என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை கசிவு நீர் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்து அவர்களும் பயனடைவதற்காக தண்ணீர் வழங்குகிறோம்.
    • தற்போது தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை முற்றிலுமாக அகற்றி விட்டோம்.

    பெருந்துறை:

    கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆயக்கட்டு பாசனத்தில் இல்லாத விவசாயிகள் இரவு நேரங்களில் பெரிய ஓஸ் பைப்புகளை பயன்படுத்தி தண்ணீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி பாசனத்துக்கு பயன்படுத்தி வருவதாக பொதுப்பணித்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டது.

    ஏற்கனவே வாய்க்கால் நீர்க்கசிவு காரணமாக போதுமான அளவிற்கு தண்ணீரை கடைமடைக்கு சப்ளை செய்ய முடியாமல் உள்ள நிலையில் இரவு நேரங்களில் வாய்க்காலில் இருந்து ஓஸ் பைப்புகள் மூலம் தண்ணீரை உறிஞ்சி திருடுவதால் இதனைத் தடுக்க வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நீர்வளத்துறையின் கவுந்தப்பாடி உதவி பொறியாளர் செந்தில்குமார், கோபி மேற்கு உதவி பொறியாளர் தினேஷ் மற்றும் லஷ்கர்கள் உள்ளிட்ட நீர்வளத்துறை ஊழியர்கள் இரவு கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ரோந்து சென்றனர்.

    பெத்தாம்பாளையத்தில் இருந்து கோபி வரையிலும் உள்ள கீழ்பவானி மெயின் வாய்க்கால் கரையில் சென்றபோது கோபி அருகே வெள்ளாங்கோவில் பகுதியில் 39-வது மைல் பகுதியிலும், 39/5-வது மைல் பகுதியிலும் பெரிய ஓஸ் பைப்புகளை பயன்படுத்தி விவசாய நிலத்துக்கு தண்ணீரை திருட்டுத்தனமாக கொண்டு செல்வதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    இதையடுத்து தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை அங்கிருந்து அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறும்போது, கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு டிசம்பர் இறுதி வரையிலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதுபோன்ற தண்ணீர் திருட்டு நடைபெற்றால் ஆயக்கட்டு பாசன விவசாயிகளை பாதிக்கும் என்பதால் இரவு நேரத்தில் ரோந்து சென்று தண்ணீர் திருட்டை கண்டுபிடித்தோம்.

    கீழ்பவானி வாய்க்காலை பொருத்தவரை கசிவு நீர் பாசனத்திற்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் எடுத்து அவர்களும் பயனடைவதற்காக தண்ணீர் வழங்குகிறோம். ஆனால், ஒரு சில இடங்களில் ஆயக்கட்டு அல்லாத பாசனதாரர்கள் இதுபோன்ற தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றனர்.

    இது பாசன விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. தற்போது தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஓஸ் பைப்புகளை முற்றிலுமாக அகற்றி விட்டோம். மீண்டும் இதுபோன்ற தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் அந்த விவசாயிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

    • திம்பம் மலைப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்க வெகுநேரம் ஆகிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடந்த 2 வாரமாக திம்பம் மலைப்பாதையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது.

    புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.

    இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை கர்நாடகாவில் இருந்து திருப்பூர் நோக்கி சாக்கு மூட்டைகளை ஏற்றி க்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டு சென்றது.

    திம்பம் 15-வது கொண்டை ஊசி வளைவில் அந்த லாரி திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் திம்பம் மலைப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்துநின்றன. இதனால் தமிழகம்-கர்நாடக இடையே போக்குவரத்து முடங்கியது. அதேசமயம் மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் போன்ற சிறிய வாகனங்கள் சென்றன. ஆனால் லாரி, பஸ் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக கவிழ்ந்த லாரி ரோட்டில் அப்படியே உள்ளது.

    இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திம்பம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தியமங்கலத்தில் இருந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜேசிபி எந்திரம் சம்பவ இடத்திற்கு வந்து கவிழ்ந்து கிடக்கும் லாரியை மீட்க வெகுநேரம் ஆகிவிடும் என்பதால் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

    • புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.
    • தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதை 27 அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த மலைப்பாதை தமிழக, கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பகுதியாகும். இந்த வழித்தடத்தில் வனவிலங்குகள் வாகனத்தில் மோதி உயிரிழப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அதைத்தொடர்ந்து 2022 ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து இந்த தடை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி முதல் காலை வரை பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

    காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பண்ணாரி சோதனை சாவடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்து செல்கின்றது. புளிஞ்சூர் சோதணை சாவடியில் இருந்து பண்ணாரி வரை 40 நிமிடத்தில் கடக்க வேண்டிய தொலைவை தற்போது 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை இந்த பாதையை கடக்க முடிகிறது.

    இதனால் தினம் தினம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இதனால் துக்க நிகழ்ச்சி, அவசர தேவை, மருத்துவம், கல்லூரி, அரசு உழியர்கள், பணிகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எரிபொருள் தேவையும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதேபோல் திம்பம் மலைப்பாதை என்பது குறைந்த அளவே எடையை தாங்க கூடிய நிலையில் கடந்த காலத்தில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது வாகனங்கள் இடைவிடாமல் மலைப்பாதையில் நிற்பதால் அதிக பாரம் தாங்காமல் மலைப்பாதையில் விரைவில் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மண்சரிவு ஏற்பட்டால் திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு நிரந்தர தீர்வை தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி சாமிக்கண்ணு மகன் விஜயை மகேந்திர ராஜா டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா தலைமறைவாகி விட்டார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம், பழனியப்பா தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (56). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அந்தியூர் கிளையில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் விஜய் பி.இ. சிவில் பட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். சாமிக்கண்ணு தனது மகன் விஜயை எப்படியாவது அரசு பணியில் சேர்த்து விட வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் அரசு போக்குவரத்துக் கழகம் கோபி கிளையில் டிரைவராக பணிபுரிந்து வரும் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் தனக்கு தெரிந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரா ராஜா என்பவர் உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சாமிக்கண்ணிடம், மகேந்திரராஜாவை அறிமுகம் படுத்தியுள்ளார்.

    பின்னர் சில நாட்களில் மகேந்திர ராஜா தொலைபேசி மூலம் சாமிக்கண்ணுவை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதனை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதி சாமிக்கண்ணு ரூ.15 லட்சத்தை மகேந்திர ராஜாவிடம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி சாமிக்கண்ணு மகன் விஜயை மகேந்திர ராஜா டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணி நியமன ஆணையை அவருக்கு கொடுத்துள்ளார்.

    பின்னர் மகேந்திரா ராஜா மீண்டும் கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி சாமிக்கண்ணிடம் இருந்து மேலும் ரூ.14 லட்சத்தை பெற்றுக்கொண்டார். மேலும் விஜய்யிடம் கொடுத்த பணி நியமன ஆணையை திரும்ப வாங்கிக்கொண்டு இ-மெயில் மூலம் வேலைக்கான உத்தரவு வரும் என்று கூறி உள்ளார். ஆனால் இதுவரை எந்த ஒரு உத்தரவும் வரவில்லை. இது குறித்து சாமிக்கண்ணு, சாமியப்பனிடம் கேட்டபோது அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சாமிக்கண்ணு இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் சாமியப்பனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிக்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திர ராஜா தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் இதேபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார்.
    • குழந்தைகளுக்கான பிரிவில் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் பிரிவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் ஹரி பாஸ்கர். ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி லோகித் சோனாலி. இவர்களுக்கு ஆதிரன் என்கிற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. லோகித் சோனாலி தனது மகனுக்கு 2 மாதம் முதலே கருப்பு வெள்ளை நிறப்புகைப்படங்களை காண்பித்து வந்துள்ளார்.

    இதன் பின்னர் சமூக வலைதளங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை புகைப்படங்களை காண்பித்து சரியாக சொல்லும் பிரிவில் நோபல் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருப்பதை பார்த்துள்ளார்.

    இந்நிலையில் தனது 3 மாத குழந்தை ஆதிரனுக்கு புகைப்படங்களை அவ்வப்போது காண்பித்து குழந்தை நினைவாற்றல் திறனை அதிகரித்து வந்துள்ளார். இதனை நோபல் சாதனை குழுவினருக்கு வீடியோ எடுத்து அனுப்பி உள்ளார்.

    இதனை ஆய்வு செய்த நோபல் சாதனை குழுவினர் 3 மாத ஆண் குழந்தை ஆதிரன் பழங்கள், காய்கறிகள், எண், வண்ணம் மற்றும் வடிவம் அடங்கிய 130 புகைப்பட அட்டைகளை சரியாக அடையாளம் காண்பித்து வெற்றி பெற்றுள்ளார்.

    இதனால் குழந்தைகளுக்கான பிரிவில் புகைப்படங்களை நினைவாற்றல் செய்யும் பிரிவில் சாதனை படைத்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டி உள்ளனர்.

    இது குறித்து குழந்தை தாயார் கூறுகையில்,

    குழந்தைகளுக்கு 3 வயது முதல் 6 வயது வரை புகைப்படங்களுக்கான நினைவாற்றல் அதிகமாக இருக்கும் என்பதால் குழந்தைகளுக்கு தொடக்கத்தில் இருந்து முறையாக பயிற்சி கொடுத்து வந்தால் அவர்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

    அத்துடன் குழந்தை வளர்ந்து கல்வி உட்பட அனைத்திலும் அவர்களுக்கு நினைவாற்றல் மிகுந்த உதவியாக இருக்கும் எனவும், இதற்காக 10 தினங்களில் அவ்வப்போது புகைப்படங்களை காண்பித்து பயிற்சி கொடுத்ததாக தெரிவித்தார். 

    • தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். தமிழக-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக திம்பம் மலைப்பகுதி இருந்து வருகிறது.

    இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

    இந்த மலைப்பகுதியில் 16 டன் எடை அளவு உடைய லாரிகள் மட்டுமே இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலமாக இந்த பகுதியில் 25 டன் வரை எடை உள்ள லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த லாரிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வருவதால் திம்பம் மலைப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் திம்பம் மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் சாலையின் இருபுறங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தொலைவு வரை அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணம் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு கொண்ட லாரிகள் இயக்க அனுமதிக்கப்படுவதே ஆகும் என வாகன ஓட்டிகள் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.

    வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகம்-கர்நாடகா எல்லையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
    • விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (24). இவரது பாட்டி சரஸ்வதி (62).

    இந்த நிலையில் நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தனது பாட்டி சரஸ்வதியை ஜம்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார். அவரது பாட்டி சரஸ்வதி பின்னால் அமர்ந்து கொண்டு ஜம்பை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

    இதை தொடர்ந்து உறவினர் வீட்டில் இருந்து துறையம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாட்டியுடன் நந்தகுமார் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் துறையம்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது ஜம்பை கலுங்கு ஏரி அருகே உள்ள வளைவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு கார் நந்தகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நந்தகுமார் மற்றும் அவரின் பாட்டி சரஸ்வதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொருங்கியது.

    இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பவானி அருகே விபத்தில் பாட்டி, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • இரவு நேரங்களில் சாலை ஓரமாக யானைகள் உலா வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவி லங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மழைக்காலங்கள் என்பதால் யானைகள் அதிகமாக இடம் பெயர்ந்து வருகின்றன.

    தற்பொழுது வனத்துறையில் கிடைத்த தகவலின் படி கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டங்கள் மிகவும் அதிக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

    இதனால் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் யானைகள் அதிகமாக தென்படுகின்றன. குறிப்பாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனச்சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலை ஓரமாக யானைகள் உலா வருகிறது.

    இதனால் பண்ணாரி அம்மன் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். 

    • பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்.
    • மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியாரின் புகழை உலகெங்கும் பரப்ப முதலமைச்சர் ஆர்வமாக உள்ளார். பெரியார் சொன்ன பலவற்றை அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, காமராஜர் சட்டங்களாக மாற்றியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சொன்னதை சட்டமாக கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் ஆளும் ஆட்சி சுயமரியாதை ஆட்சி.

    பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும். ஆனால் இது எதுவும் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜி.எஸ்.டி.யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், தொலைபேசி மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.

    மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் கல் போன்று அமர்ந்துள்ளார். மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை. இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும்.

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கள்ளுக்கடைகளை திறப்பதால் உடல்நிலையை பாதிக்காது. பனை விவசாயிகளுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மதுவிலக்கில் பூர்ண நம்பிக்கை உள்ளது. கள்ளுக்கடையை திறந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இது முழுவதும் எனது தனிப்பட்ட கருத்து.

    கட்சியின் கொள்கையை தெரிவிக்காதவர்கள் எல்லாம் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்பவர்கள் மத்தியில் பல வருடங்களாக அரசியல் செய்து தமிழகம் முழுவதும் மக்களிடையே வாக்கு வைத்துள்ள திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என பேசியது தவறில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கட்சிக்கும் இருப்பது நியாயம் தான்.

    ஆட்சியில் பங்கு என்பது கையில் பவர் வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியும் உள்ளன. எனவே திருமாவளவன் தெரிவித்தது தவறில்லை. ஆனால் 2026-ல் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு சாத்தியமாகாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மத வெறியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரவேண்டும் என தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளின் முதல் கடமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தோல்வி என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறும்போது,

    முதலமைச்சரின் வெளிநாடு பயணம் என்பது ஒவ்வொரு நாளும் ஓய்வு எடுக்காமல் தொழில் அதிபர்களை சந்தித்தார். இதில் போர்டு மோட்டார் இங்கிருந்து சென்றவர்கள் திரும்ப வருவதாக தெரிவித்தது மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.

    முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமானது.

    இதேபோல் ராகுல்காந்தி குறித்து ஹெச்.ராஜா விமர்சனம் தெரிவித்தது குறித்த கேள்விக்கு "ஹெச்.ராஜா ஓய்வு பெற வேண்டிய ஆளு. அண்ணாமலை வெளிநாடு போனதால் அவருக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற முடியாதவர். காலாவதியான ராஜா. காலாவதியான ராணியுடன் இருக்க வேண்டியவர். அவர் பொது இடத்தில் ராகுல் பற்றி சொல்வது தேவையற்ற விஷயம் என்றார்.

    • வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர்.
    • பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. அதிகபட்சமாக 109 டிகிரி வரை வெயில் பதிவானதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதி அடைந்தனர். வாகன ஓட்டிகள் அனல் காற்றால் அவதி அடைந்தனர். அதன் பிறகு பருவமழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து இருந்தது. இதனால் ஈரோடு மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திர வெயில் தோற்றுப்போகும் அளவிற்கு வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்து விட்டனர்.

    தொடர்ந்து 103 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் முக்கியச் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    வீடுகளில் 24 மணி நேரமும் மின்விசிறி தொடர்ந்து இயங்கினாலும் வெளியில் தாக்கத்தினால் புழுக்கம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர். வெளியே செல்லும்போது தோல் எரிவது போன்று உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இளநீர், மோர், கரும்பு, குளிர பானங்களை மக்கள் அதிக அளவில் விரும்பி பருகி வருகின்றனர். மீண்டும் வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என மக்கள் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

    • 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
    • இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, 1010 நெசவாளர் காலனியில் வசிப்பவர் கிருஷ்ணன், இவரது மகன் ரஞ்சித் குமார் (30). பெருந்துறை தனியார் பத்திர எழுத்தரிடம் பணியாற்றி வருகிறார்.

    சென்னிமலை அடுத்துள்ள தகடூர், முருங்கையம்மன் கோவில் அருகில் வசிப்பவர் சரவணன். இவரது மகள் சுகன்யா (21). இவர்கள் இருவரின் குடும்பங்களும் முகாசிபிடாரியூர் 1010 காலனியில் அருகருகே வசித்த போது பழக்கம் ஏற்பட்டு 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

    இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் வீட்டை விட்டு வெளியேறி சிவன்மலை மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    போலீசார் இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் சொல்லி வரவழைக்கப்பட்டு இருதரப்பு பெற்றோர்களும் திருமணத்தை ஏற்றுக்கொண்டதால் மணமக்களை மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
    • மலைப்பாதையில் நின்ற யானை கூட்டத்தால் காரில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. மேலும் சில யானைகள் கூட்டம் வனப்பகுதி விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருகிறது. சில சமயம் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் வரட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி உணவு உள்ளதா? என்று பார்ப்பது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை திம்பம் மலைப்பாதை 19-வது கொண்டை ஊசி வளைவில் யானைகள் குட்டியுடன் உலா வந்தது.

    அவ்வழியாக சென்ற வாகனத்தை வழிமறைத்து உணவு ஏதும் உள்ளதா? என தேடியது. இதனல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாதையில் நின்ற யானை கூட்டத்தால் காரில் சென்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் கூட்டம் உணவு, தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக ஆசனூர் வனச்சரத்துக்குட்பட்ட திம்பம் 27 கொண்டை ஊசி வளைவுகளில் யானைகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன.

    எனவே இந்த பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்தக்கூடாது. அதேப்போல் யானை கூட்டத்தை கண்டால் அதனை செல்போன்களில் படம் எடுப்பதையும் நிறுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் கவனத்துடனும் செல்ல வேண்டும் என்றனர்.

    ×