என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. பகல் நேரத்தில் லேசான மழையும் இரவு நேரத்தில் விடிய விடிய மழையும் பெய்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர், திருப்பாதிரிபுலியூர், முதுநகர், திருவந்திபுரம், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, கோண்டூர் உள்ளிட்ட பகுதியில் கனமழை நீடித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடலூர வட்டார பகுதியில் ஒரே நாள் இரவில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பண்ருட்டி பகுதியில் 50 மி.மீ. பெய்து உள்ளது.

    இன்று அதிகாலை கடலூர் நகர் பகுதியில் மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியில் மழை காரணமாக சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியதால் துர்நாற்றம் வீசியது. சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகளவில உற்பத்தி ஆகிறது. எனவே நகராட்சி சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் தடுப்பணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெட்டிக்கடைக்காரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் செல்வகாந்தன் (வயது 49). இவர் ஊரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு 25.6.2019 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி வந்தார். அந்த சிறுமிக்கு செல்வகாந்தன் தின்பண்டம் கொடுத்து, அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இது பற்றி அந்த சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகாந்தனை கைது செய்தனர். அதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து செல்வகாந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் செல்வகாந்தனை கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
    திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    கடலூரில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியலாக்குகிறார்.

    இந்தியாவில் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீருக்கு பாகிஸ்தான் உரிமை கோருவதை திமுக ஆதரிக்கிறதா? என சந்தேகம் எழுகிறது. திமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். 
    முக ஸ்டாலின்
    காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாக கூறும் ஸ்டாலின் மெரினாவில் ஏன் நினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமராவதை தடுத்தது திமுக தான். அப்துல்கலாமை ஜனாதிபதியாகும் போது எதிர்த்ததும் திமுக தான். திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவராக வர முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வடலூர் அருகே தடுப்பு கட்டையில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில் கடலூர் கலெக்டரின் உறவினர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மந்தாரகுப்பம்:

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து சென்னையை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் கும்பகோணம்- ஜெயங்கொண்டம்- விருத்தாசலம் வழியாக வந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ்சை பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (வயது 42) ஓட்டிவந்தார்.

    அந்த ஆம்னி பஸ் நள்ளிரவு 2 மணிக்கு கடலூர் மாவட்டம் வடலூரில் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் பயங்கரமாக மோதியது.

    இதில் ஆம்னி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது. பஸ்சில் பயணம் செய்த பேராவூரணியை அடுத்த வீரியன்கோட்டை பகுதியை சேர்ந்த ஹரினி (24), சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். பி.இ.பட்டதாரியான இவர் கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வனின் உறவினர் ஆவார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த செல்வி, மல்லிகா, உமாபதி, ஹாசியா, இளங்கோவன், தமிழரசன் டிரைவர் ராஜா உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இறந்துபோன ஹரினி உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது. விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப்படுத்தினர்.

    இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே திருடு அம்மன் நகையை கோவிலில் வீசிசென்ற கொள்ளையர் குறித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கோனூர் கிராமத்தில் செல்லியம்மன், மாரியம்மன், அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆடித்திருவிழா நடந்து வருகிறது.

    கடந்த 14-ந் தேதி வீதி உலா முடிந்து சாமி சிலைகள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மறுநாள் காலை கோவில் பூசாரி செம்புலிங்கம் சாமிகளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த மாலைகளை அகற்றினார்.

    அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகை கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் ஊருக்குள் காட்டு தீ போல பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து முதல் கட்டமாக கோவில் பூசாரி செம்புலிங்கம், மைக்செட் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சாமி நகை கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து போலீசார் சாமி நகையை தேடி வந்தனர்.

    இன்று காலை பூசாரி செம்புலிங்கம் கோவில் வளாகத்தில் சுற்றி வந்தார். அப்போது அங்கு உள்ள குப்பை மேட்டில் பொருள் ஒன்று ஜொலித்தது. உடனே பூசாரி செம்புலிங்கம் அங்கு சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் திருட்டு போன 6 பவுன் நகை கிடப்பதை பார்த்தார். இதனை எடுத்து கொண்டு ஊர்முக்கிய பிரமுகர்களிடம் தெரிவித்தார்.

    இந்த நகையை கொள்ளையர்கள் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது. பின்னர் மீட்கப்பட்ட நகைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டியில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் சக்தி(16).சிவகண்டன் (16). இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் சக்தி,சிவகண்டன் ஆகிய 2பேரும் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்னர் அவர்கள் 2 பேரும் பள்ளியில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் நெய்வேலிக்கு சென்றனர்.

    பின்னர் நெய்வேலியில் இருந்து காடாம்புலியூருக்கு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சக்தி ஓட்டினார். சிவகண்டன் பின்னால் அமர்ந்து இருந்தார். காடாம்புலியூர் தாமரைக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து நெய்வேலி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சக்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சக்தி, சிவகண்டன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விபத்தில் பிளஸ்-1 மாணவர்கள் 2 பேரும் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருத்தாசலம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாப வாட்ஸ்அப்பில் பரவும் கடிதம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை பகுதி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர்கள் தங்களுக்கு பாலியல் தொல்லை தருவதாக போலீசாருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    அன்புள்ள காவலர் அவர்களுக்கு வணக்கம். எங்கள் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு 2 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கிறார்கள். பாலியல் ரீதியாக 2 மாணவிகளை வற்புறுத்தினர். இதனால் அவர்கள் 2பேரும் பள்ளியை விட்டே நின்று விட்டனர்.

    ஆசிரியர் தன் புத்தகத்தை வேண்டுமென்றே கீழே விழவைத்து, அதனை மாணவிகளை எடுக்கச் சொல்லி மாணவிகள் குனிந்து எழும் போது ரசிக்கின்றார். இந்த பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அந்த கடிதத்தில் தனது ஆதங்கத்தை கூறி எழுதியுள்ளார்.

    இந்த கடிதம் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்னாவிடம் கேட்டபோது எங்களுக்கு இதுவரை எந்த புகாரும் அதுபோல வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலர் செல்வகுமாரிடம் கேட்டபோது இந்த கடிதம் பாதிக்கப்பட்ட மாணவி எழுதிய கடிதமா? எந்த பள்ளியை சேர்ந்த மாணவி என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும். விசாரணையில் ஆசிரியர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பாதிக்கப்பட்ட மாணவிகள் யார்? மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஆசிரியர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    இதுபோன்ற கடிதம் சமூகவலைதளத்தில் பரவும் சம்பவம், பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    குறிஞ்சிப்பாடியில் காதலித்தபோது ஒன்றாக எடுத்துக்கொண்ட படத்தை மாப்பிள்ளை வீட்டாருக்கு அனுப்பி இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
    குறிஞ்சிப்பாடி,

    நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் கலையழகன். இவருடைய மகன் சிவஞானசம்பந்தம் (வயது 31). இவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே கல்லூரியில் படித்த இளம்பெண் ஒருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு, அவரது பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்தனர். அதன்படி கடந்த மாதம் 30-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இளம்பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்தது.

    இது பற்றி அறிந்ததும் ஆசிரியர் சிவஞானசம்பந்தம், மாப்பிள்ளை வீட்டாரிடம் அந்த இளம்பெண் பற்றி அவதூறாக கூறியுள்ளார். மேலும் காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட படத்தையும், மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை வீட்டார், நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதில் மனமுடைந்த அந்த இளம்பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதனால் அவர் உடனடியாக சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதற்கிடையே இளம்பெண்ணின் தந்தை, ஆசிரியர் சிவஞானசம்பந்தத்தை சந்தித்து நியாயம் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானசம்பந்தம், உனது மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து மாணவியின் தந்தை, குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவஞானசம்பந்தத்தை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லிக்குப்பம் அருகே மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் அரசு பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்து டிரைவரிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லிக்குப்பம்:

    கடலூரில் இருந்து நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், களிஞ்சிக்குப்பம் வழியாக சிறுவந்தாடு கிராமத்துக்கு தினந்தோறும் காலையில் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் கடலூரில் இருந்து புறப்பட்ட அரசு பஸ், களிஞ்சிக்குப்பத்துக்கு செல்லாமல் சொர்ணாவூர் வழியாக சிறுவந்தாடுக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அந்த பஸ் சொர்ணாவூர் வழியாக கடலூருக்கு புறப்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் களிஞ்சிக்குப்பம் கிராம மக்கள் ஒன்று திரண்டு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு சென்றனர். அப்போது சொர்ணாவூரில் இருந்து வந்த அரசு பஸ்சை, களிஞ்சிக்குப்பம் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது கிராம மக்கள், எங்களது ஊருக்கு தினமும் அரசு பஸ் வந்து செல்லும் என உத்தரவாதம் அளித்தால்தான் பஸ்சை விடுவிப்போம் என்றும், கிராமத்துக்குள் பஸ் வராத காரணத்தை தெளிவாக கூறி, மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து பஸ் டிரைவர் கவியரசன் ஒரு கடிதம் எழுதி கொடுத்தார். அந்த கடிதத்தில், பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் களிஞ்சிக்குப்பம் கிராமத்திற்குள் செல்லவில்லை. வரும் காலங்களில் தினமும் கிராமத்துக்குள் பஸ்சை ஓட்டிச்செல்வேன் என்று கூறியிருந்தார்.

    மேலும் இந்த ஒரு முறை மட்டும் மன்னிக்குமாறு டிரைவர், கிராம மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து கிராம மக்கள் பஸ்சை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
    கடலூர் அருகே நடைபெற்ற வாகன சோதனையில் பெண்ணுடன் சேர்ந்து காரில் சாராயம் கடத்திய இன்ஸ்பெக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர், ஆக.12-

    கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் கடலூர் அருகே உண்ணாமைலைசெட்டி சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். அந்த காரில் இருந்தவர் திடீரென இறங்கி தப்பி ஓடிவிட்டார். உஷாரான போலீசார் காரை சோதனை செய்த னர். அதில் 148 மதுப்பாட் டில்கள், 30 லிட்டர் சாரா யம் இருந்தது.

    காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி (வயது 48) என தெரிய வந்தது.

    இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் புதுவையில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    எனவே சமுத்திரக்கனி இன்ஸ்பெக்டர் சுந்த ரேசனிடம் மதுப்பாட்டில் களை கடத்தி சென்று விற்பனை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுள் ளார். அதன்படி இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் தனது காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து வாங்கி வந்துள்ளார்.

    மேற்கண்டவை போலீ சாரின் விசாரணை யில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர். * * * கைது செய்யப்பட்ட சமுத்திரக்கனி * * * பறிமுதல் செய்யப்பட்ட கார்

    டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 3 பேர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பாரதியார் வீதியை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர்(வயது 20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி விடுமுறை நாட்களில் ஊருக்கு வந்து செல்வார்.

    சொந்த ஊருக்கு வந்திருந்த ஷியாம் சுந்தர் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிபட்டுவந்தார்.

    இதை போல் மேல்பாதி பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம்(42), தூக்கணாம் பாக்கம் கரைமேடு பகுதியை சேர்ந்த சிறுமி பவஸ்ரீ(4) என்பவர் உள்பட 9 பேர் தொடர் காய்ச்சலால் அவதிபட்டு வந்தனர்.

    அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் 9 பேருக்கும் ரத்த பரிசோதனை செய்யபட்டது. அதில் ஷியாம் சுந்தர், பன்னீர் செல்வம், பவஸ்ரீ ஆகிய 3 பேருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து அவர்கள் 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உள்ள தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

    இது பற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் கடலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வேறு யாருக்கும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதார துறை இணை இயக்குனர் கீதாவுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பேரில் தற்போது முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களுக்கு 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சென்று அந்த பகுதியில் உள்ள பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம், கரைமேடு பகுதிக்கு சென்றுள்ள மருத்துவ குழுவில் கூடுதலாக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்கிருந்து பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா? என மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    மேலும் மழைநீர் தேங்கும் வகையில் டயர்கள் மற்றும் பொருட்களை வீடுகளில் பயன்படுத்த வேண்டாம். தண்ணீரை கொதிக்க வைத்து பருக வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளை அந்த பகுதி பொது மக்களுக்கு வழங்கினர்.

    அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் திறந்தவெளி பகுதியில் டெங்கு கொசுக்கள் மற்றும் கொசு புழுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் மருந்து தெளித்து சென்றனர்.
    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள கோவிலில் திருட்டு போன நகையை மீட்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் திருப்பணால் தெரு பகுதியில் பாளையத்து மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு கோவில் திருவிழா நடத்துவதற்காக கோவிலில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலின் கதவை திறந்து உள்ளேசென்றனர்.

    அப்போது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3½ பவுன் நகை மற்றும் கோவிலில் இருந்த வெள்ளி, பித்தளை பொருட்கள் அனைத்தும் கொள்ளைபோய் இருந்தன. இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து கோவில் பூசாரி கலியமூர்த்தியிடம் கேட்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் கலியமூர்த்தி மீது பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று பலமுறை கேட்டும் போலீசார் சரிவர பதில் அளிக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள ஸ்ரீமுஷ்ணம்- சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாமல் அணிவகுத்து நின்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் உள்ள பாளையத்து மாரியம்மன் கோவிலில் திருட்டுபோன நகை மற்றும் பொருட்களை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும். அப்போது தான் நாங்கள் மறியல் போராட்டததை கைவிட்டு கலைந்து செல்வோம் என கூறினர்.

    அதற்கு போலீசார் கூறும்போது, நாங்கள் இந்த பிரச்சனை தொடர்பாக கோவில் பூசாரி கலியமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளோம். ஆனால் தற்போது அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். அவர் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு பின்னர் அவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும். பாளையத்து மாரியம்மன் கோவிலில் திருட்டுபோன நகை மற்றும் பொருட்கள் மீட்கப்படும். எனவே நீங்கள் தற்போது மறியல் போராட்டத்தை கைவிட்டு இங்கிருந்து கலைந்து செல்லுங்கள் என்று கூறினர்.

    இதை ஏற்று பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    ×