என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் மீது தாக்குதல்
- இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது.
- ஒருவர் யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த பெல்ட்டால் பெண் டாக்டரை விளாசினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அரசு மருத்துவமனை, கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பல்வேறு சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்துவது அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று இரவு சாணார்பட்டி அருகே நத்தமாடிப்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி (28) என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த பயிற்சி பெண் டாக்டர் ஜோதி மணி(25) என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். யாரும் எதிர்பாராத நிலையில் கையில் வைத்திருந்த பெல்ட்டால் அவரை விளாசினார். இதில் டாக்டர் ஜோதி மணிக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த நகர் வடக்கு போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் விசாரணையில் சீலப்பாடி பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளதாகவும், தற்போது சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் ஒரு டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதே போல மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. எனவே அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.