என் மலர்
திண்டுக்கல்
- வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக குறைந்துள்ளது.
- ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பழனி:
பழனியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் தக்காளிகளை பழனி தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினசரி டன் கணக்கில் தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனையானது. கடந்த வாரம் சற்று விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விலை கடுமையாக சரிந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது.
மொத்த விற்பனையில் ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பறிப்பு செலவுக்குகூட பணம் கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விலை கிடைக்காத விரக்தியில் தக்காளிகளை குப்பையில் வீசி செல்கின்றனர். அந்த தக்காளிகள் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இரையாகி வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பழனியை சுற்றியுள்ள நெய்க்காரப்பட்டி, அய்யம்பா ளையம், வாடிப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விலை கடுமையாக குறைந்துள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றனர்.
- திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- திருப்பலியும், பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனி சாலையில் முத்தழகுபட்டியில் பழமையான புனித செபஸ்தியார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக செபஸ்தியார் உருவம் பொறித்த கொடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 60 அடி கொடி கம்பத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்களும் பறக்க விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் பக்தர்கள் காணிக்கை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த கோவிலில் திருவிழாவுக்கு பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்து காணிக்கை வழங்குவது வழக்கம்.
செபஸ்தியாரிடம் ஏதாவது ஒரு வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவுடன் காணிக்கையாக ஆடு, கோழி, சேவல், அரிசிமூடை, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தங்களால் இயன்ற அளவுக்கு வழங்குவார்கள். அவ்வாறு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பொருட்களைக் கொண்டே உணவு தயாரித்து அதனை பொதுமக்களுக்கு வழங்குவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட ஆடுகளும், 1000க்கும் மேற்பட்ட கோழி மற்றும் சேவல்களும் காணிக்கையாக வழங்கப்பட்டது. இன்று காலை முதல் ஆடுகள், கோழிகள், சேவல்களை உரித்து சுத்தம் செய்யும் பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஈடுபட்டனர்.

சுத்தம் செய்யப்பட்ட இறைச்சியை பிரம்மாண்ட அண்டாக்களில் சமைத்து செபஸ்தியாருக்கு படையல் போடப்படும். அதன்பிறகு இன்று மதியம் முதல் நள்ளிரவு வரை பக்தர்களுக்கு அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்படும்.
இன்று காலை முதல் உணவு தயாரிக்கும் பணியில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். வருடம் முழுவதும் நடைபெறும் இந்த வினோத திருவிழாவை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அதன்படி இன்று நடக்கும் அன்னதான விருந்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து விழாக்குழுவினர் தெரிவிக்கையில், ஜாதி மத பேதமின்றி சமூக ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் புனித செபஸ்தியார் கோவில் திருவிழா 350-வது ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருத்தலத்தில் என்ன வேண்டுதல் வைத்தாலும் அதனை செபஸ்தியார் நிறைவேற்றி தருவார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிய செபஸ்தியாருக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பொருட்களைக் கொண்டே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.
- பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் இன்று 2-வது நாளாக தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான நாய்கள் இடம்பெற்று சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தி கொடைக்கானல் கென்னல் அசோசியேசன், தி மெட்ராஸ் கெனைன் கியம், தி சேலம் அக்மி கென்னல் கிளப் சார்பில் கொடைக்கானலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
2 நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 424 நாய்கள் பங்கேற்றன. பாக்ஸர், டாபர்மேன், கிரேடன், ஜெர்மன் செப்பர்டு, ஆஸ்திரேலியன் புல்டாக், பக், டாக்செண்ட், ஆப்கான் கவுண்ட், பிகில், பொமேரியன், கோல்டன் ரெட்ரீவர், சிஜூ, சிப்பி பாறை, ராஜபாளையம், ஹஸ்கி உள்ளிட்ட 60 வகையான நாய் இனங்கள் போட்டியில் பங்கு பெற்றன.

நாய்களின் வகைகளுக்கேற்ப 6 பிரிவுகளாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. நாய்களின் பராமரிப்பு, விதிமுறை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
இன்று நடைபெற்ற கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியன்களை தேர்ந்தெடுக்க பல்வேறு நாடுகளை சேர்ந்த நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு வகையான நாய் இனங்கள் அணிவகுத்து சென்றது சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்ததுடன், நாய் கண்காட்சியிலும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
- விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு ரக்ஷிதா (7) என்ற மகளும், ரக்ஷன் (5) என்ற மகனும் உள்ளனர். இன்று அருணாவின் தாய் சரோஜாதேவி (60) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.
நல்லாம்பட்டி அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த போது எதிரில் நத்தம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜார்ஜ் மோட்டார் சைக்கிள் மீது மோதி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. அப்போது மற்றொரு பைக்கில் வந்த நொச்சிஓடைப்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி என்பவர் மீதும் மோதியது. இதில் ஜார்ஜ், அருணா, அவரது 2 குழந்தைகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த சரோஜாதேவி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே பைக்கில் 5 பேர் வந்ததால் கார் மோதிய வேகத்தில் பைக்கை நிறுத்த முடியாமல் விபத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. மேலும் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கடைகளை காலி செய்ய உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
- அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் கிரிவலப்பாதையில் அதிக அளவு ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கிரிவலப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கிரிவலப்பாதையை சுற்றி தடுப்புகள் அமைத்து வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 152 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.
கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்திற்காக கடைகள் ஏற்படாமல் தடுக்க தனியார் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதனிடையே 74 கடைகளை காலி செய்யுமாறு பழனி தேவஸ்தானம் அளித்த நோட்டீசை எதிர்த்து 2015-ம் ஆண்டு வியாபாரிகள் தரப்பில் தொடர்ந்த வழக்கில் மேல் முறையீட்டின் பேரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில் பழனி தேவஸ்தானத்துக்கு சொந்தமான குடமுழுக்கு நினைவரங்க பகுதியில் உள்ள 36 கடைகள், தண்டபாணி நிலைய வளாக கடைகள் 11, மங்கலம்மாள் மண்டப கடைகள் 7 உள்பட மொத்தம் 74 கடைகளை ஜூலை 31-ந் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி தேவஸ்தானம் சார்பில் அங்கிருந்த கடை வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இன்று பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் கண்டிப்பாக அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து கால அவகாசம் முடிந்த நிலையில் நேற்றே பல வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்தனர். மீதி இருந்த கடைகளை அகற்றும் பணிக்காக கோவில் செயல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று உள்ளனர்.
அப்போது அங்கிருந்த வியாபாரிகள் சிலர் இது பட்டா இடத்தில் உள்ளது என்றும் காலி செய்ய தேவையில்லை எனவும் அதிகாரிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோர்ட்டு உத்தரவை காட்டி அதன்படி செயல்பட வேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழனி அடிவாரத்தில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
- இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர்.
- ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களை விளாசினர்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
சேப்பாக் அணிக்கு துவக்க வீரர்களான சந்தோஷ் குமார், ஜெகதீசன் ஜோடி களமிறங்கியது. சந்தோஷ் 1 ரன்னில் அவுட் ஆக ஜெகதீசன் மற்றும் அபராஜித் நிதானமாக ஆடினர். ஜெகதீசன் 25 ரன்னில் ஆட்டமிழக்க அடுத்த வந்த பிரதோஷ் (19), டேரில் ஃபெராரியோ (4), சித்தார்த் (7) என சேப்பாக் அணி அடுத்தத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது.
இறுதியில் அபராஜித் - அபிஷேக் தன்வார் சிறப்பாக ஆடினர். இருவரும் முறையே 72 மற்றும் 22 ரன்களை விளாசினர். இதனால் சேப்பாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்களை சேர்த்தது.
எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் அணிக்கு துவக்க வீரரான விமல் குமார் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 35 பந்துகளில் 57 ரன்களையும் விளாசினர். அடுத்து வந்தவர்களில் சரத்குமார் மற்றும் சுபோத் பாட்டி முறையே 12 மற்றும் 14 ரன்களை எடுத்தனர்.
இதனால் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் திண்டுக்கல் அணி குவாலிபயர் சுற்றின் 2 ஆவது போட்டிக்கு முன்னேறி உள்ளது. எலிமினேட்டர் சுற்று போட்டியில் தோல்வியை தழுவிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.
டிஎன்பிஎல் குவாலிபயர் 2 சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வருகிற 4 ஆம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கோவை லைகா கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
- அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது.
- கோவை அணிக்கு சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாசினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டி திண்டுக்கல்லில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலத் இரண்டு இடங்களை பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
திருப்பூர் அணிக்கு துவக்க வீரர்களான அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஜோடி அபாரமாக ஆடி, முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களை சேர்த்தது. இதில் அமித் (67), துஷார் (55) ரன்களை எடுத்த நிலையில் அவுட் ஆகினர். அசுத்து வந்த பாலசந்தர் அனிருத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 200 ரன்களை குவித்தது. முகமது அலி 45 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கோவை சார்பில் ஷாருக் கான் மற்றும் ஜதாவத் சுப்ரமணியன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
201 எனும் கடின இலக்கை துரத்திய கோவை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ஜிவி விக்னேஷ் ரன் ஏதும் எடுக்காமலும், சுஜய் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரை தொடர்ந்து வந்த சுரேஷ் குமார் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பிறகு சாய் சுதர்சன் மற்றும் முகிலேஷ் ஜோடி இணைந்து திருப்பூர் அணியின் பந்துவீச்சை பதம் பார்க்க ஆரம்பித்தது. சாய் சுதர்சன் 56 பந்துகளில் 123 ரன்களை விளாச, முகிலேஷ் 31 பந்துகளில் 48 ரன்களை எடுத்தார். இதனால் கோவை அணி 185 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கோவை லைகா கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இறுதிப் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
- டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் நடைபெறுகிறது.
- டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
திண்டுக்கல்:
டிஎன்பிஎல் தொடரின் குவாலிபையர் 1 போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்த லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, திருப்பூர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்த நிலையில் துஷார் ரஹேஜா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார். பாலச்சந்தர் அனிருத் 21 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களைக் குவித்துள்ளது. முகமது அலி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.
- பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.
- ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
பழனி:
பழனியில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம் நடந்தது. இதனையடுத்து காலசந்தி பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் பழனி மலைக்கோவிலுக்கு வரத் தொடங்கினர்.
இதனால் படிப்பாதை, யானைப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையங்களிலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானை சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தும், காவடி சுமந்து வந்தும் அரோகரா கோஷம் முழங்க கோவிலுக்கு வந்தனர்.
இதனால் பழனி கோவிலில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாகவே காணப்பட்டது.
இதே போல் பல்வேறு முருகன் கோவில்களிலும் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் அதிகாலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பாலாபிஷேகம் செய்து முருகனுக்கு உகந்த தேன், தினை மாவை படையலிட்டு வழிபட்டனர்.
இதே போல் ராமலிங்கம்பட்டி பாதாள செம்புமுருகன் கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில், அபிராமி அம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, திருமலைக்கேணி உள்ளிட்ட கோவில்களிலும் ஆடிக்கிருத்திகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
- இறுதிப் போட்டி சென்னையில் நடக்கிறது.
- கோவை-திருப்பூர் அணிகள் நாளை மோதல்.
திண்டுக்கல்:
8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 5-ந்தேதி சேலத்தில் தொடங்கியது. அங்கு 9 ஆட்டங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோவையில் 2-வது கட்டமாக 8 போட்டி நெல்லையில் 3-வது கட்டமாக 6 ஆட்டங்களும் நடத்தப்பட்டது.
4-வது மற்றும் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் சேர்த்து 5 போட்டிகள் திண்டுக்கல்லில் நேற்றுடன் முடிவடைந்தது.
லீக் முடிவில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் , திருப்பூர் தமிழன்ஸ் ஆகியவை 4 வெற்றி, 3 தோல்வியுடன் தலா 8 புள்ளிகள் பெற்றன.
நிகர ரன்ரேட் அடிப்படையில் திருப்பூர் 2-வது இடத்தையும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 3-வது இடத்தையும் , திண்டுக்கல் 4-வது இடத்தையும் பிடித்தன. முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன.
நெல்லை ராயல் கிங்ஸ் (7 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (6), மதுரை பாந்தர்ஸ் (5) சேலம் ஸ்பார் டன்ஸ் (2) ஆகிய அணிகள் 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின.
இன்று ஓய்வு நாளாகும். பிளே ஆப் சுற்று போட்டிகள் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது.
திண்டுக்கல்லில் நாளை இரவு 7.15 மணிக்கு நடை பெறும் முதல் தகுதி சுற்றில் (குவாலிபயர்-1) முதல் இடத்தை பிடித்த கோவை கிங்ஸ்-இரண்டாம் இடத்தை பிடித்த திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலிபையர்-2) விளையாடும்.
கோவை அணி 'லீக்' ஆட்டத்தில் திருப்பூரை 1 ரன்னில் வீழ்த்தி இருந்தது. இதனால் நம்பிக்கையுடன் விளையாடி இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெறும் ஆர்வத்தில் இருக்கிறது. தோல்வி அடையும் அணி 2-வது தகுதி சுற்றில் (குவாலியைர்-2) விளையாடும்.
நாளை மறுநாள் (31-ந் தேதி) திண்டுக்கல்லில் நடை பெறும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் 3-வது இடத்தை பிடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-நான்காம் இடத்தை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணி 'குவாலிபையர்-1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும்.
குவாலிபையர்-2 ஆட் டம் ஆகஸ்ட் 2-ந்தேதியும், இறுதிப் போட்டி 4-ந்தேதியும் சென்னையில் நடக்கிறது.
- சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்களை விளாசினார்.
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் 136 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 59 பந்துகளில் 70 ரன்களையும், அஸ்வின் 13 பந்துகளில் 15 ரன்களையும் சரத் குமார் 8 பந்துகளில் 9 ரன்களையும் எடுத்தனர்.
நெல்லை சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஷ் மற்றும் சிலம்பரசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்கள், அஜிதேஷ் 43 ரன்கள் மற்றும் என்எஸ் ஹரிஷ் 22 ரன்களை விளாசினர்.
திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், திரன் 1 விக்கெட் வீழ்த்தினர்.
- சுற்றுலாப் பயணிகளின் பைகளிளும் சோதனை.
- போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானல் நகர்ப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளை புறக்கணித்து விட்டு பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை உள்ளிட்ட மேல்மலை கிராமங்களுக்கு படையெடுக்கின்றனர்.
இந்த கிராமங்களில் மலைமுகடுகளின் அருகில் மண் வீடு, ஏ பிரேம் ஹவுஸ், டூம் ஹவுஸ், டெண்ட் கூடாரங்கள் உள்ளிட்டவைகளில் ஆபத்தான முறையில் தங்கி வருகின்றனர். இங்கு போதை வஸ்து பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
இதனையடுத்து கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவராமன் தலைமையில், போலீசார், சுற்றுலாத்துறை, ஊரக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் இணைந்து தனியார் தங்கும் விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
கூக்கால் மலைக்கிராமத்தில் மலை முகடுகளின் அருகில் உள்ள அரசு வருவாய் நிலத்தில் 4-க்கும் மேற்பட்ட மண் வீடுகள் அமைத்து சுற்றுலாப்பயணிகளுக்கு தங்கும் அறைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், போதை காளான்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த மண் வீட்டில் இருந்த சுற்றுலாப் பயணிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்டது.
மேலும் மண் வீட்டினை ஆபத்தான முறையில் தங்கும் விடுதியாக நடத்தி வந்த கூக்கால் கிராமத்தை சேர்ந்த தனராஜை கைது செய்து மண் வீடு அறைகளை பூட்டினர்.
மேலும் பூம்பாறை கிராமத்தில் விவசாய தோட்டத்தில் எந்த வித அனுமதியில்லாமல் இயங்கி வந்த ஏ பிரேம் ஹவுஸ்களும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும்.
எந்த வித அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் விடுதிகளும், டெண்ட் கூடாரம், டூம் ஹவுஸ் உள்ளிட்டவைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






