என் மலர்
ஈரோடு
- தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் என்ஜினும் சேதம் அடைந்தது.
- வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பில்லூர், வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (39). இவர் நேற்று மாலை காரில் ஈரோடு இடையன்காட்டு வலசுக்கு வந்துள்ளார்.
அங்கு ஒரு விடுதியில் தங்கியிருக்கும் நண்பர் சங்கருடன் சந்தோஷ் குமாரும் நேற்றிரவு தங்கி இருந்தார். சங்கருக்கு இன்று வேலைக்கான நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதால் சந்தோஷ் குமார் காரில் வந்திருந்தார். காரை விடுதியின் வெளியே நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை காரை சந்தோஷ்குமார் இயக்க முயன்றார். ஆனால் கார் இயங்காததால் மெக்கானிக்குக்கு தகவல் சொல்லிவிட்டு நண்பருடன் சாப்பிட சென்றார். அந்த சமயத்தில் திடீரென காரில் இருந்து புகை வெளியேறியது.
பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். சுமார் 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் காரின் முன் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. காரின் என்ஜினும் சேதம் அடைந்தது. விபத்து நடந்த போது காரில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் இடையன்காட்டு வலசு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
- சங்கர் என்ற நாராயணசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு வளையக்கார வீதியில் ஈரோடு மது விலக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்ற நாராயணசாமி (49) என்பவரை போலீசார் கைது செய்து,
அவர் விற்பனைக்கு வைத்திருந்த 400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
- தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
- ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (68). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அத்துடன் கால்நடை களையும் வளர்த்து வருகின்றார்.
இதில் 20 ஆடுகளை வளர்த்து வரும் தவசியப்பன் இவரது தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம்.
அதேபோல் சம்பவத்தன்றும் விளாங்குட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாலை நேரத்தில் ஆடுகளை மேய்க்கச் அழைத்து சென்று ள்ளார். அவருடன் மற்ற நபர்களும் ஆடு மேய்ப்பதற்கு உடன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
இதனையடுத்து யானை அவரை தாக்க வருவதற்குள் அவருடன் வந்தவர்கள் தகர டின்னில் சப்தம் ஒலி எழுப்பியதை கேட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.
பின்னர் அவருடன் வந்த நபர்கள் அவரது மகன் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தவசியப்பன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
யானை தூக்கி வீசப்பட்டதில் விலா எலும்பு, கழுத்து பகுதியில் எலும்பு முறிவு மற்றும் சிராய்ப்பு காயங் களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- வனப்பகுதியில் காட்டு மல்லி பூ வழி நெடுக பூத்துக்குலுங்குகிறது.
- மேலும் மல்லி பூவின் வாசம் ரம்மியாக உள்ளது.
சென்னிமலை:
சென்னிமலை மலை வனப்பகுதி 1,700 ஏக்கர் பரப்பரளவு கொண்டது. இந்த பெரிய மலையில் தான் 4 கிலோ மீட்டர் மலை வழி பயணம் செய்தால் மலை மீதுள்ள முருகன் கோவிலை அடையலாம்.
வரலாற்று சிறப்பு மிக்க முருகனை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் பலர் தங்களது குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக சென்னிமலை முருகனை தரிசித்து மலை அழகினை ரசித்தும், செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
இந்த வனப்பகுதியில் தற்போது காட்டு மல்லி பூ வெள்ளை போர்வை போர்த்தியது போல் ஆங்காங்கே மலை பாதை வழி நெடுக பூத்துக்குலுங்குகிறது.
மேலும் மல்லி பூவின் வாசம் ரம்மியாக உள்ளது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் இந்த பூக்கள் வெள்ளை வெள்ளையாக தெரிகிறது.
இதை மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர். காட்டு மல்லியின் வாசனை மிக நன்றாக தெரிகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் பெய்த மழைக்கு தான் ஏராளமான பூக்கள் பூத்து குலுங்கிறது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.
மழை இல்லை எனில் பூக்கள் உற்பத்தி இவ்வளவு இருக்காது. குறைந்த அளவில் பூக்கும். மழை பெய்ததால் ஒரு சேர அனைத்து மரங்களிலும் பூத்துள்ளது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
- முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதலீட்டு பத்திரம் பெற்றுள்ள பயனா ளிகளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் முதலீட்டு பத்திரம்,
10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றி தழ் நகல், பயனாளிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், பயனாளி மற்றும் அவரின் தாயின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் 1 ரூபாய் வருவாய் அஞ்சல் வில்லை ஆகியவற்றுடன் சம்மந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக களப்பணியா ளர்களை அணுகுமாறு தெரிவிக்க ப்படுகிறது.
மேலும் பிரதிமாதம் 2-வது செவ்வாய்க் கிழமை "பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனா ளிகள் தினமாக" அனுசரித்து இத்திட்டத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே 18 வயது பூர்த்தி அடைந்த பயனாளிகள் மேற்கு றிப்பி ட்ட விவரங்க ளுடன் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறு மாறு கலெக்டர் கிருஷ்ண னுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளார்.
- அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
- கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.
அம்மாப்பேட்டை:
அம்மாபேட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள குருவரெட்டியூர், கோனேரிப்பட்டி பிரிவு, பூனாச்சி, முளியனூர், ஒலகடம், வெள்ளித்திருப்பூர், பட்லூர், நால்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 14 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
ஒவ்வொரு கடை களிலும் நாள் ஒன்றுக்கு தலா 250 பீர்கள் என அனைத்து கடைகளிலும் சேர்ந்து சுமார் 3 ஆயிரம் பீர்கள் விற்பனை நடைபெறுகிறது.
தற்போது கோடை காலம் என்பதால் மதுப்பிரியர்கள் அதிகம் பீர் வகை மதுவை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் தற்போது ஒவ்வொரு கடைக்கும் வரும் பீர் பாட்டில்கள் வந்து 2 மணி நேரம் 3 மணி நேரத்திலேயே முழுவதும் விற்பனையாகி விடுகிறது.
3 நாளைக்கு ஒரு முறை தான் பீர் பாட்டில்கள் கடைகளுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலில் குளிர்ந்த பீர் அருந்த விரும்பும் மது பிரியர்களும் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில்,
வழக்கமாக மது அருந்துபவர்களை விட பீர் வகை மது அருந்துபவர்கள் குறைந்த அளவே இருக்கிறோம். அதிலும் சிலர் என்றாவது ஒருநாள் மட்டுமே பீர் அருந்தும் பழக்கத்தை உடையவர்களாக உள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது கோடை வெயில் காலம் என்பதால் மது பிரியர்களுக்கு பீர் மீது மோகம் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அனைத்து கடைகளிலும் பீர் பற்றாக்குறை என்பது எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. எனவே பீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு வழிவகை செய்து உதவி செய்ய வேண்டும் மது பிரியர்கள் கேட்டுக்கொண்டனர்.
- ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
- வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறி வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.
இதை தொடர்ந்து அடசபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்ற சித்தேஷ்வரன் என்பவரை மிதித்து கொன்றது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெருமுகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.
அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனால் முதுமலை யானைகள் முகாமில் இருந்து நேற்று முன்தினம் லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்பு கிணறு மாரியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் டிரோன் கேமரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்கா ணித்தனர். ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கும் வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலமாக மயக்க ஊசி செலுத்தியவுடன்,
தயாராக இருக்கும் 2 கும்கி யானைகளை கொண்டு காட்டு யானையை லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளுக்கு தேவையான சோளப்பயிர் உள்ளிட்ட உணவுகளை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் டிரோன் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக அந்த ஒற்றை காட்டு யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பெருமுகை அடுத்த சேத்துக்காட்டு புதூர், கரும்பாறை குளத்துக்காடு, சஞ்சீவிராயன் கோவில் பகுதிகளில் இன்று வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாகவும், அதையொட்டிய பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
- மழை பெய்யும் நேரங்களில் மின் சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும்.
- கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மின் சாதன பொருட்களை கவனமாக கையாள வேண்டும் என மின்வாரியத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்தக்காரர் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின்சார சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மின்சார விளக்குகளை பொருத்துவதற்கு முன்ன ரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும். மின் கசிவு தடுப்பானை பயனீட்டா ளரின் இல்லங்க ளில் உள்ள மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்தி மின் கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்க்க லாம்.
உடைந்த சுவிட்சு களையும், பிளக்குகளையும் உடனே மாற்றிவிட வேண்டும். பழுதுபட்ட மின் சாதனங்களை உபயோகிக்க க்கூடாது. கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக்கூடாது.
ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு போடுவதுடன் அதனை குழந்தைகள் தொடாத வகையில் அமைத்து சரியாக பராமரிக்க வேண்டும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வீட்டின் வயரிங்குகளை சோதனை செய்து தேவை ப்பட்டால் மாற்றிக்கொ ள்ளலாம். குளியல் அறை யிலும், கழிப்பறையிலும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளை பொரு த்தக்கூடாது.
சுவற்றின் உள்பகுதியில் மின்சாரத்தை எடுத்து செல்லும் வயர்களுடன் கூடிய பி.வி.சி.பைப்புகள் பதிக்கப்பட்டு இருந்தால் அந்த பகுதிகளில் ஆணி அடிப்பதை தவிர்க்க வேண்டும்.மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடை களை கட்டக்கூடாது.
மின் கம்பங்களை பந்த ல்களாக பயன்ப டுத்தக்கூ டாது. மேலும் அதன் மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது. மழை காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது.
மழையாலும், பெருங்காற்றா லும் அறுந்து விழுந்த மேல்நிலை மின் கம்பி அருகே செல்ல வேண்டாம். இது குறித்து உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி - மின்னலின்போது தஞ்சம் அடைய எதுவும் இல்லாத பட்சத்தில் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான இடத்திற்கு செல்ல வேண்டும்.
மேலும் இடி-மின்னலின்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, தொலைபேசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பயன் படுத்தக்கூடாது.
மழை காலங்களில் மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பி அறுந்து விழுந்தாலோ மற்றும் மின் வாரிய தொடர்பான தகவலுக்கு 9498794987, 9445851912 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்ற மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
- வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
- போலீசார் சேகரை கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் ராயபாளையம் துண்டுகாடு பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில் வரப்பாளையம் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அங்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணியன் மனைவி பூவா என்ற பூவாத்தாள் (53) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சாவகாட்டுப்பாளையம் ராயபாளையம் பகுதியில் வரப்பாளையம் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியாக மொபட்டில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தபோது, அந்த நபர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாத்தா னூரை சேர்ந்த சேகர் (59) என்பதும்,
அவரது மொபட்டில் சோதனை செய்தபோது 5 பிளாஸ்டிக் பாட்டில்களில் 5 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சேகரை கைது செய்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- விஜயா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் சாணா திக்கல் மேட்டை சேர்ந்தவர் சித்தையன் (36).
இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பவானி தொட்டி பாளையத்தை சேர்ந்த மாதப்பன் மகள் விஜயா (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். இதை த்தொடர்ந்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று விஜயா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து விஜயாவின் தந்தை மாதப்பன் அம்மா பேட்டை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திங்களுர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி வரும் 9-ந் தேதி நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு:
பெருந்துறை திங்களுர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வரும் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களுர், கல்லாகுளம், வெட்டையன் கிணறு, கிரே நகர், பாப்பம் பாளையம், மந்திரி பாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன் பாளையம், தாண்டாகவுண்டண் பாளையம்,
சுங்ககாரன் பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம் பாளையம், வீராச்சிபாளையம், வீராணம் பாளையம், கராண்டி பாளையம், தலையம் பாளையம்,
ஆயிக்கவுண்டன் பாளையம், பொன்முடி, குள்ளம் பாளையம், நெட்டசெல்லா பாளையம், கீழேரி பாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி,
மடத்து பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில் புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு,
தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது.
- குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதா ரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு நீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.80 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,061 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.54 அடியாக உள்ளது.
30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.24 அடியாக உள்ளது. 33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.57 அடியாக உள்ளது.






