என் மலர்tooltip icon

    கடலூர்

    கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நேற்று 45.38 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் இன்று 46 அடியாக உயர்ந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடியாகும்.

    இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மக்களின் தாகத்தை தீர்ப்பதிலும் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் மழைபெய்யாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடியாக குறைந்தது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்த மழையின் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்து அடைந்ததும், அங்கிருந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

    இன்று காலை வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக ஆயிரத்து 670 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.38 அடியாக இருந்தது இன்று 46 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து இதுபோல் தொடர்ந்து அதிகரித்து வந்தால் நாளைக்குள் வீராணம் ஏரி நிரம்பி விடும். தற்போது வீராணம் ஏரி கடல்போல் காட்சியளிக்கிறது.

    சென்னைக்கு குடிநீருக்காக கடந்த சிலநாட்களாக 25 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னைக்கு இன்று 45 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது. வீராணம் நிரம்பியபின்பு சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும்.
    நெல்லிக்குப்பத்தில் பெரியாண்டவர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லிக்குப்பம்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் மேல்பாதி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்தகோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் விமர்சையாக பூஜை நடப்பது வழக்கம்.

    அதன்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பாக பூஜை நடைபெற்றது. கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் நேர்த்திகடனாக பொங்கல் வைத்து வழிபட்டனர். பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கை பணத்தை செலுத்தினர்.

    நேற்று இரவு பூசாரி பூஜையை முடித்து விட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மமனிதர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்பு அவர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்தனர். அதில் இருந்த பணத்தை ஒரு பையில் அள்ளிபோட்டனர்.

    அதன்பின்பு அவர்கள் அந்த உண்டியலை அருகில் உள்ள புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டிலை காணவில்லை.

    தகவல் அறிந்து ஊர் மக்கள் திரண்டு கோவிலுக்கு வந்தனர். பின்பு அவர்கள் அங்கு உள்ள புதரில் தேடிபார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    இந்தகோவில் உண்டியல் நாளை மறுநாள் திறந்து பணம் எண்ணப்பட இருந்தது. அதற்குள் கொள்ளையர்கள் உண்டிலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    பெரியாண்டவர் கோவிலில் உண்டிலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் விழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தலைமறைவான அண்ணன், தம்பிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடைவீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தினேஷ் (வயது 21).

    இவர் இரவு அங்கு நடந்த மாரியம்மன் கோவில் விழாவில் காளியாட்டத்தை பார்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான தாமரைச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் அங்கு வந்தனர். இவர்களுக்கிடையே கோவில் விழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது. இதனை பார்த்த அங்குள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் இரவு 11 மணியளவில் கிள்ளை பகுதியில் தினேஷ் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

    அப்போது தாமரைச் செல்வனும், தமிழ்ச்செல்வனும் அங்கு வந்தனர். அவர்களுக்குள் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமரைச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சேர்ந்து தினேசை கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தினர்.

    இதில் ரத்த வெள்ளத்தில் தினேஷ் கீழே சாய்ந்தார். இதனை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்து காயத்துடன் துடித்து கொண்டிருந்த தினேசை அவரது நண்பர்கள் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார்.

    இது குறித்து கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், தாமரைச்செல்வன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கீழணையிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஏரி பாதி அளவு நிரம்பிவிட்டது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாக்கத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 74 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள அணைகளிலிருந்து நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்த 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

    இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது. வீராணம் ஏரிக்கு கீழ்அணையில் இருந்து வரும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கீழ்அணையில் இருந்து வடவாறு வழியாக 1320 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்தது. இன்று 1525 கன அடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வருகிறது. இதனால் வீராணம் ஏரியின் நீர் மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.60 அடியாக இருந்து. இன்று நீர்மட்டம் 44.72 அடியாக உயர்ந்தது. வீராணம் ஏரி தற்போது பாதி அளவு நிரம்பிவிட்டது.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் 24 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 25 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கீழ் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் வீராணம் ஏரி நிரம்பி விடும். அதன்பிறகு சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்தனர்.

    சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டால் சென்னையின் குடிநீர் பிரச்சனை தீர்ந்துவிடும்.
    வடலூர் அருகே நர்சு தூக்குப்போட்டு இறந்தார். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    குறிஞ்சிப்பாடி:

    வடலூர் அருகே உள்ள குண்டியமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகுல்ராஜன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி(வயது 29). இவர் அதே பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ராகுல்ராஜன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் செந்தமிழ்செல்வியிடம் சம்பள பணத்தை தனது தாயிடம் கொடுக்குமாறு அவர் வற்புறுத்தி வந்துள்ளார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் செந்தமிழ்செல்வியிடம் சம்பள பணத்தை தருமாறு ராகுல்ராஜன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த ராகுல்ராஜன், செந்தமிழ்செல்வியை திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, செந்தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இறந்த செந்தமிழ்செல்வியின் தாய் செண்பகவள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து ராகுல்ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ பட்டமேற்படிப்புகளில் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு டாக்டர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

    இந்த நிலையில் இன்று(செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளனர்.

    கடலூர் , விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், வேப்பூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதையடுத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் ஒரு சில டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
    விருத்தாசலம் அருகே பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே உள்ள பரவலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). இவருடைய மகள் சுகுணா(வயது 21). பி.எஸ்சி. படித்துள்ளார். பரவலூர் கிராமத்தில் நேற்று நடந்த அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் சென்று விட்டனர். அப்போது சுகுணா, மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் சுகுணா திடீரென கதவை சாத்தி, உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பின்னர் அவர், வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. இதில் வலி தாங்க முடியாமல் அவர், அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, கதவை திறக்க முயன்றும் முடியவில்லை.

    இதனால் சிறிது நேரத்தில் உடல் கருகிய நிலையில் சுகுணா, சுருண்டு விழுந்து இறந்தார். இது பற்றி அறிந்ததும் சுகுணாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடிவந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சுகுணா உடல் கருகி கிடந்ததை கண்டு, அவர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுகுணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுகுணா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ப.சிதம்பரம் கைதால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் செட்டித்தெருவில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பேசியதாவது:-

    முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை பாரதீய ஜனதா அரசு பழி வாங்கும் நோக்கில் கைது செய்துள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். ப.சிதம்பரம் கைதால் இந்தியாவில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. நான் சிதம்பரத்துக்கு ஆதரவாக பேசியதால் என் மீதும் நடவடிக்கை பாயலாம்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் முறைகேடு நடந்ததால் அந்த வெற்றி நழுவி போனது.

    சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் மீது தவறான வதந்தியை பரப்பி வெற்றியை ஒருசிலர் தடுக்க முயன்றனர். ஆனால் அதனை மக்கள் நம்பாமல் அவரை அமோக வெற்றி பெற செய்தனர்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத்த கூட்டணி சரியான கூட்டணி. அதனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மிகவும் கட்டுப்பாடான கட்சி. யார் தவறு செய்தாலும் கட்சியில் அனுமதிக்க மாட்டார்கள்.

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது இளைஞர்கள் அனைவரும் வேலை வாய்ப்பை பெற்றனர். தற்போது பா.ஜனதா அரசில் இளைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள்.

    தொழிற்சாலைகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. பா.ஜனதா ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்து பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல கார் கம்பெனிகள் நடத்த முடியாமல் திவாலாகி உள்ளது. இதனால் பல லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

    ராகுல்காந்தி பிரதமராகி இருந்தால் தேர்தல் வாக்குறுதிபடி ஏழை மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்பட்டு இருக்கும். விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும்.

    தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜனதா எந்த காலத்திலும் காலூன்ற முடியாது. எதிர்காலத்திலும் தி.மு.க. கூட்டணியே அமோக வெற்றிபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 40.6 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலையில் 41.43 அடியாக உயர்ந்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    இதனால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

    கடந்த 17-ந் தேதி பாசனத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சுமார் 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் நேற்று முன்தினம் வீராணம் ஏரிக்கு வந்தது. அதனை தொடர்ந்து நேற்று ஏரியின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்தது. இன்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்ந்தது.

    கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னை மக்களின் குடிநீருக்காக 24 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இன்று 25 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் மழைபெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

    இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 76 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.

    கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்தது. இதை தொடர்ந்து அங்குள்ள அணைகளிலிருந்து நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    கடந்து 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

    கடந்த 17-ந் தேதி பாசனத்திற்காக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணையை வந்து சேர்ந்தது. அங்கிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவு வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சுமார் 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் நேற்று மதியம் வீராணம் ஏரியை வந்தடைந்தது. அப்போது விவசாயிகள் சங்கத்தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர். நேற்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39.87 அடியாக இருந்தது. இன்று காலை ஏரியின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்தது. மேலும் லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும் மழைபெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னைக்கு குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன்தினம் 22 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நேற்று முதல் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் நீர்மட்டம் மேலும் உயர்ந்ததால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் உயர்த்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன.
    விருத்தாசலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் 1 வாரமாக மழை பெய்தது.

    விருத்தாசலம் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    விருத்தாசலம் அருகே உள்ள பேரளையூர் கிராமத்தில் ஒரு வேப்ப மரம் விழுந்தது. சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதியில் இருந்த 5 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய மின்சாரம் இல்லாததால் கொசுக்கடியில் அவதி அடைந்தனர்.

    விருத்தாச்சலம் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மழையின் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

    விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேறுவதற்கு வழியின்றி பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. காலையில் மழை விட்டதும் சிறிது சிறிதாக தண்ணீர் வெளியேறியது.

    விருத்தாசலம் கடை வீதி அருகே மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி.

    இதே போல கம்மாபுரம், ஆலடி, மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக குறுவை நெல் சாகுபடி அறுவடை பாதிக்கப்பட்டது. குறுவை சாகுபடி முடிந்து அறுவடை மேற்கொண்ட விவசாயிகளுக்கு அடுத்த பயிர்களுக்கான சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மழைபோதுமானதாக இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர் நகர் பகுதியில் மாலை 5 மணி அளவில் மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மழை நின்றது. அதன்பின்னர் விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதே போல கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பேட்டை, பாலூர், நடுவீரப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    பண்ருட்டி பகுதியில் 2 மணி நேரம் இடியுடன் மழை கொட்டிதீர்த்தது. இது தவிர காடாம்புலியூர், அண்ணா கிராமம், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்தது.

    இதே போல பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, இறையூர் உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பெண்ணாடத்தில் வாய்க்கால் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
    சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் கலுங்குமேடு பகுதியை சேர்ந்தவர் கோழிபாண்டியன் (வயது 35). பிரபலரவுடி.

    இவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலைபார்த்து வந்தார். நேற்று இரவு 11 மணி அளவில் கோழிபாண்டியன் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் அண்ணாமலைநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர்.

    அங்கு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு வந்தனர். ஓட்டல் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே புகுந்தனர்.

    பின்பு அவர்கள் அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த கோழிபாண்டியன் மீது திடீரென்று மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டை எடுத்து வீசினர். இதில் குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    வெடிகுண்டு வெடித்ததில் கோழிபாண்டியன் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வாலிபர்கள் அரிவாளால் சரமாரியாக கோழி பாண்டியனை வெட்டினர். இதில் துடிதுடித்து அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதனைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் மணிகண்டன் மற்றும் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். வெடிகுண்டு வெடித்ததால் ஓட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனை பயன்படுத்தி கோலிபாண்டியை கொலை செய்த 2 வாலிபர்கர்களும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி ஓடி விட்டனர்.

    ஓட்டலில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட தகவல் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஓட்டலில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த கோழிபாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே ரவுடி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ரவுடி கோழிபாண்டியன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் அவருக்கும், வேறு சிலருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அவர்கள் கோழிபாண்டியனை வெடிகுண்டு வீசி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதற்கிடையே தப்பி ஓடிய வாலிபர்களை பிடிக்க சிதம்பரம் துணைபோலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவு வாகனங்களை மறித்து தீவிர சோதனை நடத்தினர். கொலையாளிகள் புதுவைக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசில் ஒருபிரிவினர் இன்றுகாலை புதுவைக்கு சென்றுள்ளனர்.

    ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கொல்லப்பட்ட ரவுடி கோழிபாண்டியனுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், அஸ்வின் (8) என்ற மகனும், அஸ்மிதா (9) என்ற மகனும் உள்ளனர்.

    ×