என் மலர்
நீங்கள் தேடியது "பழனியில் அலைமோதிய பக்தர்கள்"
- தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
- மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்றனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். சபரிமலை சீசன் என்பதால் அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வரும் வழியில் முருகனை தரிசித்து செல்கின்றனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச வாகனம் நிறுத்துமிடங்கள் நிரம்பியதால் அடிவாரம், சன்னதி வீதி, கிரிவீதி, அய்யம்புளி ரோடு, அருள்ஜோதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
போதுமான வாகனங்கள் நிறுத்த வசதியில்லாத நிலையில் நோ-பார்க்கிங்கில் நிறுத்தியிருந்தனர். அந்த வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். நகரில் வாகனங்கள் போக்குவரத்து அதிகம் இருந்ததால் அடிவாரம் அய்யம்புளி ரோடு, கிரிவீதி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி தேவஸ்தான விடுதிகளில் அனைத்து அறைகளும் நிரம்பின. தனியார் தேவஸ்தான கடைகளில் பஞ்சாமிர்தம் வாங்க கடைகளில் கூட்டம் நிரம்பியது. மலைக்கோவிலில் காலை முதல் வின்ச், ரோப்கார் தரிசன வரிசையில் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் தரிசன வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி கிரிவீதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகளாலும், பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
கிரிவீதியின் நடுவில் வடமாநிலத்தவர் தட்டு கடைகளை வைத்து பக்தர்களை தொந்தரவு செய்தவாக தெரிகிறது. இவர்களுடன் சிறுவர்கள் பக்தர்களிடம் யாசகம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். விடுமுறை நாள் என்பதால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இதனால் மலைக்கோவிலில் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று முருகனை தரிசித்து சென்றனர்.






