search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்- 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை அள்ளிச் சென்றனர்
    X

    ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்- 43 பவுன் நகை, ரூ.18 லட்சத்தை அள்ளிச் சென்றனர்

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.
    • சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று இரவு சீனிவாசன் தனது தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அந்த கும்பல் கலையரசி தூங்கிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தனர்.

    அப்போது குழந்தைகள் இருவரது கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுக்குமாறு கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலையரசி என்ன செய்வது என்று தெரியாமல் அலறினார். சத்தம் போட்டால் குழந்தைகளை கொன்று விடுவோம் என மிரட்டிய அந்த கும்பல் 5 பீரோக்களையும் உடைத்து திறந்தனர். அதில் இருந்த 43 பவுன் நகை, ரூ.18 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து ஒரு சூட்கேசில் வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் இருந்த செல்போன்களையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்து நடந்த விவரங்களை தனது கணவரிடம் கலையரசி தெரிவித்தார். உடனே வேடசந்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, எஸ்.பி. பாஸ்கரன், வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் விரைந்து வந்தனர்.

    தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. இது மட்டுமின்றி அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் உதவியுடனும் கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    சீனிவாசன் வீட்டில் இல்லாததை அறிந்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பதால் அவருக்கு நெருக்கமானவர்கள் அல்லது அக்கம் பக்கத்தினர் நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இதேபோல் டாக்டர் தம்பதி மற்றும் குழந்தைகளை கட்டிப்போட்டு 100 பவுன் நகை, ரூ.25 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த வழக்கில் இதுவரை யாரும் பிடிபடவில்லை. கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் மட்டும் கொடைரோடு அருகே சிக்கியது. இதனால் கொள்ளை கும்பல் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    இருந்தபோதும் அந்த வழக்கில் இன்னும் உண்மை குற்றவாளிகள் பிடிபடவில்லை. தற்போது அதேபோன்று மற்றொரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×