என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 417 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மராட்டிய மாநிலத்தில் இருந்து விருத்தாசலம் வந்த 4 வயது பெண் குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த குழந்தையும், தாயும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 417-ல் இருந்து 418- ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 377 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 3 பேர், கிருஷ்ணா நர்சிங் பயிற்சி பள்ளியில் 14 பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் என மொத்தம் 18 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்புடன் திரும்பினர்.
41 பேர் மட்டுமே தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் உள்ள 3,331 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் இது வரை 9 ஆயிரத்து 303 பேருக்கு உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 807 பேருக்கு பாதிப்பு இல்லை. 78 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். நேற்று 367 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மொத்தம் 445 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்கக்கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருவானது. இதற்கு அம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பெண்ணாடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 7 மணியளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் வெண்கரும்பூர் கிராமத்தில் உள்ள இலுப்பைத் தோப்பு பகுதியில் பழமை வாய்ந்த இலுப்பை மரம் வேரோடு சாய்ந்து அங்கிருந்த அருண் மற்றும் செல்வமணி ஆகியோரது வீட்டின் மீது விழுந்தது.
இதில் அருண் வீடு முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் செல்வமணி வீட்டில் சுவர் இடிந்து சேதமானதுடன், அங்கிருந்த மின்கம்பம் ஒன்றும் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை செய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து அந்த பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
விருத்தாசலத்தில் மாலை 5.15 மணியளவில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பெரியகண்டியாங்குப்பத்தில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு 11 மணியை கடந்தும் மின்வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் அகற்றினர்.
கடலூரை பொறுத்தவரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஏற்கனவே மீன்பிடி தடைகாலம் இருப்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர். அதே நேரத்தில் கரையோர பகுதியில் கட்டுமரங்களில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களும் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அக்னி நட்சத்திரத்தால் வெயில் வாட்டி வரும் நிலையில், இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
நெய்வேலி 12-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 47). என்.எல்.சி. நிரந்தர தொழிலாளி. கடந்த 16-ந்தேதி இரவு வீட்டில் இருந்த இவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. இதில் திடீரென மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், ஈஸ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 143 மதுபான கடைகள் உள்ளன. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 10 இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து 2 நாட்களில் கடலூர் மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடிமகன்கள் டாஸ்மாக் கடைகளில் திரண்டனர். அவர்களை கட்டுபடுத்தும் விதமாக நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் வழங்கப்பட்டன.
நேரம் வாரியாக கொடுக்கப்பட்ட டோக்கன்களை வைத்து எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக, சமூக இடைவெளி விட்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த தகவலை அறிந்த டாஸ்மாக் அதிகாரி ஒருவர் மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் தற்போது கடை திறக்கும் நேரம் காலை 10 மணி முதல் 5 மணிவரை இருந்தது.
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைவாக இருந்ததால் காலை 10 மணியில் இருந்து 7 மணிவரை கடை திறந்து இருக்கும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேர நீட்டிப்பால் மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் அம்பன் சூறாவளி புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் இன்று (18- ந் தேதி) முதல் 20 -ந் தேதிக்குள் மிகவும் கடுமையான சூறாவளி புயலாகவும் தீவிரமடைய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று கடலூர் துறைமுகம் பகுதியில் கடும் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகில் சென்ற மீனவர்கள் கடல் அலையில் சிக்கி படகு சேதமடைந்தது மீனவர்கள் உதவியோடு 3 பேர் உயிருடன் மீட்டனர்.
நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் துறைமுக பகுதிகளில் சூறைக்காற்று வீசியதால் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடலூர் துறைமுகத்தில் நேற்று வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் சூறாவளிப் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்த காரணத்தினால் கடலூர் துறைமுகத்தில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் கடல் பகுதிகளில் வழக்கத்தைவிட சீற்றமாக கடல் அலை காணப்பட்டது.
வானிலை மையம் அறிவுறுத்தியது போல் கடலூர் துறைமுகம், தாழங்குடா, தேவனாம்பட்டினம், ராசா பேட்டை, அக்கரை கோரி, சித்திரை பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவ கிராமத்தில் இருந்து யாரும் இன்று மீன் பிடிக்க செல்லவில்லை .
மேலும் கடந்த 3 நாட்களாக கடல் சீற்றம் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில் தற்போது மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல காரணத்தினால் அவரவர்கள் பகுதியில் மீன் வலைகள் மற்றும் படகுகள் சரிபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி காந்தி ரோட்டில் பழக்கடை வைத்திருப்பவர் குமார். இந்த கடையில் கொக்கு பாளையத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 19) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 13-ந் தேதி இவரது சொந்த ஊரான சேந்தமங்கலத்தில் சென்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணிக்கு இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது குறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தனர்.காடாம் புலியூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இன்று காலை பண்ருட்டி அண்ணா பல்கலைக்கழகம் எதிரில் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பகுதியில் இவரது வேலை பார்த்து வந்த பழக்கடைகள் பின்புறம் உள்ள முந்திரி தோப்பில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டு பிடிக்கப்பட்டார்.
தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வல்லியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ராதிகா (36). இவர்களுக்கு அஜய் (7), சஞ்சய் (5) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். நேற்று மாலை ராதிகா தனது மகன் சஞ்சயுடன், காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பாக்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்த்து விட்டு மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். ஸ்ரீமுஷ்ணம் சாய்பாபா கோவில் அருகே வந்த போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென ராதிகாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா திருடன், திருடன் என கூச்சலிட்டார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த அருட்செல்வம் என்பவர், அந்த வாலிபரை துரத்தி சென்றார்.
இதையடுத்து அந்த வாலிபர், தான் பறித்த தங்க சங்கிலியை அருகே வீசி விட்டு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து அருட்செல்வம், இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஸ்ரீநெடுஞ்சேரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சோமலிங்கம் மகன் தமிழ்செல்வன் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்செல்வனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீ முஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வல்லியம் பகுதியை சேர்ந்தவர் வீரமணி (வயது 45). விவசாயி. இவரது மனைவி ராதிகா (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலையில் ராதிகா தனது மகனுடன் காட்டுமன்னார்கோவில் அருகே பாப்பாக்குடியில் உள்ள தனது பெற்றோரை பார்ப்பதற்காக மொபட்டில் சென்றார்.
விருத்தாசலம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்த வாலிபர் வந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் ராதிகா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்தார்.
அதிர்ச்சி அடைந்த ராதிகா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த கொள்ளையன் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டான். உடனே போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அப்போது ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது போலீசார் வாகனத்துக்கு எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பதட்டம் அடைந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராதிகாவிடம் நகை பறித்ததும், ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள நெடுஞ்சேரி பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24) என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்ச் செல்வனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 பவுன் தாலி செயின் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து கொள்ளையனை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகும்அமீதை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் பாராட்டினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு தலைவரும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளருமான கே.ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி, தலைமையகத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்கள், மற்றும் உதவியாளர்களுக்கு அரிசி மற்றும் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
இதில் துணை பொது மேலாளர் இளங்கோவன், தலைவர் அய்யப்பன், செயலாளர் சுரேஷ், கோடிஸ்வரன், சாந்தி, மலர்விழி மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






