search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு-  கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
    X
    பவானி ஆற்றில் கீழ் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

    • பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சத்தியமங்கலம் ஆற்று பாலத்தை தொட்டபடி உபநீர் செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதுபோல் பவானிசாகர் அணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் பவானிசாகர் அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 101 அடியை எட்டியது.

    எந்த நேரமும் 102 அடியை எட்டும் என்ற நிலையில் இன்று காலை பவானிசாகர் அணை 22- வது முறையாக 102 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த 6,772 கனஅடி நீர் அப்படியே பவானிசாகர் அணையின் கீழ் மதகுகளில் இருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் தொட்டம்பாளையம், சத்தியமங்கலம், ஆற்று பாலம், குமாரபாளையம், பாத்திமா நகர், அரியப்பம்பாளையம் உள்ளிட்ட பவானி ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை ஆற்றங்கரை இருப்புறங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக சத்தியமங்கலம் ஆற்று பாலத்தை தொட்டபடி உபநீர் செல்கிறது. பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறையினர் இந்த பகுதிகளில் முகாமிட்டு ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×