என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை ரசீதுகளில் பயிர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகள் கையெழுத்து பெற வேண்டும்.

    ஈரோடு:-

    ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். முறையான ஆவணங்கள் இன்றி, விற்பனை செய்த, 17,900 ரூபாய் மதிப்பிலான, 42 கிலோ எடையுள்ள இரண்டு விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

    இதுகுறித்து துணை இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது:- ஆடி பட்டத்தை முன்னிட்டு சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் வட்டாரங்களில் காய்கறிகள், மக்காசோளம் போன்றவை பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்க ளில் ஆய்வு செய்யப்பட்டது.

    விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை, வெளி மாநிலங்களில் வாங்கியமைக்கான சான்று பெற்ற நெல் விதைகளுக்கான படிவம்–2 போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 17,900 ரூபாய் மதிப்பிலான, 42 கிலோ எடை உள்ள இரண்டு விதை குவியல்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு மற்றும் விலை விபரங்களை பயிர் வாரியாகவும், ரகம் வாரியாகவும் எழுதப்பட்டு விவசாயிகள் பார்வையில் படும்படி தகவல் பலகை இருக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை ரசீதுகளில் பயிர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகள் கையெழுத்து பெற வேண்டும். இதை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது விதை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது
    • நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோபி:

    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 102 அடியை தொட்டது. இதையொட்டி பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆயிரத்து 772 கன கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மேலும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடுவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குளிக்கும் இடத்தில் தண்ணீர் அதிகளவு செல்கிறது.

    இதையொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பார்த்து ரசிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • ஈரோடு அடுத்த மேட்டுக்கடை மர புளியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர்.
    • 35 ஆண்டுகள் பழமையான ஒரு சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மேட்டுக்கடை மர புளியான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் (55). இவருக்கு அதே பகுதியில் வீடு அதையொட்டி தோட்டம், வயல் வெளிகள் உள்ளன. இவர் தனது வீட்டின் அருகிலேயே தோட்டத்தில் தானாக முளைத்த சில சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.

    பாதுகாப்புக்காக வீடு, தோட்டம் சுற்றி சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி வைத்திருந்தார். தோட்டத்தை சுற்றி மின்வேலிகள் அமைத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் இவரது தோட்டத்திற்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்தது.

    அவர்கள் 35 ஆண்டுகள் பழமையான ஒரு சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. தோட்டத்துக்குள் மர்ம நபர்கள் புகுவது, சந்தன மரத்தை வெட்டி கடத்தி செல்வது அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா கட்சியில் பதிவாகி இருந்தது.

    இன்று காலை ராமசாமி தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சந்தன மரம் வெட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி 5 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே இவரது தோட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடத்த க்கது.

    • பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சத்தியமங்கலம் ஆற்று பாலத்தை தொட்டபடி உபநீர் செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பவானிசாகர் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 101 அடியை எட்டியது.

    எந்த நேரமும் 102 அடியை எட்டும் என்ற நிலையில் இன்று காலை பவானிசாகர் அணை 22- வது முறையாக 102 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 6,772 கனஅடி நீர் அப்படியே பவானிசாகர் அணையின் கீழ் மதகுகளில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தொட்டம்பாளையம், சத்தியமங்கலம், ஆற்று பாலம், குமாரபாளையம், பாத்திமா நகர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை ஆற்றங்கரை இருப்புறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக சத்தியமங்கலம் ஆற்று பாலத்தை தொட்டபடி உபநீர் செல்கிறது. பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறையினர் இந்த பகுதிகளில் முகாமிட்டு ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கொடுமுடி காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட இலுப்பை தோப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    ஈரோடு:

    கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை ஏற்கனவே தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்து 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது.

    அதேபோல் முனியப்பன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 200 வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாசில்தார் சதீஷ்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துரித நடவடிக்கை எடுத்து வருகிறார். அருகிலுள்ள திருமண மண்டபத்தில் மக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கருங்கல்பாளையம் போலீசார், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதேபோல் பவானி தினசரி மார்க்கெட் அருகே உள்ள பரமேஸ்வரர் வீதி, பூக்கடை அருகே உள்ள பாலக்கரை மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி நகர், காவிரி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள பள்ளி மற்றும் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

    அந்தப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லாதபடி பவானி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் சில ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.

    இதேபோல் கொடுமுடி காவிரி ஆற்றங்கரை பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே தாழ்வான பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொடுமுடி பேரூராட்சிக்குட்பட்ட இலுப்பை தோப்பு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்த பகுதியில் 44 குடும்பங்களை சேர்ந்த 165 பேர் அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு தேவையான வசதிகளை கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத், வருவாய் ஆய்வாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளை வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    • இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஒரே நாளில் மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை

    1 லட்சத்து 34 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 205 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 479 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஆடிவெள்ளியையொட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
    • இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பூ மார்க்கெட்டில் தினமும் கோட்ட பாளையம், மாதம் பாளையம், தோட்ட சாலை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பூக்கள் கொண்டுவரப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைந்து வந்த நிலையில் இன்று வரலட்சுமி நோன்பு மற்றும் நாளை ஆடிவெள்ளியை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

    இன்று புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1800-க்கும், ஒரு கிலோ முல்லை ரூ.700-க்கும், ஒரு கிலோ அரளி ரூ.280-க்கும் விற்கப்பட்டது. இன்றும் மூன்று நாட்களுக்கு பூக்கள் விலை உயர்ந்து காணப்படும் என்றும் அதன் பிறகு பூக்கள் விலை குறைந்து விடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
    • ருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சின்னகோசணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூதநாச்சியம்மன் மற்றும் நாட்ராயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலின் திருவிழா ஓராண்டுக்கு ஒரு முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக 1200க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு 60 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு விருந்து அளிக்கப்படுவது விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.

    இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த கோவிலின் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை. அதனைத் தொடர்ந்து மூன்று வருடத்துக்கு பிறகு இந்த வருடத்திற்கான திருவிழா ஆனி மாதம் 28-ந் தேதி மஞ்சள் முடிப்புடன் தொடங்கியது. கடந்த செவ்வாய் இரவு அணி வைத்து நிகழ்ச்சி நடந்தது.

    அதனைத் தொடர்ந்து நேற்று இரவு காட்டு கோவிலுக்கு படைக்களம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. அதனைத் தொடர்ந்து 1200 க்கும் மேற்பட்ட ஆட்டு கிடாய்கள் வாங்கப்பட்டு அதனை வெட்டி பொதுமக்களுக்கு கிடாய் விருது நடந்தது. இதற்காக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சமையல் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக கோவில் அருகே பெரிய சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு கிடாய் விருந்து பொதுமக்களுக்கு பரிமாறப்பட்டது.

    இதில் நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மேலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்று திருவிழாவை முன்னிட்டு பூத நாச்சி அம்மன் மற்றும் நாட்ராய சாமி சிறப்பு அலங்காரத்தில் பொதுமக்களுக்கு அருள் பாலித்தனர். அதைத்தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமை மறுபூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    • குடும்ப தகராறு காரணமாக வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் பாலச்சந்தர் (34). இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மருதவல்லி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், சன்மதி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

    பாலச்சந்தர் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து உள்ளார். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் பாலசந்தரின் மனைவி மருதவல்லி மற்றும் தந்தை பழனி ஆகியோர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் பாலச்சந்தர் தொடர்ந்து மது குடித்து விட்டு வந்து குடும்பத்தின–ருடன் தகராறு செய்து வந்து உள்ளார்.

    இதனால் மருதவல்லி கோபித்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு கோபி அருகே உள்ள கோட்டு புள்ளம் பாளையத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதன் காரணமாக மன உளைச்ச–லில் காணப்பட்ட பாலச்சந்தர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்க சென்று உள்ளார்.

    மறுநாள் காலை வெகு நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது பாலச்சந்தர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி, அம்மன் நகர் மாரியம்மன் கோவில் அருகே, புளியம்பட்டி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 3 பாக்கெட்டுகளில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

    அதை பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (33) என்பவரிடம் இருந்து விற்பனைக்காக வாங்கி வந்ததும் தெரியவந்தது.விசாரணையில், அவர்கள் புளியம்பட்டி, எரங்காட்டு ப்பாளையத்தைச் சேர்ந்த செல்வகுமா ர் (25), செங்குந்தபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (27), புளியம்பட்டியைச் சேர்ந்த அன்சர் ஹசன் (29) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்த னர். பின்னர், செல்வகுமார், சதீஷ்குமார், அன்சர் ஹசன் ஆகியோரை கைது செய்தனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது.
    • பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து. 101 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 101.50 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை வினாடிக்கு 2,327 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் காலி ங்கராயன் பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பவானி ஆற்றுக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாக்காலுக்கு 5 கன அடியும் என மொத்தம் 105 கன அடி தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் 102 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    தற்போது பவானிசாகர் அணையின் அடி 101.50 அடியை தாண்டி உள்ளதால் இன்னும் ஒரு நாளில் 102 அடியை எட்டி விடும். இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் இரு புறங்களிலும் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள பாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணை மேல் பகுதியில் பொதுப்ப ணித்துறை, வருவாய் துறையினர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணை, பெரும்ப ள்ளம் அணை, வரட்டுபள்ளம் அணை யிலும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி, ஜகளியூர் புலிட்ட மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதிகளில் 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.
    • கடம்பூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர்பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் ஆகிய இரண்டு காட்டாற்றுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் ஆசனூர் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் லேசாக சாரல் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    குளியாடா, தேவர் நத்தம், கோட்டாடடை, மாவள்ளம், ஓசட்டி மற்றும் வனப்பகுதியில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் தரைப்பாலத்தைக் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தது.

    இதனால் ஆசனூரில் இருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதேபோல் ஆசனூர் ஓங்கல்வாடி சாலையில் உள்ள தரைப்பாலத்தையும் காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்ததால் அங்கும் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் அரிகியம், மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி, ஜகளியூர் புலிட்ட மலை கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதிகளில் 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.

    இந்நிலையில் தற்போது கடம்பூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள குரும்பூர்பள்ளம் மற்றும் சர்க்கரைப்பள்ளம் ஆகிய இரண்டு காட்டாற்றுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மார்க்கம்பாளையம் செல்லும் அரசு பஸ் குரும்பூர் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பள்ளத்தை கடக்க முடியாமல் கரையிலேயே நிற்கிறது. இதனால் மலை கிராம மக்கள் தங்களது கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அன்றாட தேவைகளுக்கு பொருட்களை வாங்குவதற்கு கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    மாக்கம்பாளையம் மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனை செய்வதற்காக தோளில் மூட்டைகளை சுமந்தபடி காட்டாற்று நீரில் இறங்கி ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.

    இதேபோல் நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெங்குமரஹடா, கல்லாம் பாளையம், அல்லிமாயாரு ஆகிய வன கிராமங்களில் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மாயாற்றைக் கடக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனினும் ஒரு சிலர் ஆபத்தான முறையில் பரிசலில் ஆற்றை கடந்து செல்கின்றனர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றைக் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×