என் மலர்
திண்டுக்கல்
- ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
- 5.60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி-சேலை வழங்கப்பட உள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் , தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் செயல்பட்டு வரும் ரேசன் கடைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினர் நடத்திவரும் 13 ரேசன் கடைகள் என மொத்தம் 1035 ரேசன் கடைகள் உள்ளன.
இந்த ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 6.79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000மும், ஒருகிலோ அரிசி, சர்க்கரையுடன் , ஒரு கரும்பும் வழங்கப்படஉள்ளது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள 5.60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு விலையில்லா வேஷ்டி-சேலை வழங்கப்பட உள்ளது.
இதனால் அந்தந்த வட்டங்களுக்கு தேவையான வேஷ்டி-சேலைகள் தாசில்தார் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து அந்தந்த ரேசன் கடைகளுக்கு வேஷ்டி-சேலைகள் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ரேசன் கடைகளில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அய்யப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வரும்வழியில் பழனி மலை கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
- பழனி நகராட்சி சார்பில் சன்னதிவீதி மற்றும் பூங்காரோடு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி எந்திரம்மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.
தற்போது அய்யப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வரும்வழியில் பழனி மலை கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி ேநாக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் வரும் ஜனவரி 29-ந்தேதி தொடங்குகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறைகாலம் என்பதால் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு முருகனை வழிபட வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரபகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் சாலையின் ஓரங்களில் போடப்பட்டுள்ளன.
இதுபோன்ற திடீர் கடைகளால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர். நெருக்கடிகளை குறைக்க அடிவாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால்பழனி நகராட்சி சார்பில் ் சன்னதிவீதி மற்றும் பூங்காரோடு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி எந்திரம்மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.
பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அருண்குமார் தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி வந்ததாக தெரிகிறது.
- போலீசார் அருண்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகில் உள்ள கருமன் கிணறு பகுதியை சேர்ந்த சங்கர் மகன் அருண்குமார் (24). திருமணம் ஆகாதவர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் அதேபகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அருண்குமார் சடலமாக மிதந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கள்ளிமந்தையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினருடன் வந்தனர். அவர்கள் வாலிபரின் உடலை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அருண்குமார் தொடர்ந்து செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளையாடி வந்ததாக தெரிகிறது. அதில் ஏற்பட்ட தோல்வியால் தற்கொலை செய்திருக்கலாம் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர்.
போலீசார் அருண்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மன்னவனூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரிக்காமல் ஆட்டுப்பண்ணை அருகே கொட்டி வருகின்றனர்
- மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் மற்றும் வன உயிரினங்கள் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள நெகிழிகளை உண்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னவனூர் ஊராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை தரம் பிரிக்காமல் ஆட்டுப்பண்ணை அருகே கொட்டி வருகின்றனர். மலைக்கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் வனத்தில் உள்ள வன உயிரினங்கள் அதை சாப்பிட்டு உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கொடைக்கானலிலும் பிளாஸ்டிக் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகள் அனைத்து பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளில் அதிகம் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் குவியல் குவியலாக கொட்டப்படுகிறது. மேய்ச்சலுக்காக வரும் கால்நடைகள் மற்றும் வன உயிரினங்கள் கொட்டப்படும் குப்பைகளில் உள்ள நெகிழிகளை உண்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே இது குறித்து பொதுமக்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி கால்நடைகளை காப்பாற்ற வேண்டும்.
- சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு ரசிக்கும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளின் நீரோட்டத்தை கண்டு ரசிக்க குவிந்தனர்.
- கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
கொடைக்கானல்:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் கொடைக்கானல் நகர் மற்றும் மலைக்கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக சுற்றுலாப் பணிகள் அதிகமான சுற்றுலா தலங்களை ரசிக்க முடியாமல் அறைகளில் முடங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் நேற்று மதிய வேலைக்கு பின் மழை சற்று குறைந்தது. இதனால் அனைத்து சுற்றுலா தளங்களிலும் பயணிகளின் கூட்டம் அலை மோதியது. கொடைக்கானல் தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.
மேலும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பயணிகள் அதிகமாக கண்டு ரசிக்கும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளின் நீரோட்டத்தை கண்டு ரசிக்க குவிந்தனர்.
இதன் காரணமாக அனைத்து அருவிப்பகுதிகளிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பாம்பார், வட்டக்கானல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர். பயணிகளின் வருகை அதிகரிப்பால் கொடைக்கானலின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கும் நிலையில் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- போலீசாருக்கான வருடாந்திர ஆய்வு பணி ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த ஆய்வில் போலீசாருடைய கவாத்து மற்றும் உடை பொருள்கள் ஆய்வு நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் உட்கோட்டத்திற்குட்பட்ட ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி, செம்பட்டி மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம், அனைத்து மகளிர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கான வருடாந்திர ஆய்வு பணி ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் நடைபெற்றது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த ஆய்வில் போலீசாருடைய கவாத்து மற்றும் உடை பொருள்கள் ஆய்வு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது தமிழக அரசால் புதிதாக காவலர்களுக்கு பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் காவலர் ஆப் குறித்தும், அதனை பயன்படுத்தும் முறை குறித்தும் போலீசாருக்கு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமாரி எடுத்துரைத்தார்.
இதில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜன், இடையகோட்டை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று இரவு முதலே பஞ்சாமிர்தம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
- அனைத்து ஸ்டால்களிலும் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டதால் இதனை வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு தினந்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது விடுமுறை என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மேலும் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகமும், 29-ந்தேதி தைப்பூச திருவிழாவிற்கான கொடியேற்றமும் நடைபெற உள்ளது. இதனால் அந்த சமயங்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக அங்குள்ள பிரசாதமான பஞ்சாமிர்தத்தை வாங்கிச்செல்வது வழக்கம். இதற்காக மலைக்கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாத ஸ்டால்கள் உள்ளன. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் நேற்று இரவு முதலே பஞ்சாமிர்தம் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
அனைத்து ஸ்டால்களிலும் பஞ்சாமிர்தம் தீர்ந்து விட்டதால் இதனை வாங்க வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். ஓரிரு நாட்களில் பஞ்சாமிர்தம் தயாரித்து அனைத்து ஸ்டால்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கு முன்பாக தட்டுப்பாடின்றி பஞ்சாமிர்தம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேரூராட்சி ஊழியர் உங்களை யார் இந்த புத்தகத்தை பார்க்க சொன்னது என கூறி பறித்துச் சென்றார்.
- இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் தலைவராக பிரதீபா, துணை த்தலைவராக ஆனந்தி ஆகியோர் உள்ளனர்.
மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருடத்தின் கடைசி பேரூராட்சி கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி காலை 11 மணி முதல் கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால் 12 மணி வரை தலைவர், துணைத்தலைவர் என யாரும் வரவில்லை. இதனையடுத்து உறுப்பினர்கள் அஜெண்டா புத்தகத்தில் என்ன தீர்மானங்கள் உள்ளது என பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பேரூராட்சி ஊழியர் உங்களை யார் இந்த புத்தகத்தை பார்க்க சொன்னது என கூறி பறித்துச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டம் நடைபெறும் என அறிவித்து விட்டு தலைவர் மற்றும் துணைத்தலைவரே வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் கவுன்சிலர்கள் சமாதானம் அடையவில்ைல. கூட்டத்தை நடத்துவது குறித்து தனக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. தலைவர் மற்றும் துணைத்தலைவரே முடிவு செய்வார்கள்.
எனவே போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து 10 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க. சேர்மன் மற்றும் துணைத்தலைவரை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட குற்றபிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- நிலமோசடி வழக்கில் ஆஜராகாத பெண் மீது பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் விவேகானந்தா நகரை சேர்ந்தவர் அஸ்வந்த் கண்ணா (வயது34). இவருக்கு சொந்தமான நிலத்தை திண்டுக்கல் மூக்கன் ஆசாரி சந்தை சேர்ந்த ராஜேந்திரன் தனது மகள்களான அனிதா, கண்மணி, மகன் வீரப்பன் மற்றும் உறவினர் ஆகியோருக்கு விற்பனை செய்தார்.
இந்த நிலத்துக்கான பணத்தை அஸ்வந்த்க ண்ணாவுக்கு வழங்கியது போல ராஜேந்திரன் போலி ரசீது தயாரித்து வழங்கினார். தன்னிடம் நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அஸ்வந்த்கண்ணா மாவட்ட குற்றபிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கு திண்டுக்கல் ஜே.எம்-2 கோர்ட்டில் நடந்தது. விசாரணைக்காக ராஜேந்திரன், அனிதா, வீரப்பன் உள்பட 5 பேர் ஆஜர் ஆன நிலையில் கண்மணி என்பவர் மட்டும் ஆஜராகவில்லை. இதனையடுத்து கண்மணியை ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட் மீனாட்சி உத்தரவிட்டார்.
- அறையில் இருந்து கரும்புகை வெளியேறி சிறிதுநேரத்தில் அந்த அறை முழுவதும் புகை பரவி தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- இந்த தீ விபத்தில் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கல்லறை மேடு அருகே தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு முதல்தளத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடமும், அதற்கு மேல் அழகுநிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த அழகுநிலையத்தை உடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஸ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அழகுநிலையத்தில் ஒரு வரவேற்பரை மற்றும் 5 அறைகள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர் மின்இணைப்பை போட்டுள்ளார். அப்போது முதல் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிதுநேரத்தில் அந்த அறை முழுவதும் புகை பரவி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அவர் தீயை அணைக்க முயன்றார். ஆனால் முடியாததால் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சற்றுநேரத்தில் அழகுநிலையம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக பொருட்கள் எரிந்து சேதமானதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து நகர் மேற்கு போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான இப்பகுதியில் தீ விபத்து நடந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதனிடையே தீ விபத்து நடந்தபோது அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது அவ்வழியே சென்ற கலெக்டர் தனது வாகனத்தை நிறுத்தி தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினரிடம் கேட்டறிந்தார்.
- பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- பல்வேறு துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விரைவில் தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழா முன்னேற்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் விசாகன் பேசியதாவது:-
பழனி கோவில் நிர்வாகம் சார்பில் நிரந்தர காவடி மண்டபங்கள் கட்டப்பட்டு, குடிநீர், மின் வசதி, கட்டணமில்லா கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்பட வேண்டும். கிரிவீதி பகுதியில் தேவையான அளவில் கழிப்பட வசதிகள், யானைப் பாதையில் தேவையான அளவில் தற்காலிக கழிப்பி டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தேவையான இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏதுவாக நீர் நிரப்பப்பட்ட டிரம்கள் தேவையான டம்ளர்கள் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். பாதயாத்திரை வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக அவர்க ளுக்கு அம்மையநாயக்கனூர் சுங்கச்சாவடி, செம்பட்டி, மூலச்சத்திரம், ரெட்டியார்சத்திரம், தாராபுரம் சாலை, நத்தம், சமுத்திரப்பட்டி, அய்யலூர் மற்றும் வேடசந்தூர் ஆத்துமேடு உட்பட பல்வேறு முக்கிய பகுதிகளில் சாவடிகள் அமைத்து ஒளிரும் குச்சிகள், ஒளிரும் பட்டைகள் வழங்கப்பட வேண்டும்.
பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையம் மற்றும் அருள்ஜோதி வீதி ஆகிய இடங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கான சிறப்பு கழிப்பிடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
பக்தர்களின் வசதிக்காக இலவச மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். பாதவிநாயகர் கோயில், பஸ் நிலையம், கிரிவீதி, ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அவசர கால ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். சண்முகநதி, இடும்பன்கோயில் ஆகிய இடங்களில் தலா ஒரு மருத்துவக்குழு தேவையான மருந்துகளுடன் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும்.
விழா நாட்களில் பழனி நகர் மற்றும் திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தடையற்ற மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தைப்பூசத்திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் குளிக்கும் இடங்களான இடும்பன்குளம், சண்முகநதி போன்ற இடங்களில் விபத்துக்கால தடுப்பு உபகரணங்கள் மற்றும் நீச்சல் திறமையுள்ள தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
ஒட்டன்சத்திரம் முதல் பழனி வரையிலான சாலை, சண்முகநதியிலிருந்து பைபாஸ் வரையிலான சாலைகளில் ஆங்காங்கே சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பழனி நகரை நோக்கிச் செல்லும் பக்தர்கள் நடந்து வர பயன்படுத்தும் அனைத்து சாலைகளின் இருபுறங்கிலும் உள்ள செடிகள் மற்றும் புதர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும்.
பக்தர்களின் பாதுகாப்பிற்காக சாலையின் ஓரங்களில் ஒளிரும் கயிறுகள், மணல் மூட்டைகள் போன்றவை அமைக்கவும், மெயின் ரோட்டில் கிளைச் சாலைகள் சேரும் இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும்.
பழனி நகருக்கு வரும் வழியில் உள்ள வழித்தடங்களில் சேகரமாகும் குப்பைகள் அந்தந்த பகுதி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளால் உடனுக்குடன் அகற்றி, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
உணவு விடுதிகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை அடிக்கடி செய்து, பக்தர்களுக்கு சுகாதாரமான உணவுப்பொருள், நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட காவல்துறை சார்பில் தேவையான அளவு காவலர்கள் மற்றும் பெண் காவலர்களை பணியமர்த்தி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
பழனி அரசு மருத்துவமனையில் தேவையான மருந்துகள், மாத்திரைகளை இருப்பு வைக்க வேண்டும். பல்வேறு துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி விரைவில் தகுந்த முன்னேற்பாடு பணிகள் மேற்கொள் ளப்பட்டு ள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன்,கோயில் துணை ஆணையர் பிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரேம்குமார், பழனி சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
- கொடைக்கானல் நகரின் நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்துகிடக்கின்றன.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிவிடுமுறை காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்துள்ளனர். இதனால் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகிறது.
ஆனால் தொடர்மழை காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்று காணமுடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். இருந்தபோதும் குடைபிடித்தவாறு ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்தும், பிரையண்ட் பூங்காவில் அழகிய மலர்களை கண்டுரசித்தும் வருகின்றனர்.
கொடைக்கானல் நகரின் நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நீண்டவரிசையில் காத்துகிடக்கின்றன. சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாக இருந்தபோதும் சாலையோர வியாபாரிகள் கடை அமைக்க முடியாததால் அவர்கள் வியாபாரம் இன்றி தவித்து வருகின்றனர். ஏரிச்சாலை பகுதியில் கடைகள் வைத்திருப்போர் மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி சுற்றுலா பயணிகள் வரமுடியாத நிலை ஏற்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
நேற்றுஇரவு முதல் இன்றும் இடைவிடாமல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால் உள்ளூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பேக்கேஜ் விடுமுறையில் கொடைக்கானலுக்கு வந்தவர்கள் பலர் விடுதியிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வரும் சமயங்களில் ஏரிச்சாலையில் படகுசவாரி நிறுத்தப்படுகிறது. இருந்தபோதும் மழை நிற்கும் வரை சுற்றுலா பயணிகள் காத்திருந்து குடைபிடித்தவாறு படகுசவாரி செய்து மகிழ்கின்றனர்.
கொடைக்கானல் மலைகிராமங்களிலும், முக்கிய சாலைகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனமுடன் செல்லுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
கொடைக்கானலில் நாளொன்றுக்கு சுமார் 20 முறை மின்தடை ஏற்படுகிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் விட்டுவிட்டு மின்தடை ஏற்படுகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிப்பது இல்லை. ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகளும் இந்த மின்தடையால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு சில நட்சத்திர விடுதிகளில் மட்டுமே ஜெனரேட்டர் வசதி உள்ளது. இதனால் மற்ற விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் அவதியடைந்து வருகின்றனர். தொடர் மழை சமயத்திலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் வியாபாரிகள் தங்கள் தொழிலை இழந்து தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
புத்தாண்டு வரை பயணிகளின் கூட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலையோர வியாபாரிகள் மற்றும் தேனீர் கடை உரிமையாளர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.






