என் மலர்tooltip icon

    ஈரோடு

    • முதியவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்திற்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணை யில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவ ளத்தை கடந்த போது ரெயில் மோதி அந்த முதியவர் இறந்தது தெரிய வந்தது. இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரியவில்லை. முதியவர் முகம் மற்றும் உடல் சிதைந்துள்ளதால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது.
    • அணைப்பகுதிகளான வரட்டுபள்ளம், பவானி சாகர், கொடிவேரி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்திலுள்ள அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலை நிலவி வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 5 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல சொல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    அணைப்பகுதிகளான வரட்டுபள்ளம், பவானி சாகர், கொடிவேரி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலம், தாளவாடி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இதேப்போல் பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கொடுமுடி பகுதியில் நேற்று 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    சென்னிமலை-61, வரட்டுபள்ளம்-42.40, கொடுமுடி-40, தளவாடி-28, பவானிசாகர்-21.40, பெருந்துறை-14, பவானி-10.20, மொடக்குறிச்சி-9, கொடிவேரி-8.20, கவுந்தப்பாடி-8, அம்மாபேட்டை-5.60, ஈரோடு-5, கோபி-3.20, சத்தியமங்கலம்-3.

    • சென்னிமலை வட்டார பகுதியில் மாம்பழ குடோன்கள், கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
    • வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    சென்னிமலை:

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு ஆணையர் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலரின் அறிவுறுத்துதலின் படியும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த மாம்பழ விற்பனை கடைகள், சிறிய மாம்பழ கடைகள் மற்றும் பழ குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் சென்னிமலை வட்டார பகுதியில் செயல்பட்டு வரும் மாம்பழ குடோன்கள், மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் ஆய்வு செய்தார்.

    அப்போது ரசாயனம் மற்றும் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 30 கிலோ அளவுள்ள மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

    மேலும் பழ வியாபாரிகளிடம் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதால் அந்த பழங்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், வியாபாரிகள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன் படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    • லாரி வளைவில் திரும்பும் போது தடுப்பு சுவர் மீது மோதி நின்றது.
    • இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி தப்பினார்.

    அந்தியூர்:

    மும்பையில் இருந்து நூல் மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி கோபிசெட்டி–பாளையத்துக்கு சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தை சேர்ந்த சக்தி வடிவேல் (40) என்பவர் ஓட்டி வந்தார்.

    இதை தொடர்ந்து லாரி இன்று அதிகாலை அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து அத்தாணி ரோட்டில் கோபிசெட்டிபாளையம் சென்றது.

    அப்போது லாரி ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி நின்றது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயம் இன்றி தப்பினார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்து அந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்தியூர்-அத்தாணி ரோடு மிகவும் வளைவான பகுதியாக காணப்படுகிறது. இங்கு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இரவு மற்றும் நள்ளிரவில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் ஏற்கனவே லாரி மற்றும் கார் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அதே இடத்தில் 3-வது முறையாக தடுப்பு சுவர் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

    எனவே இந்த வளைவான பகுதியில் உள்ள தடுப்பு சுவர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • இதனால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    அம்மாபேட்டை:

    காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செக்கானூர், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சி கோட்டை உள்ளிட்ட கதவணை மின் நிலையங்களில் வருடாந்திர பராமரிப்பு பணி வருடத்திற்கு ஒரு முறை ஏப்ரல், மே மாதங்களில் நடப்பது வழக்கம்.

    இந்த வருடம் கடந்த மாதத்தில் ஊராட்சி கோட்டை, கோனேரிப்பட்டி ஆகிய கதவணை மின் நிலையங்களில் பராமரிப்பு நிறைவுற்ற பின் நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இதனால் ஈரோடு மாவட்டம் நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சேலம் மாவட்டம் பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு இடையேயான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் நெரிஞ்சிப்பேட்டை கதவணை பாலம் வழியாக சுமார் 8 கி.மீ. சுற்றி செல்கின்றனர்.

    மேலும் கதவணையின் மேல் நீரேற்று நிலையம் அமைந்துள்ள பகுதியில் தண்ணீர் வறண்டதால் நீரேற்ற முடியாமல் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்ய சில நாட்கள் ஆகும் என தெரிகிறது.

    • சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
    • மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலான மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு ஹோமமும்,

    அதனைத்தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனையும், 6.30 மணியளவில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 10 மணி வரை நடை திறந்திருந்திருந்தது.

    சென்னிமலை நகர மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளில் வித, விதமான உணவு பண்டங்களை தயார் செய்து மலைக்கோவிலுக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மணிமலை மீது அமைந்துள்ள மணி மலை கருப்பராயன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது.

    இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பை விட குணமடைந்து வருபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

    மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 736 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்புடன் 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் குருணை மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த ஒடையகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாட்டமூப்பன் (76). தனது மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வயிற்று வலி காரணமாக பாட்டமூப்பன் வீட்டில் இருந்த குருணை மருந்தை (விஷம்) சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாட்டமூப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதேப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 954 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.87 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.31 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 25.49 அடியாக உள்ளது.

    • வீட்டிலிருந்து மாலதி வெளியே சென்று உள்ளார்.
    • மனைவி குறித்து எந்த ஒரு தகவல் இல்லாததால் முத்துமணி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த மூங்கில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துமணி. இவரது மனைவி மாலதி (24).

    முத்துமணி கோவையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக திண்டுக்கல் வெள்ளப்பெட்டியில் மனைவியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி விஜயமங்கலத்திற்கு தனது மனைவியுடன் முத்துமணி வந்தார். முத்துமணி வேலைக்கு செல்லும் நேரத்தில் மாலதி யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று திடீரென வீட்டிலிருந்து மாலதி வெளியே சென்று உள்ளார். முத்துமணியும் அவரது மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று இருப்பார் என நினைத்து அவர் வேலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

    இந்நிலையில் ஒரு மாதம் ஆகியும் மனைவி குறித்து எந்த ஒரு தகவல் இல்லாததால் முத்துமணி மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது மனைவி மாமியார் வீட்டிற்கும் வரவில்லை என தகவல் தெரிய வந்தது.

    இதனையடுத்து முத்துமணி உடனடியாக இது குறித்து பெருந்துறை போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை மீட்டு தர வேண்டும் என புகார் அளித்திருந்தார்.

    அதன் பேரில் பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • தேர்வுகட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் இலக்குமிநரசிம்மன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் வருகிற 9-ந் முதல் 13-ந் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

    ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து வெப் கேமிரா புகைப்படத்துடன் தேர்வுகட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழுக்காக ரூ.100, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் ரூ.15, ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70 செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிக்க தவறிய தேர்வர்கள் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி சிறப்பு அனுமதி திட்டத்தில் வரும் 15, 16-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.18.70 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    அஞ்சூர் ஊராட்சி, அஞ்சூரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி தட்டம்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.46 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று சுவர் அமைக்கப்ப–ட்டுள்ளதையும்,

    கொந்தளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் நர்சரிக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கம்பி வலை மற்றும் பசுமைவிரிப்பு அமைக்கப்பட்டுள்ளதையும்,

    கொந்தளம் ஊராட்சி கள்ளிபாளையத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,

    அதேபகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.15 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் இருப்பு கிடங்கு கட்டப்பட்டு வருவதையும்,

    கொளத்துப்பாளையம் ஊராட்சி கொம்பனைப்புதூரில் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினையும்,

    அதே பகுதியில் ரூ.11.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருவதையும் மற்றும் கொளத்துப்பாளையம் சந்தை வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை மற்றும் பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து கொந்தளம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் 1 விவசாயிக்கு சுமார் 2 எக்டர் பரப்பளவில் பரப்பு விரிவாக்கும் மரவள்ளிகிழங்கு பயிரிடுவதற்காக ரூ.40 ஆயிரம் மானியத்திலான உபகரணங்களை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது கொடுமுடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாபன், கல்பனா, கொடுமுடி தாசில்தார் முத்துகிருஷ்ணன், சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    ×