என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • ஐயப்ப பக்தரான ராமையா கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் சேவை புரிந்து வருகிறார்.
    • பரிமலையில் நடைதிறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் தவறாமல் சேவை செய்வதற்காக சபரிமலை சென்று விடுவார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா(58). ஐயப்ப பக்தரான இவர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் சேவை புரிந்து வருகிறார். சபரிமலையில் நடைதிறந்திருக்கும் மாத பூஜை நாட்கள், விசேஷ நாட்கள் மற்றும் மண்டல, மகரவிளக்கு தினங்களில் சபரிமலையில் தங்கி அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு சார்பில் சேவை செய்து வருகிறார்.

    மேலும் இவர் சபரிமலையில் நடைதிறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் தவறாமல் சேவை செய்வதற்காக சபரிமலை சென்று விடுவார். ஐயப்பனை காண வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். அவசர கால பிரிவிலும் பணிபுரிந்து வருகிறார். இவரது சேவை பணிக்காக மண்டல பூஜையின்போது ஐயப்பசாமிக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கியை சுமந்துவரும் வாய்ப்பினை அகிலபாரத ஐயப்பா சேவா அமைப்பு இந்த ஆண்டு வழங்கியுள்ளது.

    நான் சபரிமலையில் தொடர்ந்து செய்து வருகிற சேவைக்காக அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தமிழ்மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமக்கும் அரிய பாக்கியத்தை எனக்கு வழங்கியுள்ளது. இதை என்வாழ்நாள் பாக்கியமாக எண்ணுகிறேன். என் ஆயுள் முழுவதும் சபரிமலையில் பக்தர்களுக்காக சேவை செய்து வருவேன் என்றார்.

    • பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் ரேசன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1000 ரொக்கப்பணம் மற்றும் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து வழங்க கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் தனபால் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல் மற்றும் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தங்கள் கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.

    இதே போல பொங்கல் பரிசு தொகுப்புடன் மண்பானை வழங்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தலையில் மண்பானையை சுமந்து வந்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மேலும் தங்கள் கைகளில் கரும்பு ஏந்தி வந்து ஊர்வலமாக போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், அதனை மீறி நடத்தினால் சம்மந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
    • விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் கடந்த 23-ந் தேதியுடன் முடிந்து 24-ந் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 5-ந் தேதியும் மற்ற மாணவர்களுக்கு 2-ந் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும், அதனை மீறி நடத்தினால் சம்மந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

    ஆனால் திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களை வரவழைத்து சிறப்பு வகுப்பு எடுத்து வருகின்றனர். வழக்கமாக சீருடையில் வருவது போல் இல்லாமல் சாதாரண உடை அணிந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலை முதல் மாலை வரை வகுப்பில் கலந்து கொள்கின்றனர்.

    தங்கள் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர்களை விடுமுறை நாட்களில் மேலும் மன அழுத்தத்துக்கு ஆளாக்க கூடாது என்ற நோக்கத்தில் அரசு அறிவித்தாலும் சில தனியார் பள்ளிகள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் விடுமுறை நாட்களில் கூட தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், விடுமுறையை அனுபவிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே அதிகாரிகள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    • ஒளி விளக்கு மூலம் பூச்சிகளை அந்த விளக்கில் உள்ள தட்டில் சோப்பு தண்ணீர் மண்ணெண்ணெய் வைத்து அதில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை செயல் விளக்க பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டது.
    • செயல் விளக்க எந்திரத்தை வேளாண்மை இணை இயக்குநர் வழங்க, துணை இயக்குநர் அதன் பயன்கள், முக்கியத்துவம் பற்றியும் கூறினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் வட்டாரம் மாங்கரை கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம் சோலார் ஒளி விளக்கு பொறி இயந்திரம் வழங்கப்பட்டது.

    இந்த ஒளி விளக்கு மூலம் பூச்சிகளை அந்த விளக்கில் உள்ள தட்டில் சோப்பு தண்ணீர் மண்ணெண்ணெய் வைத்து அதில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறையினை செயல் விளக்க பயிற்சியாக செய்து காண்பிக்கப்பட்டது. இதில் பயனாளி மணிகன்டனுக்கு சூரிய ஒளி மூலம் பூச்சி கட்டுப்படுத்தும் விளக்கு முழு மானியத்தில் வழங்கி செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இச்செயல் விளக்க எந்திரத்தை வேளாண்மை இணை இயக்குநர் அனுசுயா வழங்க, துணை இயக்குநர் விஜயராணி அதன் பயன்கள், முக்கியத்துவம் பற்றி கூறினார். நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் சந்திரமோகன் ஆலோசனைபடி எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சியாளர் தேவராஜன் செயல் விளக்கமாக விவசாயிகளுக்கு செய்து காண்பித்தார்.

    ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகன்யா மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு மற்றும் அருண்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • கொடைக்கானலுக்கு தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
    • தொடர் சாரல் மழை மற்றும் மின் தடையால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று மதியம் தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் விடாது பெய்த மழையினால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதே போல் சத்திரப்பட்டி, நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் அடிக்கடி நிலவும் மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் பூலத்தூர் மெயின் ரோட்டில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதனால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானலுக்கு தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

    தொடர் சாரல் மழை மற்றும் மின் தடையால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். விபத்துக்களை தடுக்க மலைச்சாலையில் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் 26.9, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 21, பழனி 5.5, சத்திரப்பட்டி 11.6, நத்தம் 11.5, நிலக்கோட்டை 32, வேடசந்தூர் 26.7, காமாட்சிபுரம் 14.8, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 12 என மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188.7 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
    • சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு சீனிவாசன் தனது தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அந்த கும்பல் கலையரசி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

    அப்போது குழந்தைகள் இருவரது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுக்குமாறு கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசி என்ன செய்வது என்று தெரியாமல் அலறினார். சத்தம் போட்டால் குழந்தைகளை கொன்று விடுவோம் என மிரட்டிய அந்த கும்பல் 5 பீரோக்களையும் உடைத்து திறந்தனர். அதில் இருந்த 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து ஒரு சூட்கேசில் வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து நடந்த விவரங்களை தனது கணவரிடம் கலையரசி தெரிவித்தார். உடனே வேடசந்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன், வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இது மட்டுமின்றி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சீனிவாசன் வீட்டில் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பதால் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அக்கம் பக்கத்தினர் நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல் டாக்டர் தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப்போட்டு 100 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மட்டும் கொடைரோடு அருகே சிக்கியது. இதனால் கொள்ளை கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    இருந்தபோதும் அந்த வழக்கில் இன்னும் உண்மை குற்றவாளிகள் பிடிபடவில்லை. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயற்கை மூலிகை சாறுகள் கலந்த கலவையை கொண்டு எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாது வீட்டை கட்டியுள்ளனர்.
    • கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தூண்கள் செட்டிநாடு பகுதியில் வாங்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வில்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பள்ளங்கி கிராமத்தை ஒட்டிய அலத்துரை கிராமத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரிதா, சிம்ரத்மல்லி தம்பதியினர் இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு ரசாயன கலவை இல்லாத வீட்டை வடிவமைத்துள்ளனர்.

    ஒரு துளி கூட சிமெண்ட் சேர்க்காமல் கிளிஞ்சல் சுண்ணாம்பு, கல் சுண்ணாம்பு, மணல், கருப்பட்டி, புளி, சப்பாத்திக்கள்ளி, வேப்பம்பட்டை, கடுக்காய், தயிர், முட்டை, நாரி செடி, நீல அவரை, கருங்கல், இயற்கை மூலிகை சாறுகள் கலந்த கலவையை கொண்டு எந்தவித ரசாயனமும் பயன்படுத்தாது வீட்டை கட்டியுள்ளனர்.

    வீட்டின் உள்புறம் கருமருது, கடுக்காய் மரம், இளமருது, வேங்கை, பர்மா தேக்கு ஆகிய மரங்களைக் கொண்டு படிக்கட்டுகள், கைப்பிடிகள், பால்கனி ஆகியவற்றை அமைத்துள்ளனர். பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களை போல் இறுக்கமான பொருட்களை கொண்டு மட்டும் வீட்டை அமைத்துள்ளனர்.

    தரைத்தளத்தில் இரண்டு அறைகள், மேல் தளத்தில் இரண்டு அறைகள், முன்புறம் வராண்டா என அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டை வடிவமைப்பதற்கு சுமார் ரூ.1 கோடி ரூபாய் செலவானதாக இதை வடிவமைத்து தற்போது அதன் பாதுகாவலராக உள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தெரிவித்துள்ளார். இந்த வீட்டின் உரிமையாளர் இதேபோல் கோவாவிலும் சிறிய அளவிலான ரிசார்ட் ஒன்றை அமைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இயற்கை உணவுகளே உண்டு வருவதாகவும், இயற்கையாக தயாரிக்கப்பட்ட சோப்பு ஷாம்புகளை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும், இயற்கையின் பயன்பாடு குறித்து ஒரு சில வெளிநாட்டு மாணவர்களை அழைத்து வந்து கொடைக்கானலில் உள்ள இந்த இயற்கை வீட்டில் வைத்து அவர்களுக்கு விளக்க வகுப்புகள் நடத்தி வருவதாகவும் வீட்டின் பாதுகாவலர் குமார் தெரிவித்தார்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயற்கை சூழல் அழிந்து வரும் நிலையில் பழங்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் கொடைக்கானலில் அமைத்துள்ள இயற்கை வீடு பல்வேறு தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. வெயில் காலங்களில் வீட்டினுள் குளிரான சீதோஷ்ண நிலையும், வெளியில் குளிரான சூழல் நிலவினால் வீட்டினுள் கதகதப்பான சூழல் இருக்கும் எனவும், இந்த வீட்டில் உறங்கும்போது கிடைக்கும் சுவாசம் நோய் நொடிகள் வராமல் தடுத்து நீண்ட ஆயுளை கொடுக்கும் என்றும், முறையாக பராமரித்து வந்தால் ஆயிரம் ஆண்டுகள் கூட இந்த வீடு பழுதடையாமல் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

    இந்தக் கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தூண்கள் செட்டிநாடு பகுதியில் வாங்கப்பட்டது. இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது இந்த வீட்டை அதிசயமாக பார்த்துச் செல்கின்றனர்.

    • பணிகளுக்காக செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பணியாளர்கள் யானைப்பாதை வழியாக தள்ளுவண்டியில் கொண்டு சென்றனர்.
    • தள்ளுவண்டி கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடியதில் யானைப்பதை வழியாக மலைக்கோவிலுக்கு சாமி தசரினம் செய்ய சென்று கொண்டிருந்த 4 பேர் மீது கற்கள் விழுந்து காயம் அடைந்தனர்.

    பழனி:

    பழனி மலை முருகன் கோவிலில் ஜனவரி 27ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி மலைக் ேகாவிலுக்கு செல்லும் பாதை, யானைப்பாதையில் உள்ள மண்டபங்கள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சிறிய தள்ளுவண்டியில் இந்த பணிகளுக்காக செங்கல், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை பணியாளர்கள் யானைப்பாதை வழியாக கொண்டு சென்றனர்.

    அப்போது தள்ளுவண்டி கட்டுப்பாட்டை இழந்து உருண்டு ஓடியது. இதில் யானைப்பதை வழியாக மலைக்கோவிலுக்கு சாமி தசரினம் செய்ய சென்று கொண்டிருந்த ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் உள்ள மந்திரிபாளையத்தை சேர்ந்த சிதம்பரம் (வயது37), அவரது மகன் ரோகித் ( வயது8), சேலத்தை சேர்ந்த இருவர் என மொத்தம் 4 பேர் மீது தள்ளுவண்டியில் இருந்த கற்கள் விழுந்தது. இதில் அவர்கள் 4 பேரும் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் பழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினர்.

    இது குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    • வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.
    • ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற 27.01.2023 குடமுழுக்கு அன்று நடைபெறவுள்ளது.

    அதனையொட்டி இன்று நடைபெற்ற பந்தக்கால் நடும் விழாவில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு, வேலவன் விடுதி வளாகத்தில் கோவில் மூலம் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவமனையையும் திறந்து வைத்தனர்.

    அதனைத் தொடர்ந்து ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவில் ராஜ கோபுர கலசங்களுக்கு தங்க ரேக் ஒட்டும் பணிகள், ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் மலைக் கோவில் நீராழி பத்தி மண்டபத்தினைச் சுற்றிலும் தற்போதுள்ள இரும்பு மற்றும் எவர்சில்வர் கம்பிகளால் ஆன தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகளுக்கு பதிலாக கோவில் அமைப்பிற்கேற்றவாறு, பித்தளையிலான தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள் அமைத்தல், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நீராழிபத்தி மண்டபத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையில் இரும்பிலான தடுப்பு வேலிகளை அகற்றி பித்தளை கம்பி வேலி அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் தங்க விமானத்தை சுற்றியுள்ள இரும்பினால் ஆன பாதுகாப்பு வேலியினை அகற்றி பித்தளையிலான பாதுகாப்பு வேலியினை அமைத்தல் ஆகிய திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ரோப் கார் கீழ்நிலையத்தில் பக்தர்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்கல மகிழுந்துகளையும் (பேட்டரிகார்) அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    • சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திர ஏரி, ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் கொடைக்கானல் எங்கும் வண்ணமயமாக இருந்தது.
    • குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட வழிசெய்தது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இயற்கை எழில்கொஞ்சம் சுற்றுச்சூழல் நிலவுவதால் வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளின் வருகை இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் குளுகுளுவென காலநிலையும், குளிர்ச்சியான காற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது.

    பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்களின் விடுமுறையை உற்சாகமாக களிக்கின்றனர். உயரமான மலையிடங்கள், அருவிகள், படகுசவாரி, பூங்காக்கள், வண்ணமலர்கள் என கொடைக்கானலில் உள்ள அனைத்துமே பொழுது போக்கு அம்சமாக விளங்குவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கிறது.

    மேலும் நேற்றுமுதல் பள்ளிகளில் அரையாண்டு த்தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்காகவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காகவும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோயர்பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, குணாகுகை, அப்பர்லேக்வியூ, பைன்மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் உள்ள எழில்கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திர ஏரி, ஓட்டல்கள், கடைகள் என அனைத்தும் கொடைக்கானல் எங்கும் வண்ணமயமாக இருந்தது. இது குழந்தைகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் விடுமுறையை உற்சாகமாக கொண்டாட வழிசெய்தது. பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்காவில் பூத்துகுலுங்கும் வண்ணமலர்களை கண்டு ரசித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பூத்துகுலுங்கிய சிலுவை பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியமாக பார்த்து ரசித்தனர்.

    மேலும் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகுசவாரி, ஏரிச்சாலையில் குதிரைசவாரி, சைக்கிள் சவாரி என விடுமுறையை கழித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்வாறு அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்டுள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகளவில் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதனால் வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • தேவாலயங்களில் இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்:

    உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்துமஸ் தினமாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் இரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திண்டுக்கல் மணிக்கூண்டு புனிதவளனார் பேராலயத்தில் கூட்டுத்திருப்பலி திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ்பால்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆயரின் செயலர் இளங்கோ, பேராலய பங்குதந்தை மரியஇஞ்ஞாசி, ஜார்ஸ் ஸ்டீபன், ஜாஸ்பர் ஆகியோர் சிறப்பு கூட்டு திருப்பலியை நிறைவேற்றினர்.

    நள்ளிரவு 12 மணிக்கு ஏசு பிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. பின்னர் ஒருவருக்கொருவர் கேக் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    இதேபோல் என்.ஜி.ஓ.காலனி, ரவுண்டுரோடு, சாலைரோடு பவுல்சர்ச் முத்தழகுபட்டி, மாரம்பாடி உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    நத்தம், செந்துறை புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆலயத்தில் இரவு 11 மணிக்கு சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சரியாக நள்ளிரவு 12 மணிக்கு ஆலய மணி ஒலிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில்பாலன்இயேசு கிறிஸ்து உருவ அமைப்பு கொண்ட சிசு பொம்மை எடுக்கப்பட்டு தேவாலயத்தில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.

    இதனையடுத்து அந்த சிசு இயேசு கிறிஸ்து ஆலயத்தில் வடிவமைத்து வைக்கப்பட்டிருந்த குடிலில் வைக்கப்பட்டு அதற்கு தூபம் காண்பிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டது.

    ஆலயத்தில் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை விழாவில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

    • சிறுவன் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து எங்கள் மகன் மர்ம நோயில் இருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்

    செம்பட்டி:

    திண்டுக்கல் அருகே ஆத்தூர் எஸ்.பாறைப்பட்டி தோட்டத்து குடியிருப்பைச் சேர்ந்த மாரிமுத்து-கஸ்தூரி தம்பதியினர். இவர்களது மகன் முகேஷ் (வயது 10) அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்த சிறுவன் முகேஷ் கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.

    இதையடுத்து பழனி மற்றும் திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால், உடல்நிலை முன்னேற்றமடையாததால், மேல் சிகிச்சைக்கு மதுரை அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து தங்கள் வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் நிலங்களை விற்று ரூ.7 லட்சம் வரை செலவு செய்து நவீன பரிசோதனை செய்தனர்.

    இதில் சிறுவன் வில்சன் காப்பர் என்னும் மர்ம நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும் சிகிச்சையின் போதே மாணவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. முகேசுக்கு கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய வேண்டும்.

    இது மர்மநோய் என்பதால் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஏைழ பெற்றோர் தங்கள் குழந்தையை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றி விடலாம் என அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் சென்னைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இது குறித்து சிறுவனின் தாய் கஸ்தூரி, தந்தை மாரிமுத்து கூறுகையில், 5ம் வகுப்பு படிக்கும் எங்களது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நிலை குறைவு ஏற்பட்டு பழனி, திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி என பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் இல்லாமல் நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலையில் வீட்டிற்கு வந்து விட்டோம்.

    எனவே, தமிழக முதல்வர், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து எங்கள் மகன் மர்ம நோயில் இருந்து மீள்வதற்கு உதவ வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×