என் மலர்
கடலூர்
- திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு டிராக்டருடன் வந்த அன்பழகன் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
- கள்ளக்காதலில் ஈடுபட்ட மாமியார், அவரின் கள்ளக்காதலனை மருமகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் ஆவினங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 36), விவசாயி. இவரது மாமியார் கொளஞ்சி (55) அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவருக்கும் செல்லதுரை (55) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அன்பழகன், மாமியார் கொளஞ்சி, அவரின் கள்ளக்காதலன் செல்லதுரையை பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும், அவர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இந்நிலையில் அன்பழகனின் மாமியார் கொளஞ்சி, அவரது வீட்டுக்கு அருகில் செல்லத்துரையிடம் நேற்று இரவு 11 மணியளவில் பேசிக்கொண்டிருந்தார். இத்தகவல் அன்பழகனுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்துச் சென்றார்.
வேப்பூர் சாலை அருகே மறைவான இடத்தில் பேசிக்கொண்டிருந்த கொளஞ்சி, செல்லதுரை மீது டிராக்டரை ஏற்றினார். இதில் சம்பவ இடத்திலேயே கொளஞ்சி துடிதுடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் செல்லதுரை தப்பி ஓடினார்.
அவரை விடாமல் டிராக்டரில் துரத்தி சென்ற அன்பழகன், செல்லதுரை மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்கு டிராக்டருடன் வந்த அன்பழகன் நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார்.
இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து அன்பழகனை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கொளஞ்சி, செல்லதுரை ஆகிய 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதலில் ஈடுபட்ட மாமியார், அவரின் கள்ளக்காதலனை மருமகன் டிராக்டர் ஏற்றி கொலை செய்த சம்பவம் ஆவினங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது..இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார்.
- பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார்.
கடலூர்:
பண்ருட்டி எல்.என்.புரம் குயவர் வீதியை சேர்ந்தவர் ஜோதி. இவரது மகன் சந்திரன் (வயது 27). இவர் லாரி கிளீனராக வேலை செய்து வந்தார். இவரது வீட்டில் மின்சார கோளாறு உள்ளது. இதனால் வீட்டில் உள்ள எர்த் கம்பியில் ஒரு சில நேரங்களில் மின்சாரம் வரும். இந்நிலையில் லாரி கிளினரான சந்திரன் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தனது வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது சுவற்றில் இருந்த எர்த் கம்பியில் அவரது கைப்பட்டது.
இதில் எர்த் கம்பியில் இருந்து வந்த மின்சாரம் தாக்கி இவர் தூக்கி வீசப்பட்டார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சந்திரன் இறந்து விட்டதாக கூறினார். இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்தனர். மின்சாரம் தாக்கி பலியான கிளினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் இவர் வாகனத்தின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
- இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்
கடலூர்:
விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகை கடை ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூரை சேர்ந்தவர் முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சா லையில் சென்று கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார்.
- புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மனைவி புஷ்பா (வயது 47). விவசாயக் கூலித் தொழிலாளி. இவர் கடந்த 6-ந்தேதி மேல்குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் உளுந்து அடிக்கும் எந்திரத்தில், உளுந்து அடித்துக் கொண்டிருந்தார். அப்போது புஷ்பாவின் கழுத்தில் இருந்த துண்டு உளுந்து அடிக்கும் எந்திர விசிறியில் மாட்டிக்கொண்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட புஷ்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு புஷ்பாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலன் அளிக்காமல் புஷ்பா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். புஷ்பாவின் கணவர் ராமசாமி (55) கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பெண் ஒருவர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது திடீரென்று கதறி அழுது கொண்டு தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.
அவர் கடலூர் தூக்கணாம்பாக்கம் சேர்ந்த அம்சவல்லி. இவர் கடலூர் அரசு மருத்துவமனைவளாக பகுதியில் வளையல்கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. சம்பவத்தன்று இவரது உறவினர் ஹரி கிருஷ்ணன் அம்சவல்லியை பார்ப்பதற்காக காரில் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு நபர் திடீரென்று ஹரி கிருஷ்ணன் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் வளையல் கடை நடத்துவதற்கு தொந்தரவு அளித்து வருகிறார்.
ஆகையால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலில் பெட்ரோலை ஊற்றியது தெரிய வந்தது. அப்போது அங்கு இருந்த போலீசார் இது சம்பந்தமாக புகார் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கையில் வருங்காலங்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை செய்தனர். இந்த சம்பவம் கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் கடலூர் சாலையில் முகேஷ்ராஜ் வசித்து வருகிறார். இவருக்கும் கிருத்திகா (வயது 23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இவரது தாயார் ஆண்டாள் (55). இவருக்கு இவரது மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருத்திகா இன்று அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்த வந்த மாமியார் ஆண்டாள், உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது ஊற்றினார். இதில் முகம், கண், காது, உடல், மர்ம உறுப்புகளில் ஊற்றினார். மேலும், கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றி கிருத்திகாவை கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது கிருத்திகாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கிருத்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்த போது ஆசிட் ஊற்றப்பட்டதால் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்த போதிலும் 8 பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது.
- தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் அடுத்த துறைமுகம் அக்கரை கோரி பகுதியில் தினமும் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று நள்ளிரவு அக்கரை கோரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் திடீரென்று எரிய தொடங்கியது.
இதனை தொடர்ந்து வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒவ்வொன்றிலும் தீ பரவி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஊர் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பைபர் படகுகளை தண்ணீர் ஊற்றி நீண்ட நேரம் போராடி அணைத்தனர்.
பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் நீண்ட நேரம் முயற்சி செய்து தீயை அணைத்த போதிலும் 8 பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது. இது பற்றிய தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயில் கருகி எரிந்த படகுகள் மற்றும் வலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் அக்கரை கோரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், குப்புசாமி, அன்பு, மேகநாதன், பாலமுருகன், பவலேஷ், சாமிநாதன், மகேந்திரன் ஆகிய 8 பேரின் பைபர் படகுகள் மற்றும் வலைகள் எரிந்தது தெரிய வந்துள்ளது.
மர்மநபர்கள் படகுகளை தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்பில் படகுகள் மற்றும் வலைகள் எரிந்ததால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைபர் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? முன் விரோதம் காரணமாக தீ வைத்தார்களா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடலூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் தாழங்குடாவை சேர்ந்த 3 மீனவர்கள் தென்பெண்ணையாறு கரையோரம் தங்கள் படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்து சென்றபோது இதே போல் மர்மநபர்கள் படகுகள் மற்றும் வலைகளுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது நள்ளிரவில் அக்கரை கோரி பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த பைபர் படகுகளில் மர்மநபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் மீனவர்கள் கிராமத்தில் இடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து திரண்டு வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு பதட்டமான சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பணி முடிந்ததும் இரவு அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினர். தாங்கள் வந்த போலீஸ் வேனை வடக்குத்து போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த வேனின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்த வேனை பார்வையிட்டார்.
வேனின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது வேனுக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்குத்து பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி தம்பிபேட்டை பகுதியில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இத் தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பிபேட்டை கிராமத்திற்கு விரைந்து சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்திய போது ஒரு கும்பல் போலீசாரை பணி செய்ய விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இது மட்டும் இன்றி அங்கு இருந்த பொதுமக்களையும் சரமாரியாக தாக்கினார்கள். இதனை தொடர்ந்து அங்கிருந்த போலீஸ் ஜீப் கண்ணாடியை கல்லால் தாக்கி அடித்து நொறுக்கி அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.
இந்த மோதலில் தம்பிபேட்டை சேர்ந்த அலமேலு, சரண்ராஜ், கார்த்திக், இளையமாறன் ஆகிய 4 பேர் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் தம்பி பேட்டைைய சேர்ந்த செந்தமிழ் செல்வன், வீர பிரபு உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே மோதலை தடுக்க சென்ற போலீசாரின் ஜீப் கண்ணாடி உடைத்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- தொடர்ந்து சீற்றம் ஏற்பட்டு வருவதால் சவுக்கு மரங்கள் ஏராளமானவை கடலில் அடித்து செல்லப்பட்டது.
- மீனவர்களின் வலை மற்றும் படகுகளும் சேதமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர்:
வங்கக்கடலில் கடந்த 2004 -ம் ஆண்டு கடும் நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு வந்ததோடு, 600-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து கடலில் தற்போது வரை அடிக்கடி ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடலூர் மாவட்ட கடற்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக திடீரென்று கடல் சீற்றம், கடல் முன்னோக்கி வருதல், அடிக்கடி மண்ணரிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பீதி ஏற்பட்டு வருகின்றது. இது மட்டும் இன்றி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து கடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தொடர் பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்து சென்றதும் குறிப்பிடத்தக்கதாகும். இது மட்டும் இன்றி கடலூர் தாழங்குடா, சுப உப்பலவாடி பகுதிகளில் சுனாமி பேரலைக்குப் பிறகு வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கடற்கரை ஓரமாக சவுக்கு மரங்கள், தோப்புகள் ஏற்படுத்தி பாதுகாத்து வந்தனர்.
தற்போது கடலில் தொடர்ந்து சீற்றம் ஏற்பட்டு வருவதால் சவுக்கு மரங்கள் ஏராளமானவை கடலில் அடித்து செல்லப்பட்டது.இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தை விட கடல் முன்னோக்கி வருவதோடு மண்ணரிப்பும் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றது. இதன் காரணமாக ஏற்கனவே மண்ணில் புதைந்திருந்த சிமெண்ட் கட்டைகள் தற்போது தொடர் மண்ணரிப்பு காரணமாக வெளியில் வந்துள்ளது. மேலும் கடல் முன்னோக்கி வருவதால் கடற்கரை முகப்பு பகுதியில் இருந்து தற்போது கடல் நீர் இருக்கும் பகுதி சற்று நெருங்கி வந்தது போல் இருக்கிறது. இதன் காரணமாக கடற்கரை ஓரமாக பைபர் படகு நிறுத்துவதை தற்போது மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி செல்வதையும் காணமுடிகிறது. மேலும் அவ்வப்போது கடல் அலைகள் திடீர் சீற்றம் காரணமாக மீனவர்களின் வலை மற்றும் படகுகளும் சேதமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். கடலில் அடிக்கடி திடீர் மாற்றம் காரணமாக கடலூர் மாவட்ட கடற்கரை ஓரமாக உள்ள மீனவர்கள் வழக்கத்தை விட அதிக அளவில் பீதியுடன் காணப்பட்டு வருகின்றனர்.
- கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
- ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
பண்ருட்டி புதுநகர் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் அஸ்வினி (வயது 20), கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி புறப்பட்டு சென்றார். மாலை வீடு திரும்ப வில்லை. கல்லூரியில் விசாரித்த போது அஸ்வினி கல்லூரிக்கு செல்லவில்லை என்று தெரிய வந்தது.
பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் காணாமல் போன பெண்ணின் தந்தை கணேசன் புகார் கொடுத்தார். அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ராஜசேகர்ஆசை வார்த்தை கூறி கடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி அஸ்வினியை தேடி வருகின்றனர்.
- சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது.
- நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த வரக்கால்பட்டு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது வரக்கால்ப ட்டு பகுதியில் சாலை நடுவில் சிமெண்ட் தடுப்பு க்கட்டையில் பலத்த சத்தததுடன் லாரி மோதி நின்றது. அப்போது முன்பக்க சக்கரம் அச்சு முறிந்து லாரியில் இருந்த டிரைவர் லேசான காயமடைந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் செஞ்சி பகுதியில் இருந்து மாடு எலும்புகளை ஏற்றிக்கொண்ட கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு கொண்டு சென்ற போது எதிர்பாராமல் சிமெண்ட் தடுப்பு கட்டை மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






