என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.
    • இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருவிழா நடந்து வருகிறது.இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது.

    தொடர்ந்து படைக்கலம், மாவிளக்கு எடுத்து வந்து பொங்கல் வைத்து பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.

    விழாவையொட்டி பக்தர்கள் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தும், நாக்கில் சூலாயுதம் குத்தியும், நெஞ்சில் வேல் குத்தியும் சாட்டையால் தனக்கு தானே அடித்தும் நேர்த்திகடன் செலுத்தி ஊர்வலமாக வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் சத்தியமங்கலம் சாலை நம்பியூர் சாலை வழியாக கோவிலை வந்தடைந்தனர். இந்த விழாவில் புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானபொது மக்கள் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து சுவாமிகள் திருவீதி உலா வந்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

    • ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார்.
    • வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது.

    ஈரோடு:

    வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

    மாநாட்டில் வணிகர்களுக்கான 'வி.வி.டி.', 'மைசாட்டோ' ஆகிய செயலிகள் மற்றும் பேரமைப்பு வலைதளம் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மா.சுப்பிரமணியன், வி.செந்தில்பாலாஜி, பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி உள்ளார். வணிகர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பெயரில் காவல் உதவி செயலி கொண்டு வரப்பட்டது. எனவே வணிகர்களுக்கு உறுதுணையாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    அமைச்சர் சு.முத்துசாமி பேசும்போது, வணிகர்கள் விடுக்கும் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி வருகிறார். 2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு வரைமுறை செய்வதற்கு மனுக்கள் பெறப்பட்டது. ஆனால் கட்டிடம் வரைமுறை தொடர்பாக முடிவு எடுக்கக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மனுக்களை பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்து விட்டது. வேண்டுமென்றால் மனுக்களை பெறுவதற்கான அவகாசத்தை நீட்டிப்பு செய்யலாம். முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று காலஅவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது கூறியதாவது:-

    வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்கள் சோ்க்கை கடந்த 2 ஆண்டுகளில் 2 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியே காரணம்.

    இந்த மாநாட்டில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேசும்போது, மின் கட்டணம் உயர்வு தொடா்பாக போராட்டம் நடத்தப்படுமா? என்று உறுப்பினர்கள் கேள்வி கேட்டதாக தெரிவித்தார். அந்த கேள்வி கேட்டவர்களை பார்த்து கேட்கிறேன், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.410-ல் இருந்து ரூ.1,200 உயர்த்தப்பட்டதற்கும் ஏன் போராட்டம் நடத்தவில்லை. பேரமைப்பு தலைவரை தூண்டிவிடும் வகையில் செயல்படுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கையை தெரிவிக்கும்போது, அதை அவர் உடனடியாக நிறைவேற்றி கொடுத்து வருகிறார்.

    இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

    அமைச்சர் பி.மூா்த்தி பேசியதாவது:-

    திராவிட மாடல் ஆட்சி வணிகர்களுக்கு முழுஆதரவு அளித்து வருகிறது. நேர்மையாக தொழில் நடத்தி வரும் உங்களை போன்ற வணிகர்களுக்கு எப்போதும் தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும். கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    வணிகர் நல வாரியத்தின் நிர்வாகிகளை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.

    இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.

    • இன்றைக்கு தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, முறையாக கைகளை கழுவாமல் இருப்பதுதான்.
    • சோப்பு போட்டு நல்ல முறையில் கைகளை கழுவுவதால் 70 சதவீதம் நம்மால் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த உலக கைகழுவும் தினத்தையொட்டி கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைக்கு தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, முறையாக கைகளை கழுவாமல் இருப்பதுதான். சோப்பு போட்டு நல்ல முறையில் கைகளை கழுவுவதால் 70 சதவீதம் நம்மால் தொற்று நோய்களிலிருந்து தப்பிக்க முடியும்.

    ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் விரைவில் ஆய்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

    • ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும்.
    • வேளாண் இடுபொருட்கள் விதைகள், உபகரணங்கள், உரம், பூச்சி மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை விவசாயிகள் நலன்கருதி ரத்துசெய்யப்பட வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உள்ளாச்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை கடைகளுக்கான முன்தேதியிட்ட வாடகை விதிப்பு அறிவிப்பை திரும்ப பெற்றுக்க் கொள்ளுமாறும், 2007-ம் ஆண்டு அரசு அறிவிப்பின்படி சந்தை, மதிப்பீட்டின் அடிப்படையில் வாடகை நிர்ணயித்திடவும் வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற்று தற்போது உள்ள உரிமையாளர்களின் பெயரில் மாற்றம் செய்திட அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    வணிக உரிமைகள் அனைத்தும் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஒற்றை சாளர முறையில் ஆயுள் உரிமமாக வழங்கிட வேண்டும். அல்லது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்திடும் முறையை அரசு அறிவித்திட வேண்டும்.

    விதிமீறல் கட்டிடங்களுக்கு கட்டிட வரைமுறை கால நீட்டிப்பு நகரமைப்பு சட்டங்களில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிட பகுதிகளை கால இடைவெளி உடன் இனம் காண தமிழகம் முழுவதும் சட்ட திருத்தம் வேண்டும்.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கும் வணிகர்களுக்கு அவர்கள் செலுத்தும் வரியின் அடிப்படையில் ஓய்வூதியமும், காப்பீடும், குடும்ப நல நிதியும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் காலங்களில் வணிகர்களுக்கும், வணிக குடும்பங்களுக்கும் அரசே காப்பீடு செலுத்தும் முறையை நடை முறைப்படுத்த வேண்டும். இழப்பீடுகள், வழங்கிடவும் வேண்டும்.

    ஜி.எஸ்டி. வரிமுறையில் செய்யப்பட்டு வரும் தினசரி மாறுதல் மற்றும் திருத்தங்கள் காரணமாக தொழில் வணிகத்துறை மிகுந்த குழப்பத்தில் பல்வேறு இனங்களை சந்தித்து வருகிறது. எளிய வரி என்கிற இலக்கை எட்ட மத்திய அரசு ஜி.எஸ்டி வரியை மறு சீராய்வு செய்து ஒரே நாடு ஒரே வரி என்ற பிரதமரின் கொள்கையை உறுதிப்படுத்தி சரியான வரியை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    சிறுகுறு வணிகர்களும் எளிதாக கையாளும் விதமாகவும், வணிகர்களுக்கு எதிரான ஜி.எஸ்டி. வரி குளறுப்படியை மற்றும் முரண்பாடுகளை கலைத்திட வேண்டும். இதற்காக வணிகப் பிரதிநிதிகள் இணைந்து ஒரு உயர்மட்ட குழுவை அமைத்திடவும் பழைய பொருட்களுக்கான ஜி.எஸ்டி. வரி ஒரே நிலையில் அதாவது 5 சதவீதம் மட்டுமே அமல்படுத்திட பேரமைப்பு வலியுறுத்துகிறது.

    நடைமுறையில் உள்ள உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தில் உள்ள முரண்பாடுகளை உரிய ஆய்வுகளுடன் களைந்து, ஆயுள் உரிமமாக அறிவித்திடவும், சாலையோர கடைகளை முறைப்படுத்திடவும், அபராதம் மற்றும் தண்டனைச் சட்டங்களில் உரிய மாற்றங்களை செய்திடவும் வலியுறுத்தப்படுகிறது.

    தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெருகிட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் உற்பத்தி சார் தொழில்களை ஊக்குவிக்கவும், பெருநகரங்கள் நோக்கி பொதுமக்கள் புலம் பெயர்வதை தடுத்திடவும், தொழில் பூங்காக்கள் குறிப்பாக தென் மாவட்டங்களில் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், ராமநா தபுரம் மாவட்டங்களில் அமைத்திட தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    மேலும் மத்திய மாநில அரசுகளே அனுமதி வழங்கி அதற்கு முரண்பட்ட காரணங்களை சொல்லி முடக்கி வைக்கின்ற தொழில் நிறுவனங்களை மீண்டும் திறந்து வேலை வாய்ப்பை உருவாக்கி சமூக கட்டமைப்பை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உயிர்காக்கும் மருந்து பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதை கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டு ஆன்லைன் வர்த்தகத்தை முறைப்படுத்திட வேண்டும்.

    ஜவுளித்துறை நூல் மூலப்பொருள் விலை ஏற்றம் கட்டுப்படுத்திட வரி குறைப்பு செய்திட வேண்டும். ஈரோடு பெருநகரின் சுற்றுச்சூழலை பாதிக்கும் தோல் பதனிடும் தொழில் மற்றும் சாய கழிவுகள் சுத்திகரிக்கப்பட, ஒரு மைய சுத்திகரிப்பு நிலையம் உடனடியாக அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஈரோடு போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதை தவிர்த்திடும் வகையில் வெளிப்புற சுற்றுவட்ட பாதை காவிரி கரையை ஒட்டி நெடுஞ்சாலை அமைத்து இதர மாவட்ட ங்களோடு போக்குவரத்தை இணைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர் நல வாரியம் நலவாரிய உறுப்பினர்கள், நிர்வாகிகள் நியமனத்தோடு முழுமைபெற்ற வாரியமாக வணிகர் நலன்காத்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

    ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ பணிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு, மீண்டும் கடைகளை திருப்பி அளித்து, முழுமைபெறாத ஸ்மார்ட்சிட்டி பணிகளை விரைந்து முடித்து வணிகர்களின் வாழ்வாதாரம் காத்திட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    தமிழகத்தில் டிஜிட்டல் தொழிலில் ஈடுபடும் சுமார் 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை காக்கவேண்டி, குறிப்பிட்ட இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கி வரைமுறை படுத்திடவும், அதற்கான உரிமங்களை பெற எளிய முறையை வகுத்திடவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

    பொட்டலப் பொருட்கள் மற்றும் எடையளவு உரிமம் பெற தொழிலாளர் நலத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை என இருவேறு துறைகளின் இரட்டை உரிம முறையை பெறவேண்டும் என்ற நிலை சட்ட முரண்பாடுடையது. நீக்கி ஒரே துறையின் கீழ் அதாவது உணவுப்பாதுகாப்பு துறையின் கீழ் மட்டுமே உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைத்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

    காலம் கடந்த எடையளவு முத்திரை, தராசு முத்திரை பதித்தலுக்கும் அபராதத் தொகை ரூபாய் முறையே 50, 150 என்று இருப்பதை ரூ.5000 அபராதம் என மாற்றி அறிவித்திருப்பதை திரும்பப் பெற பேரமைப்பு வலியுறுத்துகின்றது. தொழிலாளர் நலத்துறை லேபிள், மிஸ்பிராண்ட், பேட்ஜ் நெம்பர், பிரிண்டிங் குறைபாடுகளுக்கு வணிகர்கள் மீது தண்டனை மற்றும் அபராதச் சட்ட நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு உணவுப்பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டப் பிரிவுகளின் கீழ் கொண்டுவர வேண்டும்.

    வேளாண் இடுபொருட்கள் விதைகள், உபகரணங்கள், உரம், பூச்சி மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரியை விவசாயிகள் நலன்கருதி ரத்துசெய்யப்பட வேண்டும்.

    வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாகவும், வளர்ந்து வரும் தனிநபர் வருமானத்தை கருத்தில் கொண்டும், மத்திய அரசு தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்-10 லட்சம் என உயர்த்தி அறிவித்திட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    இளைய தலைமுறை வணிகத்தை ஊக்குவித்து, புதிய வேலை வாய்ப்பு மற்றும் வணிக வழிகாட்டு மேலாண்மை அமைப்பின் மூலம் மாவட்ட வாரியாக ஆலோசனை மையங்கள் அமைத்து வணிகத்தை மேம்படுத்த பேரமைப்பு நிதி ஏற்படுத்துவதற்கான சூழல்களை ஆராய்ந்து, மாநில அளவில் மேற்கொள்ள பேரமைப்பு இம்மாநாடு மூலம் தீர்மானிக்கிறது.

    மத்திய அரசு டீசல்-பெட்ரோல் எரிபொருட்களை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவந்து, விலையேற்றத்தை தவிர்த்திட வேண்டும். கியாஸ் சிலிண்டர்கள் அவ்வப்போது விலையேற்றம் செய்யும் நடைமுறையை மத்திய அரசு முழுமையாக தவிர்த்திட இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

    மத்திய அரசின் அறிவிப்பின்படி 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே என்ற அடிப்படையில் நீக்கப்பட வேண்டிய சுங்கச் சாவடிகளை விரைந்து நீக்கிடவும், ஆண்டு தோறும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பதை மறு ஆய்வு செய்திடவும், காலாவதி அடைந்த சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு நீக்கிடவும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    மக்கள் புழக்கம் அதிகம் உள்ள இடங்கள், பெண்கள் நடமாடும் மார்க்கெட் பகுதிகள், கோவில்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள இடங்களில் இருக்கின்ற டாஸ்மாக் கடைகளை, பொதுமக்கள் நலன்கருதி தமிழக அரசு உடனடியாக அகற்றிட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    தமிழக அரசு பிளாஸ்டிக் தடைக்கான உயர்நீதிமன்ற வழக்கில், அரசாணை எண்.37-ன்படி, மறுசுழற்சி இல்லா பிளாஸ்டிக்கை தடை செய்ததை, திரும்பப் பெறுவதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பது ஒருதலைப் பட்சமானது என்பதனால், மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் தடை அரசாணை எண்.84-யும் இயற்கை நீதியின்படி திரும்பப்பெற வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    எம்.எஸ்.எம்.இ பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் கட்டண சலுகையினை வணிக நிறுவனங்களுக்கும் அமல்படுத்திடவும், உச்ச நேர மின் பயன்பாட்டுக் கட்டணம் என்பதை முழுமையாக தவிர்த்து ஒரே சீரான சாதாரண மின் கட்டணத்தை முழுநேர பயன்பாட்டுக் கட்டணமாக அறிவித்திடவும் இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    மேலும் புதிய மின் இணைப்புக்கு கட்டிட முழுமைச்சான்று 8,400 சதுரஅடி வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு தேவை இல்லை என்று அறிவித்திருப்பதை, குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு தேவையில்லை என்று மாற்றி அறிவித்து புதிய மின் கட்டண இணைப்புக்கு முறைகேடுகளை தவிர்த்திட இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    விருத்தாச்சலம், துறையூர், ஆரணி, பொள்ளாச்சி ஆகிய நகரங்களை புதிய மாவட்டங்களாக அறிவித்து விருத்தாச்சலம், துறையூர் ஆரணி மற்றும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதி வளர்ச்சிக்கு வழிவகுத்திடுமாறு தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகின்றது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
    • சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பவர் சரண்யா. இவர் விரைவில் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பதவி ஏற்க உள்ளார்.

    இந்திய ராணுவத்தின் இந்த தொகுப்பில் இந்தியா முழுவதும் உள்ள 40 பெண் அதிகாரிகளில் இவரும் ஒருவர். மேலும் தமிழகத்தை சேர்ந்தவர்களில் இவர் ஒருவர் மட்டுமே ஆவார்.

    சரண்யா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். ராணுவத்தில் சேருவதற்கு முன்பு அவர் விவசாய வேலைகளை பார்த்து வந்தார். கால்நடைகளையும் வளர்த்தார். கபடி வீராங்கனையும் ஆவார்.

    அவர் ராணுவ பயிற்சியில் சேர்ந்து 3 முறை தோல்வியை தழுவினார். இந்த முறை அவர் சாதித்து விட்டார்.

    இது தொடர்பாக சரண்யாவுக்கு பயிற்சி அளித்த கமாண்டர் கூறியதாவது:-

    சரண்யா அந்தியூர் பகுதியில் ஒரு கிராமத்தில் வசிக்கிறார். அவரது வீட்டை சுற்றி வனப்பகுதி உள்ளது. அவரது வீட்டில் இருந்து பஸ் நிறுத்தத்துக்கு 20 கி.மீ. தூரம் மண் ரோட்டில் செல்ல வேண்டும். அந்த மண் ரோட்டில் கார் கூட செல்ல முடியாது. இதனால் அவர் பயிற்சிக்கு வருவதற்காக அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் தனியாக மண் ரோட்டில் 20 கி.மீ. தூரம் சென்று அங்கு ஒரு இடத்தில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு 4 பஸ்கள் மாறி பயணம் செய்து காலை 7 மணிக்கு பயிற்சிக்கு வந்து விடுவார். சில நாட்கள் அவர் 7.05 மணிக்கு வருவார். அப்போது அவரை திட்டுவேன். ஆனால் அவர் இவ்வளவு சிரமப்பட்டு வருவதை ஒருநாள் கூட என்னிடம் சொன்னதில்லை. 5 நிமிடம் தாமதமாக வந்து நான் திட்டும்போது மன்னிப்பு கேட்டு விட்டு இனி சரியான நேரத்துக்கு வந்து விடுவதாக கூறுவார்.

    இந்த விஷயங்கள் எல்லாம் நான் அவரது வீட்டுக்கு சென்றபோதுதான் தெரிய வந்தது. அதையும் சரண்யா சொல்லவில்லை. அவரது தாயார் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவரது வீட்டுக்கு சென்றபோது பாதி தூரம்தான் காரில் செல்ல முடிந்தது. மீதி தூரம் நடந்தே சென்றோம்.

    சரண்யாவின் தாயார் என்னிடம் பேசியபோது, "சரண்யா அதிகாலை 3 மணிக்கே எழுந்து விடுவார். அவர் எப்படி பயிற்சிக்கு செல்கிறார் என்பதே எனக்கு தெரியாது. 6 மாதமாக இப்படியே கஷ்டப்பட்டார். இவ்வளவு சீக்கிரம் எழுந்து செல்கிறாயே... உனது கமாண்டர் மனிதனா, மிருகமா? என்று திட்டி இருக்கிறேன்" என்றார். அதற்கு நான் சிரித்துக்கொண்டே அந்த கமாண்டர் நான்தான் என்றேன்.

    சாதாரண விஷயங்களுக்கே சாக்கு போக்கு சொல்பவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பெண்கள் தான் சாதிக்கிறார்கள். இவர்கள்தான் சிங்கப் பெண்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தைக்கு கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
    • விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை புதன் மற்றும் வியாழக்கிழமை கூடுவது வழக்கம். இது தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாகும்.

    இந்த சந்தையில் கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களான கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் மற்றும் புளியம்பட்டி சுற்றுப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வந்து கால்நடைகளை விற்பதும், வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் இந்த வாரம் கூடிய மாட்டுச்சந்தையில் ஜெர்சி மாடுகள், கலப்பின மாடுகள் மற்றும் ஆடு, கோழி, கன்றுகள் போன்ற கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

    இதில் கால்நடைகளின் விற்பனை. ரூ.1 கோடியை எட்டியது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசு, வினோத் உள்பட 8 பேர் இருந்தனர்.
    • இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சலங்கைபாளையம் பகுதியை சேர்ந்த பிரகதீஷ் (வயது 26). பவானி அடுத்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த பூபதி (30). இவர்கள் 2 பேரும் டிரைவர்கள். இவர்கள் 2 பேர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு பூபதி பச்சமலையை சேர்ந்த தினேஷ் (28) என்பவரிடம் என்னிடம் பணம் இல்லை. ரூ.200 தாருங்கள். கூகுள்பே மூலம் அந்த பணத்தை அனுப்புகிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து தினேஷ், பூபதிக்கு ரூ.200 கொடுத்தார். அதன் பிறகு பூபதி கூகுள்பே மூலம் தினேசுக்கு அனுப்பி விட்டார்.

    இந்த நிலையில் தினேஷ், பூபதிக்கு போன் செய்து கோபிசெட்டி–பாளையம் அருகே உள்ள பச்சமலை பகுதிக்கு வரும்படி கூறினார். இதையடுத்து பூபதி, பிரகதீஷ் ஆகியோர் பச்சமலை பகுதிக்கு சென்றனர்.

    அப்போது அங்கு தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தமிழரசு, வினோத் உள்பட 8 பேர் இருந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் பேசி கொண்டு இருந்தனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து தினேஷ் (25), தமிழரசு (25), வினோத் (25) உள்பட 8 பேர் சேர்ந்து பிரகதீஷ், பூபதியை தாக்கியதாக கூறப்ப–டுகிறது. இதில் அவர்கள் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தினேஷ், தமிழரசு, வினோத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    மற்ற 5 பேர் தலைமறைவாகி விட்டனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்கள் 5 பேரை தேடி வருகிறார்கள்.

    • அவரது காலில் பாம்பு கடித்தது.
    • சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி அம்மன்கோவில் புதூரை சேர்ந்தவர் சபாபதி. இவரது மனைவி ருக்மணி (68). இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் சம்பவத்தன்று சென்னிமலையை அடுத்துள்ள நொய்யல் கிராமத்தில் நடக்கும் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக தனது வீட்டின் அருகில் உள்ள அம்மன் கோவில் புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்காக அவர் வீட்டில் இருந்து சென்றார். அப்போது அவரது காலில் பாம்பு கடித்தது.

    உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார்.

    இது குறித்து அவரது மகன் தாமோதரன் கொடுத்த புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
    • கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். நேற்று முன்தினம் முழுவதும் மழை பெய்ய வில்லை.

    இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பிறகு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் 3-வது அகில் மேடு வீதியில் உள்ள டிரான்ஸ்பாரம் தீப்பிடித்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது.

    இதேபோல் ஸ்டார் தியேட்டர் அருகே உள்ள சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்களில் மின்சார கசிவு ஏற்பட்டு மாட்டு வண்டியில் இருந்த மாடு மீது மின்சாரம் பாய்ந்து இறந்தது.

    தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வாரகாலமாக கோடை மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகின்றது. இதனால் நிலங்களில் உழவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில் நேற்று மாலை மாவட்டம் முழுவதும் கோடை மழையானது கொட்டித்தீர்த்தது.

    அக்னி நட்சத்திரம் தாக்கத்தில் இருந்து விடுபடும் வகையில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி காணப்பட்டது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக மொடக்குறிச்சியில் 109 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    மொடக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியே வர தயக்கம் காட்டினர்.

    இந்த நிலையில் காலை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து காற்று வீசியது. அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது.

    இந்த மழையானது தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    சோலார், வெண்டி பாளையம், கஸ்பாபேட்டை, 46 புதூர், லக்காபுரம், மொடக்குறிச்சி, நஞ்சை ஊத்துக்குளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விபரம் வருமாறு:

    ஈரோடு-68, கோபி-12.2, பவானி-20, பெருந்துறை-24, சத்தி-2, தாளவாடி-6, நம்பியூர்-24, கொடுமுடி-22.2, கவுந்தப்பாடி-13.2, சென்னிமலை-5, எலந்தைகுட்டை மேடு-41,

    பவானிசாகர்-15.6, கொடிவேரிஅணை-4, குண்டேரிப்பள்ளம்-2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்து மாவட்டத்தின் சராசரி மழையளவு 21.69 ஆகும்.

    • கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.
    • தாளவாடி பாரதிபுரத்தில் இயங்கி வரும் டாஸ்டாக் மதுக்கடை 3 நாட்கள் மூடப்படும்.

    ஈரோடு:

    கர்நாடகா மாநிலத்தில் வரும் 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் தேர்தல் பணியிலும் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதையொட்டி கர்நாடகாவில் வரும் 8-ந் தேதி மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால் அந்த மாநிலம் முழுவதும் வரும் 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மது கடைகள் மூட தேர்தல் அதிகாரிகள் உத்த ரவிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த மாநில தேர்தல் அதிகாரிகள் தேர்தலை யொட்டி தமிழக-கர்நாடகா எல்லை பகுதியில் உள்ள மது கடைகள் மூட வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அதில் வரும் 10-ந் தேதி கர்நாடகாவில் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 8-ந் தேதி மாலை முதல் 10-ந் தேதி வரை மது கடைகள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதனால் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் மது க்கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்.

    இதையொட்டி தமிழக- கர்நாடகா எல்லையான 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாளவாடி பாரதி புரத்தில் இயங்கி வரும் தமிழக அரசின் டாஸ்டாக் மதுக்கடை வரும் 8-ந் தேதி மாலை முதல் 10-ந் தேதி வரை 3 நாட்கள் மூடப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.
    • பணத்தை அபேஸ் செய்த பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பவானி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் குமார் (60). இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் குமார் தனது மனைவியுடன் திருப்பூரில் 2-வது மகன் வீடு கட்டி வரும் நிலையில் மகனுக்கு பணம் கொடுக்க ரூ.7 லட்சத்துடன் மேட்டூரில் இருந்து பவானி லட்சுமி நகர் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து திருப்பூர் செல்ல 2 பேரும் பஸ் ஏறி உள்ளனர்.

    அப்போது அதே பஸ்சில் 2 பெண்கள் இவரின் சீட்டுக்கு அருகில் ஏறி உள்ளனர். அதில் ஒரு பெண் மயக்கம் வருவதாக கூறி மயக்கம் போட்டு உள்ளார்.

    மற்றொரு பெண் அவரை காப்பாற்றுவது போல காப்பாற்றி உள்ளார். பின்னர் அந்த 2 பெண்களும் மருத்துவமனை செல்வதாக பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர்.

    இந்த நிலையில் குமாரின் மனைவி சித்தோடு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது தான் வைத்து இருந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் பணம் காணாமல் போனது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் சித்தோடு போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

    நூதன முறையில் மயக்கம் வருவதாக நாடகமாடி கணவன், மனைவி கொண்டு வந்த பையில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்க பணத்தை அபேஸ் செய்த அந்த மர்ம பெண்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    இதனையடுத்து பவானி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகள் மூலம் அந்த மர்ம பெண்கள் 2 பேரையும் ஆய்வு மேற்கொண்டதில் 2 பேரும் பவானி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் சென்றது தெரியவந்துள்ளது.

    ஓடும் பஸ்சில் கணவன், மனைவியிடம் நூதன முறையில் ரூ.7 லட்சம் அபேஸ் செய்து தப்பி ஓடிய 2 பெண்களை போலீசார் தேடி வரும் சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பவானி பகுதியில் உள்ள குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல அறிவுரை வழங்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் பவானி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லட்சுமி, ஈரோடு நகர உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வன் மற்றும் அருண்குமார், மொடக்குறிச்சி உணவு பாதுகாப்பு அலுவலர் எட்டிகன் ஆகியோர் பவானி பகுதியில் உள்ள குடிநீர் ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது குடிநீர் தொழிற்சாலைகளில் தண்ணீர் முறையாக சுத்திகரிக்கப்படுகிறதா? எனவும், பிளாஸ்டிக் பாட்டில்களில் முறையாக தண்ணீர் அடைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் 20 லிட்டர் கேன்களை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பழுதடைந்த, நாள் பட்ட கேன்களை பயன்படுத்த கூடாது என்றும், கேன்களின் மீது லேபிள் பயன்படுத்தப்படும் காலம் போன்றவை ஒட்ட வேண்டும் என்றும், ஆலையில் வேலையில் உள்ள பணியாளர்கள் தலையில் கேப்பும், கையுரையும் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும், பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    அதேபோல் 20 லிட்டர் கேன்கள் ஒரு மாத இடைவெளியும், ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் வாட்டர் பாட்டில் 6 மாத இடைவெளி காலம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    வாகனங்களில் குடிநீர் கேன்களை எடுத்து செல்லும் போது தார்ப்பாய் போட்டு மூடி எடுத்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    5 நிறுவனங்களில் 3 உணவு மாதிரி சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கையின் முடிவின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.

    மேலும் குடிநீர் சம்பந்தமாக பொதுமக்கள் ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டுமென்றால் உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்அப் எண் 944042322 என்ற எண்ணுக்கு அழைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×