என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
    • 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி கூகலூர் மண்ணுவகாடு பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் கோபி போலீசார் அங்கு விரைந்து சென்று சீட்டாட்டம் விளையாடி வந்த நபர்களை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் கூகலூர் ராமன் வீதியை சேர்ந்த முருகேஷ் (25), அதேபகுதியை சேர்ந்த குமார் (26), முத்துக்குமார்(25), சசி (25), மூர்த்தி(27), ஆனந்தன்(31), திருமூர்த்தி (24) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,000 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டினை பறிமுதல் செய்தனர்.

    • கார்த்தி கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி(27). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சில்லி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கார்த்தி அவரது அண்ணன் கணேசனுடன் சத்தியமங்கலம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். கார்த்திக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கடும் வயிற்று வலியின் காரணமாக கார்த்தி கலைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது அண்ணன் கணேசன் கார்த்தியை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    ஈரோடு:

    குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது.

    முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    • நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்தார்.
    • மக்களை பார்த்து நடிகை சமந்தா சிரித்தவாறு கையசைத்து சென்றார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்து ள்ள அடர்ந்த வனபகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஈரோடு, கோவை, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் வழிபடுவது வழக்கம்.

    இதேபோல் கர்நாடக மாநில மக்களும் பண்ணாரி அம்மனை வழி வழிபட்டு செல்கின்றனர். இதுபோக சினிமா பிரபலங்கள், முக்கியமான வி.ஐ.பி.க்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் இருந்தனர்.

    நடிகை சமந்தா சமீபத்தில் சரும நோயால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனையடுத்து பாதிப்பி லிருந்து குணமடைந்தார்.

    அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களில் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

    அதன்படி சமந்தா பண்ணாரி அம்மன் கோவி லுக்கு வந்தார். பின்னர் நடிகை சமந்தா பண்ணாரி அம்மனை பயபக்தியுடன் வணங்கி தரிசனம் செய்தார்.

    நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் அவரை காண பொதுமக்கள் கூடினார்.

    மக்களை பார்த்து நடிகை சமந்தா சிரித்தவாறு கையசைத்து சென்றார். சிலர் நடிகை சமந்தாவுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

    • கோபி பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பயணிகள் நிறைந்து பரபரப்பாகவே இருக்கும்.
    • நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்து நாள்தோறும் கோவை, திருப்பூர், மதுரை, தேனி, ராமேஸ்வரம், சேலம், ஈரோடு, திருச்சி, சத்தியமங்கலம், மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் கோபி பஸ் நிலையம் வந்து செல்கின்றன.

    குறிப்பாக திருப்பூர், ஈரோடு, கோவை போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பஸ் நிலையத்தில் செல்வதால் கோபி பஸ் நிலையம் காலை முதல் இரவு வரை பயணிகள் நிறைந்து பரபரப்பாகவே இருக்கும்.

    இதனால் நகராட்சி சார்பில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ் நிலையத்தின் உள்ள கடை உரிமையாளர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட வெளியே கடைகளை வைத்தும், பயணிகள் அமர்வதற்கும், நிற்பதற்கும் இடமில்லாத வகையில் பொருட்களை வைத்து நடைபாதையை ஆக்கிரமித்து இருந்தனர்.

    இதுகுறித்து பயணிகள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சசிகலா உத்தரவின் பேரில், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், சுகாதாரப்பணியாளர்கள் பஸ் நிலையத்தில் 15 கடை உரிமையாளர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    அப்போது கடை உரிமையாளர்கள், நகராட்சி பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் ஆக்கிரமிப்பு பொருட்கள் அகற்றப்பட்டன.

    • ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.
    • தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே சண்டிப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள மயானத்தில் நேற்று இரவு ஒரு கும்பல் போதை ஊசி, போதை மாத்திரை போட்டுக்கொண்டிருப்பதாக அந்தியூர் சப்- இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் சிறப்பு போலீஸ் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு 7 பேர் கொண்ட கும்பல் போதை ஊசி, மற்றும் போதை மாத்திரையை பயன்படுத்திக் கொண்டிருப்பது தெரிய வந்தது. போலீசை பார்த்ததும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர். போலீசார் அந்த கும்பலை சேர்ந்த 5 பேரை மடக்கி பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவர்கள் அனைவரும் 20 முதல் 22 வயது உட்பட்டவர்கள். எந்த ஒரு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளனர்.

    பின்னர் பிடிபட்டவர்களை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மகாதேவன், ரூபேஷ், மகேஸ்வரன், வெங்கடேசன், சவுந்தர் ஆகியோர் என தெரியவந்தது. இவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்து போதை ஊசி, போதை மாத்திரை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 ஆயிரம் மதிப்பிலான போதை ஊசி, மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய பாலாஜி, திருமூர்த்தி ஆகியோரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை தவிர வேறு யாரும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.
    • அணையின் நீர்மட்டம் 78.78 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதி யாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் மழைப்பொழிவு இல்லாத தால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

    நீர்வரத்தை காட்டி லும் பாசனத்திற்காக தொ டர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விட ப்படுவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவர ப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.78 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 496 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கனஅடி தண்ணீர் தொ டர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீரன்பாசறை சாார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ஈரோடு அரசு குழந்தைகள் காப்பக முன்னாள் மருத்துவர்.அசோக் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கலந்து கொண்டு கருத்துக்களை கூறினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

    தீரன்பாசறை செயலாளர் துளசிமணி நன்றி கூறினார். 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது.
    • சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என் பாளையம், விளாமுண்டி, ஆசனூர், தலமலை, தாளவாடி, கடம்பூர், கெட்டவாடி, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன.

    இதில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறி வரும் யானைகள் சாலையில் நிற்பதும், கரும்புலோடு ஏற்றி வரும் லாரியை மறித்து கரும்புகளை ருசிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. யானைகள் சாலை நடுவே நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் அருகே 3 காட்டு யானைகள் உணவு தேடி வனப் பகுதிக்குள் அமைந்துள்ள சாலையில் வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனத்தை நிறுத்திவிட்டனர். யானை கூட்டம் ஆனது சிறிது நேரம் வாகனங்களுக்கு வழி விடாமல் நடுரோட்டிலேயே நின்றது.

    இதனை பார்த்த பொதுமக்கள் தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக யானை கூட்டம் நடுரோட்டில் நின்றதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பிறகு 3 யானைகள் மெல்ல மெல்ல நகர்ந்து ரோட்டை கடந்து சென்றது. பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் வாகனங்களை இயக்கினர்.

    • அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 362 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வா தாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை.

    இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி பகுதியில் பரவலாக மழை பெய்து வந்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.

    இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து விட்டது.

    அதேசமயம் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 78.96 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 362 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    காலிங்கராயன் பாசனத்திற்கு 200 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 1,205 கன அடி நீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக் கிழமை அன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    இவ்வேலை வாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார் துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப் படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதன் மூலம் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

    அதன்படி வரும் 21-ந் தேதி (வெள்ளிக் கிழமை) தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.

    வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலை வாய்ப்பு முகாம் வேலை நாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணிய மர்த்தம் செய்யப்படும் வேலை நாடுநர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழி காட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்.0424-2275860, மின்னஞ்சல் முகவரி:erodemegajobfair@gmail.com வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

    • தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியது.
    • தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அழகிரி காலனி அரியப்பம்பாளையம் பகுதியில் சுப்பிரமணியம் மற்றும் மயில்சாமி ஆகியோருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு தீ மள மள வென பரவியதால் அருகில் கரும்பு காடும் மற்றும் வாழை பயிர்கள் சிறிது சேதமடைந்தன .

    உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை முற்றிலுமாக அனைத்தனர்.

    இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வில நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் கரும்பு, வாழைத்தோட்டம் தப்பியது.

    ×