என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை- அதிகபட்சமாக சென்னிமலையில் 61 மி.மீ பதிவு
- சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது.
- அணைப்பகுதிகளான வரட்டுபள்ளம், பவானி சாகர், கொடிவேரி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்ய தொடங்கி இரவு முழுவதும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்திலுள்ள அணை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்தது. மாலை 5 மணிக்கு வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக சென்னிமலையில் 61 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல சொல்ல இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது, இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
அணைப்பகுதிகளான வரட்டுபள்ளம், பவானி சாகர், கொடிவேரி பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சத்தியமங்கலம், தாளவாடி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கிறது. இதேப்போல் பெருந்துறை, பவானி, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கொடுமுடி பகுதியில் நேற்று 2 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர் மழை காரணமாக அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
சென்னிமலை-61, வரட்டுபள்ளம்-42.40, கொடுமுடி-40, தளவாடி-28, பவானிசாகர்-21.40, பெருந்துறை-14, பவானி-10.20, மொடக்குறிச்சி-9, கொடிவேரி-8.20, கவுந்தப்பாடி-8, அம்மாபேட்டை-5.60, ஈரோடு-5, கோபி-3.20, சத்தியமங்கலம்-3.






