என் மலர்
திண்டுக்கல்
- மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் தேவாரப்பாடல்கள் பாடியபடி விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.
- அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் ஓடத்ெதாடங்கினர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாறைப்பட்டி காளியம்மன் கோவில் முன்பு ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 நாட்கள் வழிபாட்டுக்கு பின்பு வத்தலக்குண்டு ரோடு, பேகம்பூர் வழியாக கோட்டைக்குளத்தில் எடுத்து சென்று கரைக்கப்படுவது வழக்கம்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் நடந்த விநாயகர் ஊர்வலத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்ததால் இந்த ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி நேற்று முன்தினம் ேகாவில் முன்பு ஊர் பொதுமக்கள் சார்பில் 6 அடி உயர விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அந்த சிலை இன்று பொதுமக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் டி.எஸ்.பி. மற்றும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர். தேவாரப்பாடல்கள் பாடியபடி விநாயகர் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க அழைத்து வரப்பட்ட விநாயகர் சிலை பேகம்பூர் பள்ளிவாசல் அருகே வந்தபோது வாத்தியங்கள் இசைப்பதை நிறுத்துமாறு போலீசார் தெரிவித்தனர்.
அப்போது பொது மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவில் குழுவினரால் பஜனை பாடல்கள் பாடி விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மேளதாளங்கள் முழங்க சிலையை கரைப்பதற்காக எடுத்தனர். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் அலறியடித்து நாலாபுறமும் ஓடத்ெதாடங்கினர்.
அப்ேபாது அங்கிருந்த தீயணைப்புத்துறையினர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து அங்கிருந்து எடுத்துச் சென்றனர். அதன்பிறகு விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர்.
- தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின.
- கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
அருவிகள் முன்பு நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து சென்றனர். இதனிடையே வனத்துறைக்கு கட்டுப்பட்ட பேரிஜம் ஏரி, மோயர் பாயிண்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல இன்று 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று 2-வது நாளாக கொடைக்கானல் நகர் மற்றும் மலை கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.
தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறி பயிர்கள் நீரில் மூழ்கின. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மேல்மலை, தாண்டிக்குடி, கீழ்மலைப்பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் கடும் சிரமத்தை மக்கள் சந்தித்தனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஊருக்கு வெளியே 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பள்ளிக்கு காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் வருகின்றனர். கனமழை காரணமாக இப்பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் 2 ணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது.
காலாண்டுத் தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளிக்கு செல்ல தயார் நிலையில் இருந்த மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இதனையடுத்து தனியாருக்கு சொந்தமான லாரிகளில் மாணவ-மாணவிகள் ஏறி மாற்று வழியில் பள்ளிக்கு சென்றனர். ஒரு சில மாணவிகள் கூட்ட நெரிசலில் லாரியில் செல்ல தயங்கி மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் தேர்வை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக மேலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது பூம்பாறை செல்லும் வழித்தடத்தில் மரங்கள் முறிந்து விழுந்ததால் அரசு பஸ் இயக்க முடியவில்லை. மரங்கள் வெட்டி அகற்றியபின் பஸ் இயக்கப்படும் என்றார்.
மேல்மலை கிராமங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.
- அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார்
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பாண்டியன் நகரில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.5 லட்சம் செலவில் தெருக்களுக்கு புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதில், முதல் நாள் சாலையை ஜே.சி.பி. வாகனம் மூலம் கிளறிவிட்டு, மறுநாள் ஜல்லி இல்லாமல் புதிய யுக்தியை கையாண்டு மணலுக்கு பதிலாக எம்சாண்டை பயன்படுத்தி சிமெண்ட் கலவையை மட்டும் போட்டு தெருக்களில் 2 மணி நேரத்தில் பணியை முடித்து விட்டனர்.
அரைகுறையாக போடப்பட்ட இந்த தரமற்ற சிமெண்ட் சாலையால் அரசுக்கு பணம் ரூ.5 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும், நிலக்கோட்டை யூனியன் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் துணையுடன் தரமற்ற சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அதனை மாவட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் ஜல்லி, மணல் ஆகியவற்றை பயன்படுத்தி தரமான சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பழனி கோவிலுக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
- சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் தங்கள் செல்போன் மூலம் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். மேலும் அனுமதியின்றி கேமராக்கள் கொண்டு வந்து படம் பிடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதனை தவிர்க்கும் வகையில் வருகிற அக்டோபர் 1-ந்தேதி முதல் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன் மற்றும் கேமராக்களை அடிவாரத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்க கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் ஆணையர் மாரிமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பழனி கோவிலுக்கு புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள், செல்போன் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப்கார் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும்.
இதற்கு கட்டணமாக செல்போனுக்கு ரூ.5 வசூலிக்கப்படும். தரிசனம் முடிந்த பிறகு அதனை பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பழனி கோவிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் திடீரென முன்னறிவிப்பின்றி விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பக்தர்களின் செல்போனுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 80 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
- இதனைத் தொடர்ந்து நேற்று காலை அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை ஒன்றியம் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நிலக்கோட்டை, அணைப்பட்டி, விளாம்பட்டி, சிலுக்குவார்பட்டி, தோப்புப்பட்டி, சின்னமநாயக்கன்கோட்டை, சிறுநாயக்கன்பட்டி, பள்ளபட்டி, கொடைரோடு, துரைச்சாமிபுரம், கோட்டை, அப்பாவு பிள்ளைபட்டி உள்ளிட்ட 80 கிராமங்களில் இருந்து விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை அந்தந்த பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் மினி வேன், டிராக்டர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக நிலக்கோட்டைக்கு வந்தனர்.
நிலக்கோட்டை நால்ரோட்டில் இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் எழுச்சி ஊர்வலம் மதுரை கோட்டச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைவர் செந்தில்குமார், ஒன்றிய தலைவர் பரமேஸ்வரன், ஒன்றிய பொதுச்செயலாளர் நாகராஜ் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில இணை அமைப்பாளர் ராஜேஷ் சிறப்புரையாற்றி பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஊர்வலம் நிலக்கோட்டையில் தொடங்கி கோட்டை, துரைச்சாமிபுரம், முசுவனூத்து, பிரிவு சொக்கு பிள்ளை பட்டி, சிறு நாயக்கன்பட்டி அணைப்பட்டி வழியாக 80க்கும் விநாயகர் சிலைகள் அணைப்பட்டி வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி தலைமையில் விநாயகர் சிலைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
- அந்தந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன.
பெரும்பாறை:
பெரும்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, வெள்ளக்கரை, கொங்கப்பட்டி, புதூர், எம்.ஜி.ஆர்.நகர், குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பாச்சலூர், கவியக்காடு உள்ளிட்ட கிராமத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கணபதி ஹோமம், மகா அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அந்தந்த கிராமங்களில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் வழி நெடுகிலும் வாணவேடிக்கை, மேளதாளம் மற்றும் ஆண்கள், பெண்கள் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- ஆய்வின் போது காலாவதியான சவர்மா கண்டறியப்படவில்லை.
- தரமான வகையில் சவர்மா தயார் செய்யப்படுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரிலும் கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் கொடைக்கானல் நகரில் சவர்மா தயாரிக்கும் உணவகங்களில் கொடைக்கானல் நகராட்சி நகர்நல அலுவலர் தினேஷ் குமார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் லாரன்ஸ் ஆகியோர் இணைந்து ஆய்வு நடத்தினர்.
ஆய்வின் போது காலாவதியான சவர்மா கண்டறியப்படவில்லை. சவர்மா தயாரிப்பாளர்கள் சுகாதாரமாகத் தயாரிக்க வேண்டும், பழைய இறைச்சிகளைப் பயன்படுத்தக்கூடாது, முழுவதும் வேகவைத்த பின்னரே அதனை விற்பனை செய்ய வேண்டும் எ ன அறிவுறுத்தப்பட்டது.
தரமான வகையில் சவர்மா தயார் செய்யப்படுவதையும் விற்பனை செய்வதையும் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கினர். தரமற்ற சவர்மா தயாரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை செய்தனர். தொடந்து சவர்மா தயாரிப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
ஆய்வின் போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஒரு உணவகத்துக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
- மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின.
- வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பைன்பாரஸ்ட், குணாகுகை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் பேரிஜம் ஏரிக்கு செல்ல வனத்துறையிடம் சிறப்பு அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
கடந்த 11ந் தேதி காட்டு யானைகள் பேரிஜம் வனப்பகுதியில் முகாமிட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் இப்பகுதியில் உள்ள தொப்பி தூக்கும் பாறை, அமைதி பள்ளத்தாக்கு பேரிஜம் ஏரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. யானைகளை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தாலும் பேரிஜம் வனப்பகுதியில் கடந்த 8 நாட்களாக சுற்றித்திரியும் யானைகளை விரட்ட முடியவில்லை. 1 வாரமாக முகாமிட்டுள்ள யானைகளால் வார விடுமுறை, தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பேரிஜம் வனப்பகுதிக்குள் செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் மோயர் சதுக்கம் பகுதியில் வந்த யானைகள் அங்கிருந்த சாலையோர கடைகளின் முன்பகுதியை அடித்து நொறுக்கி சேதப்படுத்தின. இன்று காலையில் கடைக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமடைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கடைகளை சேதப்படுத்தியது யானைகள் தான் என உறுதி செய்தனர்.
வனப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் தற்போது வியாபார கடைகளையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனால் வனத்துறைக்கு கட்டுப்பட்ட அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட இன்று முதல் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதனிடையே வனத்துறையினர் யானைகளை கண்காணித்து விரைந்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.
- ஒருவர் யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த பெல்ட்டால் பெண் டாக்டரை விளாசினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை, கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று இரவு சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி (28) என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் ஜோதி மணி(25) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த பெல்ட்டால் அவரை விளாசினார். இதில் டாக்டர் ஜோதி மணிக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த நகர் வடக்கு போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சீலப்பாடி பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், தற்போது சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் ஒரு டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே போல மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எனவே அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கூட்டத்தில் அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
- அவர்களுக்கு நத்தம்விசுவநாதன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டுவில் அண்ணா பிறந்த நாளையொட்டி நிலக்கோட்டைதொகுதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வத்தலக்குண்டு கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வத்தலக்குண்டு நகர செயலாளர் பீர்முகமது, கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பாண்டிராதா, எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குமார் ஆகியோர் வரவேற்றார்கள்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம்விசுவநாதன், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழிசேகர், தலைமைக் கழகப் பேச்சாளர் பாவலர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் அ.ம.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்களுக்கு நத்தம்விசுவநாதன் சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர்கள் தண்டபாணி, சேகர், ராஜசேகரன், மாசாணம், மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தட்டிமுருகன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயபாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அறிவி, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் திலிப் குமார், மாவட்ட மாணவரணி பொருளாளர் வெங்கடேஷ், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு மார்க்ஆலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட சிறுபான்மைபிரிவு துணை செயலாளர் ஜான் நன்றி கூறினார்.
- இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
- ரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
ஒட்டன்சத்திரம்:
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. வடமாநிலங்களில் பெய்த மழை மற்றும் தமிழகத்தில் பருவம் தவறி பெய்த மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.
ரேசன் கடைகள் மற்றும் பசுமை பண்ணை கடைகள்மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்ட போதும் பொதுமக்களால் வாங்கி பயன்படுத்த முடியவில்லை. அதன்பிறகு படிப்படியாக தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் விலையும் குறைந்து வந்த நிலையில் தற்போது கடும் வீழ்ச்சி அடைந்ததால் குப்பையில் கொட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் காந்தி, காமராஜர் மார்க்கெட்டு களுக்கு தினந்தோறும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பெட்டி தக்காளி வரத்து இருக்கும். இங்கிருந்து தமிழகத்தின் பல மாவட்டங்க ளுக்கும், கேரளாவுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
தற்போது பெரும்பாலான ஊர்களில் தக்காளி விளைச்சல் அதிகரித்து ள்ளதால் வெளியூர் வியாபாரிகள் வருவது குறைந்து விட்டது. குறிப்பாக உடுமலைப்பேட்டையில் இருந்து வரும் வியாபாரிகள் இல்லாததால் மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்தது.
காந்தி மார்க்கெட்டுக்கு 2 ஆயிரம் பெட்டிகளும், காமராஜர் மார்க்கெட்டுக்கு 2500 பெட்டிகளும் விற்பனைக்கு வந்தது. ஒரு பெட்டி ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.4.50 மட்டுமே கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அதிலும் முதல் தர தக்காளி மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டிச் சென்றனர். செடியை பராமரித்து தண்ணீர் விட்டு, ஆட்களை வைத்து பறித்து மார்க்கெட்டுக்கு எடுத்து வரும் செலவை கணக்கிட்டால் பெரிய அளவு நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் காய்கறி செடிகள், மலர் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக தக்காளி விவசாயம் அதிக அளவு நடைபெற்று வந்தாலும் இதனை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிரந்தர விலை கிடைப்பதி ல்லை என்ற நிலை உள்ளது.
எனவே அதிகாரிகள் இதனை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பைக்கில் இருந்து தவறி விழுந்த பிரியா படுகாயம் அடைந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான தாண்டிக்குடியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி பிரியா (வயது 47). இவர்களுக்கு சந்தோஷ், விக்ரம் என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேந்திரன் கடந்த வாரம் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிட சென்றார். அப்போது மலைச்சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்த பிரியா படுகாயம் அடைந்தார். மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே உயிரிழந்த பிரியாவின் கண்கள் அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் தானமாக வழங்கப்பட்டது.






