search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சூறாவளி காற்றினால் சாய்ந்த மின் கம்பத்தை படத்தில் காணலாம்.
    X
    விருத்தாசலம் அருகே பேரளையூர் கிராமத்தில் சூறாவளி காற்றினால் சாய்ந்த மின் கம்பத்தை படத்தில் காணலாம்.

    விருத்தாசலத்தில் சூறாவளியுடன் மழை- மின் கம்பங்கள் சாய்ந்ததால் இருளில் மக்கள் தவிப்பு

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழையால் மின்கம்பங்கள் சாய்ந்தன.
    விருத்தாசலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்திலும் 1 வாரமாக மழை பெய்தது.

    விருத்தாசலம் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    விருத்தாசலம் அருகே உள்ள பேரளையூர் கிராமத்தில் ஒரு வேப்ப மரம் விழுந்தது. சூறாவளிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதியில் இருந்த 5 மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் விடிய விடிய மின்சாரம் இல்லாததால் கொசுக்கடியில் அவதி அடைந்தனர்.

    விருத்தாச்சலம் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் மழையின் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

    விருத்தாசலம் பஸ் நிலையத்தில் மழை நீர் வெளியேறுவதற்கு வழியின்றி பஸ் நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. காலையில் மழை விட்டதும் சிறிது சிறிதாக தண்ணீர் வெளியேறியது.

    விருத்தாசலம் கடை வீதி அருகே மழை நீர் தேங்கி நிற்கும் காட்சி.

    இதே போல கம்மாபுரம், ஆலடி, மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக குறுவை நெல் சாகுபடி அறுவடை பாதிக்கப்பட்டது. குறுவை சாகுபடி முடிந்து அறுவடை மேற்கொண்ட விவசாயிகளுக்கு அடுத்த பயிர்களுக்கான சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மழைபோதுமானதாக இருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கடலூர் நகர் பகுதியில் மாலை 5 மணி அளவில் மழை கொட்டி தீர்த்தது. சிறிது நேரத்தில் மழை நின்றது. அதன்பின்னர் விடிய விடிய மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. இதே போல கடலூர் முதுநகர், நெல்லிக்குப்பம், மேல்பேட்டை, பாலூர், நடுவீரப்பட்டு, கோண்டூர், நத்தப்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    பண்ருட்டி பகுதியில் 2 மணி நேரம் இடியுடன் மழை கொட்டிதீர்த்தது. இது தவிர காடாம்புலியூர், அண்ணா கிராமம், முத்தாண்டிக்குப்பம், புதுப்பேட்டை, கண்டரக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்தது.

    இதே போல பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம், ஆவினங்குடி, இறையூர் உள்ளிட்ட பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. பெண்ணாடத்தில் வாய்க்கால் சீரமைக்கப்படாமல் உள்ளது. எனவே மழைநீருடன் கழிவு நீரும் சேர்ந்து ஓடியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
    Next Story
    ×