search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்
    X

     

    நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள்

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Next Story
    ×