search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவர்களுடன் சேர்ந்து கும்மி பாட்டு பாடி மகிழும் ஆசிரியை
    X
    மாணவர்களுடன் சேர்ந்து கும்மி பாட்டு பாடி மகிழும் ஆசிரியை

    மாணவர்களுக்கு ஆடல்-பாடலுடன் கற்பிக்கும் திறனை வளர்க்கும் ஈரோடு அரசு பள்ளி

    ஆடல், பாடல் கற்பித்தலால், வகுப்பறை கல்வியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன் ஆசிரியர், மாணவர் இடையே தோழமை உணர்வு அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் மிக குறைந்த மாணவர்களே பயின்று வந்த இந்த பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்த ஆண்டு 520 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா ஊரடங்கு தளர்வாக கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட பின், ஒன்றரை ஆண்டுகளாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் சிறகு முளைத்த பறவைகள் போல் பள்ளிகளுக்கு வந்தனர். சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக்காமல் பாடங்களை நடத்த இந்த பள்ளியின் ஆசிரியர்கள் திட்டமிட்டிருந்தனர்.

    அதன்படி, வகுப்பறைகளில் வழக்கமான கற்பித்தலை மாற்றி, பாடங்களுக்கு ஏற்ப வில்லுப்பாட்டு, நடனம், குரலிசை, ஆடல்-பாடல், என கல்வி சூழலை மாற்றி அமைத்தனர். கடந்த ஒரு மாத காலத்தில், ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு வரவேற்பும் நல்ல பலனும் கிடைத்திருக்கிறது.

    தொடக்கத்தில் 70 சதவீதம் இருந்த மாணவர்களின் வருகைப்பதிவு தற்போது 99 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களின் தனித்திறன்கள் வெளிப்படுவதாகவும், கற்றல் திறன் அதிகரித்திருப்பதாகவும் பள்ளியின் தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி கூறினார்.

    ஆடல், பாடல் கற்பித்தலால், வகுப்பறை கல்வியை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்வதுடன் ஆசிரியர், மாணவர் இடையே தோழமை உணர்வு அதிகரித்திருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். அரசு பள்ளிகளுக்கு வரும் பலதரப்பட்ட மாணவர்களின் மனநிலையையும் கவனித்து ஒருமுகபடுத்த யோகாவும், உடற்பயிற்சியும், வகுப்பறைகளை தாண்டிய புத்துணர்வை அவர்களுக்கு உருவாக்குகிறது.

    பள்ளிக்கு வரும் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க அரசின் நிதியை எதிர்பாராமல், ஆசிரியர்களே இணைந்து ரூ.2.50 லட்சம் செலவிட்டு பள்ளி வளாகத்தை அழகிய வண்ண பூச்சுகளுடன் மெருகேற்றி உள்ளனர். பொது சுகாதாரம், போக்குவரத்து விதிகள், நல்பழக்கங்கள், பொது அறிவு ஆகியவற்றை போதிக்கும் படக்காட்சிகளுடன், அறிவியல், கணிதம், சமூகவியல் உள்ளிட்ட பாடங்களை எளிதில் புரிய வைக்கும் ஓவியங்களும் சுவர்களை அலங்கரித்துள்ளன.

    மூத்தோர் சொல்மிக்க பொன்மொழிகளும் ஆங்காங்கே அச்சிடப்பட்டுள்ளன. கட்டமைப்பிலும், கற்பித்தலிலும் புதுமையை புகுத்திய அரசு பள்ளியின் ஆசிரியர்கள் முயற்சி வரவேற்பை பெற்றுள்ளது.

    Next Story
    ×