என் மலர்
உள்ளூர் செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்று நட்டபோது எடுத்த படம்.
2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
- 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கடந்த 3 மாதங்களாக சீரமைக்கப்பட்டது.
- தமிழகத்தில் வன பரப்பளவு 27 சதவீதமாக இருக்கிறது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையக்கோட்டையில் பசுமை தமிழகம் திட்டத்தில் உலக சாதனை நிகழ்ச்சியாக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 117 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் கடந்த 3 மாதங்களாக சீரமைக்கப்பட்டது. இந்த இடத்தில் இருந்த கருவேல மரங்கள், செடி கொடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று 6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் தினேஷ் குமார் வரவேற்றார். ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என 16 ஆயிரம் பேர் பங்கேற்று மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். இதன் பயனாக சுமார் 2 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதனை உலக சாதனையாக அங்கீகரித்து அதற்கான சான்றிதழை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோரிடம் எலைட் உலக சாதனை பதிவு நிறுவனத்தினர் வழங்கினர். மேலும் உலக சாதனையை பாராட்டும் வகையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் உள்பட அனைவருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது. பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
6 லட்சம் மரக்கன்றுகளை 4 மணி நேரத்தில் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 2 மணி நேரத்திலேயே 6 லட்சம் மரக்கன்று நட்டு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. நான் அமைச்சராக பங்கேற்கும் முதல் அரசு விழா திண்டுக்கல்லில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழகத்தில் வன பரப்பளவு 27 சதவீதமாக இருக்கிறது. அதை 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த இலக்கு வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
நான் அடுத்த முறை திண்டுக்கல் வரும்போது தற்போது நடப்பட்டுள்ள மரங்கள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பேன். இதை பராமரிப்பது அனைவரின் பொறுப்பு. இதில் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கெடுக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.






