என் மலர்tooltip icon

    கடலூர்

    குடியரசு தினவிழா நாளை(சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். #republicday
    கடலூர் முதுநகர்:

    நாடு முழுவதும் நாளை(சனிக்கிழமை) குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதிகளின் சதித்திட்டத்தை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான ரெயில், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ஜெகநாதன் உத்தரவின்பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் ஏட்டுகள் கோமதி, ராம்குமார், ராமமுர்த்தி மற்றும் போலீசார் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர். மேலும் தண்டவாள பகுதியிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் வழியாக வந்து செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களிலும் ‘மெட்டல் டிடெக்டர்’ மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை நாளை வரை நீடிக்கும் என போலீசார் ஒருவர் தெரிவித்தார். #republicday
    இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று கல்லூரி விழாவில் இளையராஜா பேசினார். #Ilayaraja75
    இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்த வரிசையில் இளையராஜாவின் பிறந்தநாள் விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நுண்கலை புலம் சார்பில் கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டினார். அவர் பேசியதாவது:-

    ‘‘இந்த அரங்குக்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். 1994-ம் ஆண்டு எனக்கு இந்த அரங்கில் தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்போது வந்துள்ளேன். இசையும், பாடல்களும் காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கின்றன.

    நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதய குரலில் இருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையாட்டுகிறோம். இதனால் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் இதை என்னிடம் கூறியுள்ளனர்.

    அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அதேபோல் மாணவர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நீரோடைகள் செல்லும் இடங்களைப் பசுமையாக்குவது போல மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும். சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது.


    நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளன. இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன்’’

    இவ்வாறு கூறிவிட்டு தன் முன் இருந்த ஆர்மோனிய பெட்டி மீது சத்தியம் செய்தார்.

    துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், “பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க போகிறோம். பல்கலைக்கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தில் இருக்கை அமைக்க அனுமதி வேண்டும்.

    இந்த இருக்கையின் மூலம் இசைத் துறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார். இதனை இளையராஜா ஏற்றுக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தருவதாக கூறினார். #Ilayaraja75 #ProducerCouncil #Vishal

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் பாலக்கரையில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் மற்றும் வயலூர் கிராம மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் ராமர், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், விருத்தாசலம் விழிப்புணர்வு இயக்க தலைவர் வக்கீல் தனவேல் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள். வடகிழக்கு பருவமழை குறைந்துவிட்டதால் 2018-19-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளின் துயர் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விருத்தாசலம் நகரத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வயலூர் ஏரியை என்.எல்.சி. நிதியில் ஆழப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும், விருத்தாசலம்-கடலூர் ரெயில் பாதையில் மூடப்பட்ட வயலூர் கேட்டினை பொதுமக்கள் மற்றும் விவசாய பயன்பாட்டிற்காக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அங்கிருந்து பேரணியாக விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று சப்-கலெக்டர் பிரசாந்தை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட சப்-கலெக்டர் பிரசாந்த் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    காட்டுமன்னார்கோவிலில் தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பெரியார்மேல்வீதியை சேர்ந்தவர் அமிர்தராஜ் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அமிர்தராஜ் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கு ஊருக்கு வந்திருந்தார். தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.

    பொங்கல் பண்டிகை முடிந்ததும் அமிர்தராஜ் காரை ஊரில் நிறுத்தி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். கடந்த 5 நாட்களாக அமிர்தராஜ் வீட்டின் அருகே கார் நின்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. கார் தீ பிடித்து எரிந்ததும் அக்கம் பக்கத்தினர் கூச்சல் போட்டு அலறினர்.

    வீட்டில் இருந்த அமிர்தராஜின் தந்தை பாடலீஸ்வரரும் அங்கு வந்தார். பின்பு அவர்கள் அந்த கார் மீது தண்ணீர் ஊற்றினர். ஆனால் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டே இருந்தது.

    இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்து குறித்து காட்டுமன்னார்கோவில் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சியாம்சுந்தர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எரிந்த காரை பார்வையிட்டார்.

    கார் எதனால் தீப்பிடித்தது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் கம்பெனி ஊழியரின் கார் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. அந்த பகுதியில் உள்ள 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் வீராணம் ஏரியின் மூலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும் இந்த ஏரியில் இருந்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் அனுப்படுகிறது. கடந்த டிசம்பர் 27-ந்தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.

    இதற்கிடையில் கடந்த 9-ந்தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந் தேதி முதல் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 18-ந் தேதி வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை மீண்டும் எட்டியது. இந்த நிலையில் நேற்று வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 110 கனஅடி தண்ணீர் வந்தது. ஆனால் இன்று தண்ணீர் வரத்து குறைந்து 80 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்த போதிலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 47.50 அடியாக உள்ளது.

    ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 117 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீருக்காக தொடர்ந்து 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. #VeeranamLake
    வடலூரில் சத்திய ஞானசபையில் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகள் இறைவன் ஒளி வடிவானவன் என்பதை உணர்த்தும் விதமாக கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். அதில் கடந்த 1872-ம் ஆண்டு சன்மார்க்க கொடியேற்றி முதல் ஜோதி தரிசனத்தை நிகழ்த்தினார்.

    அன்று முதல் மாதம் தோறும் பூச நட்சத்திர தினத்தன்று ஆறு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டு வருகிறது. அதே போல ஆண்டுதோறும் தைமாத பூச நட்சத்திரத்தன்று மட்டும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும்.

    இந்தஆண்டு 148-வது ஜோதி தரிசன விழா சத்திய ஞானசபையில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணிக்கு ‘அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி‘ என்கிற வள்ளலாரின் பாடலை அங்கு கூடியிருந்தவர்கள் பாடினர்.

    இதேபோல் வள்ளலார் பிறந்த மருதூரில் உள்ள அவரது இல்லம், வள்ளலார் தண்ணீரால் விளக்கு எரிய செய்த கருங்குழி, வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சத்தியஞானசபையில் இரவு 7 மணிக்கு திருஅருட்பா கருத்தரங்கம் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் ஏழு திரைகளை விலக்கி இன்று காலை 6 மணி, 10 மணிக்கு நடைபெற்றது. அதன் பின்னர்  நண்பகல் 1 மணிக்கு நடக்க உள்ளது.

    இன்று காலை நடைபெற்ற ஜோதி தரிசன விழாவில் அமைச்சர் எம்.சி.சம்பத் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



    தொடர்ந்து இந்த ஜோதி தரிசனம் இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை 5.30 மணிக்கும் ஏழு திரைகளை நீக்கி நடைபெறுகிறது.

    தைப்பூச ஜோதி தரிசனத்தில் கலந்து கொள்ள கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பஸ், வேன், கார்களில் வந்து குவிந்தனர்.

    வடலூரில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்களாக காணப்பட்டன. சத்திய ஞானசபையில் அமைக்கப்பட்டுள்ள அணையா அடுப்பில் தொடர்ந்து சமையல் செய்து தர்மசாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் வடலூரில் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம், மோர் வழங்கப்பட்டது.

    தர்மசாலை மேடையில் தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகின்றன.

    தைப்பூச ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், விழுப்புரம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ள தால் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தைப்பூச ஜோதிதரிசன விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.
    பண்ருட்டியில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி கெடிலம் ஆற்றில் நேற்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பண்ருட்டி கெடிலம் ஆற்றில் பண்ருட்டி சக்தி கணபதி, திருவதிகை முத்து மாரியம்மன், காடாம்புலியூர், முத்துமாரியம்மன், அங்குசெட்டிப்பாளையம் மாரியம்மன், தாழம்பட்டு முத்துமாரியம்மன், கோட்லாம்பாக்கம் கருமாரி அம்மன், பிள்ளையார் குப்பம் முத்தாலம்மன், தட்டாஞ்சாவடி காளியம்மன் ஆகிய சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது.

    இந்த விழாவில் பண்ருட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் இரவு 7 மணிக்கு தங்களது வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் கெடிலம் ஆற்று பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய லாரி ஒன்று சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை ஏசுதாஸ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார்.

    கெடிலம் ஆற்று பாலத்தில் அந்த லாரி வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த பக்தர்களின் கூட்டத்துக்குள் புகுந்தது.

    இதில் பல பக்தர்கள் லாரிக்கு அடியில் சிக்கி கதறினர். இதையறிந்த டிரைவர் ஏசுதாஸ் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த விபத்தில் கடலூர் கோண்டூரை சேர்ந்த கோமதி (23) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். மேலும் மாளிகம்பட்டை சேர்ந்த பார்வதி (15), வெண்ணிலா (16), அன்பு, தட்சிணாமூர்த்தி உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு முத்துக்குமார் என்பவர் ஓடிச் சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டார். பின்னர் அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக் காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வீராணம் ஏரி நேற்று மாலை முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி மாவட்டத்தின் பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 27-ந் தேதி வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதனால் ஏரி கடல் போல் காட்சி அளித்தது.

    இதற்கிடையில் கடந்த 9-ந் தேதி 46.75 அடியாக ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இந்த நிலையில் சேத்தியாத்தோப்பு அருகே மதகில் உடைப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், அந்த உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து ஏரியின் பாதுகாப்பு கருதி சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ். மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பிறகு நீர் வரத்து இல்லாததால், ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இதையடுத்து விவசாயத்துக்காகவும், சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காகவும் கடந்த 15-ந்தேதி முதல் கீழணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி வீதம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. 2-வது முறையாக வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சென்னை நகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 60கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இன்று காலை 44 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

    தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்துகொண்டிருப்பதால் விவசாயத்துக்கு 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    வீராணம் ஏரி அதன் முழு கொள்ளவை எட்டிய போதும் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவை குறைத்தது ஏன்? என்று அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து குழாய் மூலம் சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது மின் பற்றாக்குறை காரணமாக சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீர் 44 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அந்த மின் பற்றாக்குறையை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் வழக்கம்போல் சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #VeeranamLake

    நெல்லிக்குப்பம் அருகே காணும் பொங்கலையொட்டி மது குடிக்கும் தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ளது கீழ்அருங்குணம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 35). இவர் அண்ணா கிராமம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (50). அ.தி.மு.க. பிரமுகர்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே தேர்தலையொட்டி முன்விரோதம் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருபிரிவுகளாக பிரிந்து அடிக்கடி மோதி வந்தனர்.

    காணும் பொங்கலையொட்டி நேற்று இரவு தாமோதரன் தரப்பினரும், சுபாஷ் தரப்பினரும் தனித்தனியாக மது குடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே திடீரென்று வாய்த் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த தாக்குதலில் தாமோதரன் தரப்பை சேர்ந்த தங்கவேல் (37), முத்துக்குமரன் (30), சுபாஷினி (10), ஞானவேல் (21) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    சுபாஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன், சேதுபதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 6 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த மோதல் சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கட லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கீழ்அருங்குணம் கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் 10 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர்.
    கடலூர் முதுநகர்:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் வீடுகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். நேற்று மாட்டுப்பொங்கல் திருவிழா நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் விழா நடக்கிறது. இந்த விழாவையொட்டி பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள் சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடுவார்கள்.

    இதற்காக நேற்று கடலூர் துறைமுகம், அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் மீன் மார்க்கெட், முதுநகர் மீன் மார்க்கெட்டுகளில் மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கிச்சென்றனர். ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.600, சங்கரா ரூ.350, ஷீலா ரூ.300, கனவா ரூ.150-க்கு விலை போனது. மற்ற மீன்கள் குறைந்த விலையிலேயே விற்பனை செய்யப்பட்டன.

    நேற்று கிருத்திகை என்பதால் பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுக்கு பதிலாக சைவ உணவுகளே சமைத்தனர். இருப்பினும் காணும் பொங்கலுக்காக முன்கூட்டியே சிலர் மீன்களை வாங்கிச்சென்றதையும் காண முடிந்தது. இறைச்சி கடைகள் மூடப்பட்டிருந்ததாலும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட்டுக்கு வெளியே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு மீன்கள் வாங்க சென்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று (வியாழக்கிழமை) காணும் பொங்கல் முதல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். இதனால் பெரும்பாலான பொதுமக்கள் நேற்றே மீன்களை வாங்கிச்சென்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி வர தொடங்கி விட்டனர்.
    பொங்கல் பண்டிகையையொட்டி காராமணிக்குப்பம் சந்தையில் கருவாடு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த காராமணிக்குப்பத்தில் திங்கட்கிழமை தோறும் வாரசந்தை நடைபெறுவது வழக்கம்.

    இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகையை முன்னிட்டு இங்கு சிறப்பு சந்தை நடத்தப்படும்.

    போகி பண்டிகையையொட்டி காராமணிக்குப்பத்தில் சிறப்பு சந்தை இன்று அதிகாலை கூடியது. ஏராளமான கிராம மக்கள் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்து குவிந்தனர்.

    நாளை மறுநாள் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாடுகளுக்கு கட்டப்படும் மணிகள், வண்ணகயிறுகள் ஏராளமாக இன்று சந்தையில் விற்கப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த வியாபாரிகள் தங்களின் மாடுகளுக்கு தேவையான வண்ணக் கயிறுகள் மற்றும் மணிகளை வாங்கி சென்றனர்.

    மாட்டு பொங்கலையொட்டி அனைவரின் வீடுகளிலும் அசைவஉணவு படைப்பார்கள். இதில் பெரும்பாலானோர் கருவாடு சமைத்து படைப்பது வழக்கம்.

    இதையொட்டி இந்த சந்தைக்கு கடலூர் அருகில் உள்ள மீனவ கிராமங்களில் இருந்து ஏராளமானோர் அதிக அளவில் கருவாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

    இதனைத்தொடர்ந்து இன்று ஏராளமான பொதுமக்கள் சந்தையில் விற்கப்பட்ட பலவகையான கருவாடுகளை வாங்கி சென்றனர். இன்று மட்டும் ரூ.5 லட்சத்துக்கு கருவாடுகள் விற்கப்பட்டது. மேலும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூச்செடிகள் மற்றும் பல்வேறு பொருட்கள் ரூ.45 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே மேற்கூரை இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தகர்ப்பட்டது.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5 வரை வகுப்புகள் உள்ளது. மொத்தம் 31 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளிக்கட்டிடம் மிகவும் பழமையானதாகும். சுவர் முழுவதும் விரிசலுடன் காணப்பட்டது. இதுகுறித்து தலைமை ஆசிரியை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை பள்ளியின் மேற்கூரை கான்கிரட் பகுதி திடீரென்று இடிந்து கீழே விழுந்தது. இதனால் பள்ளியில் இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    பள்ளியில் பணியாற்றி வந்த 2 ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக மீட்டு அருகில் உள்ள கோவிலில் வைத்து பாடம் நடத்தினர்.

    பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்.

    அப்போது அந்த பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு கலெக்டர் அன்புச்செல்வன் ஏற்பாடுகள் செய்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை வடகரை ஊராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளி கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது.

    அதே இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் விரைவில் கட்டப்படுகிறது. அந்த பணிகள் தொடங்கி முடியும் வரை மாணவ- மாணவிகள் அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ×