுகை போன்ற பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் பவானி ஆற்றங்கரையோரம் மக்கள் துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, கால்நடைகளை ஆற்றங்கரைப் பகுதிக்கு கொண்டு செல்லவோ செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் வரத்து மிதமான அளவே வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் தொடர்ந்து வருவாய் துறை பொதுப்பணித் துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    ×