என் மலர்
திண்டுக்கல்
- கொசவபட்டி, செங்குறிச்சி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- 27-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
திண்டுக்கல:
திண்டுக்கல் அருகே கொசவபட்டி துணைமின்நிலையத்தில் நாளைமறுநாள்(27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் அன்று காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை கொசவபட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, தொட்டியப்பட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தம்மாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை, விராலிபட்டி, நொச்சிஓடைப்பட்டி, வடுகாட்டுப்பட்டி, குரும்பபட்டி, கவராயப்பட்டி, கூவனூத்து மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
திண்டுக்கல் அருகே செங்குறிச்சி துணைமின்நிலையத்தில் நாளை மறுநாள் (27-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
இதனால் அன்று காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செங்குறிச்சி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, எஸ்.குரும்பபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
- தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்றனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வரும் வழியில் முருகனை தரிசித்து செல்கின்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச வாகனம் நிறுத்துமிடங்கள் நிரம்பியதால் அடிவாரம், சன்னதி வீதி, கிரிவீதி, அய்யம்புளி ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
போதுமான வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத நிலையில் நோ-பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தனர். அந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். நகரில் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இருந்ததால் அடிவாரம் அய்யம்புளி ரோடு, கிரிவீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி தேவஸ்தான விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பின. தனியார் தேவஸ்தான கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்க கடைகளில் கூட்டம் நிரம்பியது. மலைக்கோவிலில் காலை முதல் வின்ச், ரோப்கார் தரிசன வரிசையில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் தரிசன வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கிரிவீதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகளாலும், பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
கிரிவீதியின் நடுவில் வடமாநிலத்தவர் தட்டு கடைகளை வைத்து பக்தர்களை தொந்தரவு செய்தவாக தெரிகிறது. இவர்களுடன் சிறுவர்கள் பக்தர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். விடுமுறை நாள் என்பதால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்றனர்.
- திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சேதுசமுத்திர திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்.
திண்டுக்கல்:
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று திண்டுக்கல் வந்தார். பின்னர் திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
தந்தைபெரியார் ஒரு பேராயுதம். மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்ககூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார். அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது. எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள். பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர். தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.
இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும். தென்தமிழகம் மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இத்திட்டத்திற்கான தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது. ரூ.2000 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது.
வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக கூறி இத்திட்டத்தை நிறுத்தினர். இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என பா.ஜ.க மத்தியமந்திரிநிதின் கட்கரி தெரிவித்தார். ஆனால் இதுவரை இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இத்துறைக்கான அமைச்சர் பேசுகையில், ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என கூறியுள்ளார். இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி இத்திட்டத்தை பா.ஜ.க அரசு முடக்கியுள்ளது.
தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு பிறகாவது சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும். இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
- கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
குள்ளனம்பட்டி:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன்கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் பொங்கலுக்கு தேவயைான பொருட்கள் வழங்கப்படும்.இது தவிர ரொக்கத்தொகை, வேஷ்டி-சேலையும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 2-ந்தேதி முதல் அந்தந்த ரேசன் கடைகளில் இதனைபெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நிலக்கோட்டை, ெநாச்சிஓடைப்பட்டி, கூவனூத்து, சாணார்பட்டி, சிலுவத்தூர், அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 300 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.20ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்திருந்த நிலையில் அரசு வாங்காததால் விளைவித்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் வியாபாரிகள் நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் வந்து குறைந்த விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். வேறு வழியின்றி நஷ்டமடைந்தாலும் அதனை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்,
ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பராமரித்து கரும்பை காப்பாற்றி வந்தோம். அரசு கொள்முதல் செய்தால் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். விளைச்சல் குறைந்துள்ள போதிலும் தற்போது கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வருடம் முழுவதும் கரும்பு விவசாயத்தை நம்பியே ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
ஆனால் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவரும் வேளையில் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம் என்றார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வந்தனர். தற்போது அரசு அறிவித்துள்ள முடிவால் வரும் காலங்களில் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் போன்ற சராசரி மழையளவு கிடைக்காத மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- கள்ளக்காதலை கண்டித்ததால் விவசாயி அடித்து கொலை செய்யப்பட்டார்.
- இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.
சத்திரப்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கருமாநாயக்கனூரை சேர்ந்தவர் வையப்பன்(50) இவர் அதேபகுதிைய சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை பார்த்து அங்கேயே தங்கி வந்தார். அப்போது முத்து லட்சுமிக்கும், வையப்ப னுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இதனை முத்துலட்சுமி யின் சம்பந்தியான சக்திவேல் என்பவர் கண்டித்துள்ளார். இருந்தபோதும் வையப்பன் முத்துலட்சுமியுடன் தொடர்ந்து பழகி வந்தார். நேற்று வீட்டிற்குள் தூங்கிகொண்டிருந்த வையப்பனை சக்திவேல் சுத்தியால் சரமாரியாக தாக்கினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார். உடனே முத்துலட்சுமி அவரை திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி ச்சென்றார். ஆனால் வழியி லேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
- வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகை-பணம் எதுவும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
பழனி:
பழனி திருநகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி கனகா. செவிலியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று நள்ளிரவு இவர்களது வீட்டின் பூட்டைஉடைத்து கொள்ளையர்கள் சிலர் உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்து பார்த்தபோது அதில் நகை-பணம் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் வீட்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து ெசன்றனர். இன்று வீட்டிற்கு திரும்பிய சந்திரசேகரன் மர்மநபர்கள் பூட்டைஉடைத்து உள்ளே நுழைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிசிடிவி காமிராபதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தனது வீடடில் நகை-பணம் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும், பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து கொள்ளையர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் போலீசில் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கடந்த 3 மாதங்களாக சீரமைக்கப்பட்டது.
- தமிழகத்தில் வன பரப்பளவு 27 சதவீதமாக இருக்கிறது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையக்கோட்டையில் பசுமை தமிழகம் திட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கடந்த 3 மாதங்களாக சீரமைக்கப்பட்டது. இந்த இடத்தில் இருந்த கருவேல மரங்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று 6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் வரவேற்றார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 16 ஆயிரம் பேர் பங்கேற்று மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இதன் பயனாக சுமார் 2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதனை உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரிடம் எலைட் உலக சாதனை பதிவு நிறுவனத்தினர் வழங்கினர். மேலும் உலக சாதனையை பாராட்டும் வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது. பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்திலேயே 6 லட்சம் மரக்கன்று நட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நான் அமைச்சராக பங்கேற்கும் முதல் அரசு விழா திண்டுக்கல்லில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழகத்தில் வன பரப்பளவு 27 சதவீதமாக இருக்கிறது. அதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நான் அடுத்த முறை திண்டுக்கல் வரும்போது தற்போது நடப்பட்டுள்ள மரங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். இதை பராமரிப்பது அனைவரின் பொறுப்பு. இதில் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
- சாலையோர வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஒருசில இடங்களில் தெருவில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் ெதாடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
இவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் விதவிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல வண்ண பலூன்கள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு கண்கவர் வண்ணத்தில் ஜொலிக்கிறது.
இது தவிர கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிக்கும் வகையில் இயேசு கிறிஸ்து பிறப்பு, குடில், மரம் போன்றவை வித்தியாசமான வடிவங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆனால் இரவு நேரம் மட்டுமின்றி மாலை நேரங்களிலேயே வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் முக்கிய தெருக்களில் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. ஸ்வெட்டர், தலைக்குல்லா போன்ற கம்பளி பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது.
சாலையோர வியாபாரிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஒருசில இடங்களில் தெருவில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
வரும் நாட்களில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இத்தொழிலை நம்பி உள்ள ஓட்டல், விடுதி உரிமையாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கடந்த சில நாட்களாகவே நகர்பகுதியின் விரிவாக்கத்தால் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் குறைந்துள்ளது.
- தற்போது பிளாக் அண்ட் ஆரஞ்சு, பிளைகேட்சர், ஒயிட்பால்டி, லாபிங்திரஸ் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலைச் சுற்றி இயற்றை எழில் கொஞ்சும் மலைகள் மற்றும் காடுகள் உள்ளன. இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நகர்பகுதியின் விரிவாக்கத்தால் சிட்டுக்குருவிகளின் ரிங்காரம் குறைந்துள்ளது.
மேலும் பல அரியவகை பறவைகள் அழியும் நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் வருகையும் குறைவாகவே இருந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மலைப்பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தது. மேலும் காற்று மாசும் குறைந்ததால் வனப்பகுதியில் புத்துயிர் பெற்று சிட்டுக்குருவிகள் சத்தம் கேட்கதொடங்கியுள்ளது.பாம்பே சோலை, மதிகெட்டான்சோலை, புலிச்சோலை உள்ளிட்ட காடுகளில் பிளாக் அண்ட் ஆரஞ்சு, பிளைகேட்சர், ஒயிட்பால்டி, லாபிங்திரஸ் உள்ளிட்ட பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.
மேலும் வெளிநாட்டு பறவைகளான அக்கிடெல்லா, ஏசியன்குயில், ஜெசினா வகைகளும் வரத்தொடங்கியுள்ளதால் வனப்பகுதி உற்சாகமிக்க இடமாக மாறியுள்ளது.
+3
- திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- பள்ளியில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் எவ்வாறு உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல்:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசுமுறை பயணமாக திண்டுக்கல் வருகை தந்தார்.
இன்று காலை திண்டுக்கல் மாநகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு செய்தார்.
குழந்தைகளுக்கு தானே உணவு வழங்கி அந்த உணவின் தரத்தையும் ஆய்வு செய்தனர். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு விட்டு தினமும் நல்ல உணவு வழங்கப்படுகிறதா? என குழந்தைகளிடம் கேட்டார். அதற்கு குழந்தைகள் நன்றாக உணவு தயாரித்து குறிப்பிட்ட நேரத்துக்குள் பள்ளி வந்தவுடன் கிடைக்கிறது என்று தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் பள்ளியில் கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதிகள் எவ்வாறு உள்ளது என ஆய்வு மேற்கொண்டார். குழந்தைகளுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினர்.
அதன்பின் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட வீரர், வீராங்கனைகளுடன் கலந்துரையாடி என்னென்ன வசதிகள் தேவை என்பதை கேட்டறிந்தார். அதனை உடனடியாக நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார். அதன்பின் திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி வைத்து இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து வாலிபால் மைனதானத்தின் கேலரிக்கான அடிக்கல்லை நட்டு வைத்தார். பின்னர் வேடசந்தூரில் நடந்த தி.மு.க. கொடியேற்று விழாவில் பங்கேற்றார். பிற்பகலில் இடைய கோட்டையில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக 117 ஏக்கரில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்கிறார்.
இன்று மாலையில் திண்டுக்கல்லில் நடக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து சிறுமலை பிரிவு, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குகிறார்.
முன்னதாக திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கொடைரோடு சுங்கச்சாவடி பகுதியில் அமைச்சர்கள் இ.பெரி யசாமி, அர.சக்கரபாணி தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- 80 சதவீத கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்துள்ளன.
- கோவில் ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு பாலாய பணிகள் நடைபெற்றது. இதனைதொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் திருப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் திருப்பணிகளுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், சேதமடைந்த சிற்பங்கள், சன்னதிகளின் விமானம் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.
கோவில்ராஜகோபுரத்தில் கலசம் பொருத்தி தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளைமறுநாள்(25-ந்தேதி) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கிறார். கும்பாபிஷேகத்திற்கு ஒருமாதமே உள்ளதாலும், அதனைதொடர்ந்து தைப்பூசத்திருவிழா தொடங்க உள்ளதாலும் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல்வேறு ஊர்களில் இருந்து பழனி கோவிலுக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்துவர தொடங்கி உள்ளனர். கடும் பனி நிலவி வரும் போதிலும் இரவு பகலாக பக்தர்கள் அதிகளவில் பழனியை நோக்கி நடந்து செல்கின்றனர்.
- வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
- கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.
ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.
அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.






