search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பண்டிகைக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை
    X

    கோப்பு படம்

    பொங்கல் பண்டிகைக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கவலை

    • இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
    • கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேசன்கார்டுதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் பொங்கலுக்கு தேவயைான பொருட்கள் வழங்கப்படும்.இது தவிர ரொக்கத்தொகை, வேஷ்டி-சேலையும் வழங்கப்படும்.

    இந்த ஆண்டு ரூ.1000 ரொக்கத்துடன் அரிசி மற்றும் சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஜனவரி 2-ந்தேதி முதல் அந்தந்த ரேசன் கடைகளில் இதனைபெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நிலக்கோட்டை, ெநாச்சிஓடைப்பட்டி, கூவனூத்து, சாணார்பட்டி, சிலுவத்தூர், அஞ்சுகுழிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விவசாயிகளிடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 300 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.20ஆயிரம் வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் குறைந்திருந்த நிலையில் அரசு வாங்காததால் விளைவித்த கரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    மேலும் வியாபாரிகள் நேரடியாக கரும்பு விவசாயிகளிடம் வந்து குறைந்த விலைக்கு வாங்கிச்செல்கின்றனர். வேறு வழியின்றி நஷ்டமடைந்தாலும் அதனை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்,

    ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து பராமரித்து கரும்பை காப்பாற்றி வந்தோம். அரசு கொள்முதல் செய்தால் எங்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். விளைச்சல் குறைந்துள்ள போதிலும் தற்போது கிடைத்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வருடம் முழுவதும் கரும்பு விவசாயத்தை நம்பியே ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

    ஆனால் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டுவரும் வேளையில் நஷ்டத்தையே சந்தித்து வருகிறோம் என்றார்.

    பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் கரும்பு கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில் ஏராளமான விவசாயிகள் இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வந்தனர். தற்போது அரசு அறிவித்துள்ள முடிவால் வரும் காலங்களில் கரும்பு விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    திண்டுக்கல் போன்ற சராசரி மழையளவு கிடைக்காத மாவட்டங்களில் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் விளைபொருளுக்கு ஏற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே அரசு இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×