என் மலர்
உள்ளூர் செய்திகள்
பவானி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் பாட்டி-பேரன் பலி
- இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- விபத்து குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நந்தகுமார் (24). இவரது பாட்டி சரஸ்வதி (62).
இந்த நிலையில் நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் தனது பாட்டி சரஸ்வதியை ஜம்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து கொண்டு சென்றார். மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார். அவரது பாட்டி சரஸ்வதி பின்னால் அமர்ந்து கொண்டு ஜம்பை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
இதை தொடர்ந்து உறவினர் வீட்டில் இருந்து துறையம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளில் பாட்டியுடன் நந்தகுமார் பவானி ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் இரவு நேரத்தில் துறையம்பாளையத்துக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது ஜம்பை கலுங்கு ஏரி அருகே உள்ள வளைவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு கார் நந்தகுமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நந்தகுமார் மற்றும் அவரின் பாட்டி சரஸ்வதி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொருங்கியது.
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பவானி அருகே விபத்தில் பாட்டி, பேரன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.