என் மலர்
கடலூர்
- குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர்.
- வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக வருகிறதா என ஆய்வு செய்தனர்.
திண்டிவனம்:
கடந்த 30-ந் தேதி ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது.
விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டோக்கன் வழக்கப்பட்டு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுவருகிறது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்படாத இடங்களில் உள்ள வீடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது, அதே சமயம் வெள்ளதால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வரும் இந்த குளறுபடிகள் காரணமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டிவனம் அருகே உள்ள மேல்பேரடிக்குப்ப கிராம மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மேல் பேரடிக் குப்பம் குளம் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுவதாகவும் குடி நீர் கலங்கலாக வருவதாகவும் குற்றம் சாட்டினர். திருவண்ணாமலை செல்லும் சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திண்டிவனம் தாசில்தார் சிவா, டி.எஸ்.பி. பிரகாஷ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மேலும் வீடு, வீடாக சென்று குடிநீர் கலங்கலாக வருகிறதா என ஆய்வு செய்தனர். இந்த மறியல் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது.
- மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.
கடலூர்:
தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ந் தேதி காலை பலவீனமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புயல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகின்றது.
ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குடைப்பிடித்த படியும், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மழையில் பலர் நனைந்த படி சென்றதைக் காண முடிந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது சிறிதளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.
இந்த நிலையில் தென்பெண்ணை கரையோரம் ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து தற்போது மணல் மூட்டைகள் அடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இருந்தபோதிலும் சாத்தனூர் அணையிலிருந்து மீண்டும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இன்று முதல் 13-ந் தேதி வரை மழை இருக்கும் என்பதால் ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்து உள்ளனர்.
- மேல்மலையனூரில் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செஞ்சி:
கடந்த வாரம் பெய்த புயல் மழையால் செஞ்சி பகுதியில் ஏராளமான வீடுகள் மற்றும் நிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களில் வெள்ள நிவாரண பணம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் பக்கத்து ஒன்றியமான மேல்மலையனூர் ஒன்றியத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு மேல்மலையனூர் ஒன்றியம் சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை செஞ்சி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சத்திய மங்கலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சென்ற சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் இங்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம்.
- பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ம.க. சார்பில் மருத்துவ முகாம் கடலூர் கண்டகாடு பகுதியில் இன்று காலை நடைபெற்றது. மருத்துவ முகாமிற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேரில் வந்தார்.
பின்னர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தலின் பேரில் இங்கு மருத்துவ முகாம் நடத்துகிறோம். அரசு சார்பில் நடத்த வேண்டியதை நாங்கள் செய்து வருகிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் பல மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்கிறேன்.
இந்த மருத்துவ முகாம் என்பது மிக அவசியமானது என மருத்துவர் என்ற முறையில் நான் செய்து உள்ளேன். புயல் தாக்கி ஒரு வாரம் ஆகயும் இன்னும் இந்த பகுதிக்கு சரியான முறையில் நிவாரணம் வரவில்லை. இங்கு மருத்துவர்கள் வரவில்லை. இங்கு வந்து பாதிப்புகள் கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை. இதுதான் தமிழ்நாட்டின் தலைவிதி.
இந்த புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டு இருப்பது இயற்கையானது. இதனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்த அரசு சார்பில் முடியும். அதுதான் அரசாங்கத்தின் வேலையாகும்.
ஆனால் அரசின் மெத்தனப்போக்கால் தென்பெண்ணை ஆற்றில் ஒரே நாளில் 1.70 லட்சம் கன அடி வினாடிக்கு தண்ணீர் வெளியேற்றியதால் இந்த மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலை தண்ணீர் வீட்டுக்குள் வந்துள்ளது. அப்போது நீங்கள் உங்கள் உயிரை தான் முதலில் காப்பாற்ற வேண்டியது முக்கியம் என்ற நோக்கில் வெளியேறி இருப்பீர்கள்.
ஆனால் முன்கூட்டியே அரசு சார்பில் 6 மணி நேரத்திற்கு முன்பு கூறினால் உங்களை பாதுகாப்பாக வெளியேற்றி உங்கள் பொருட்களை அனைத்தையும் காப்பாற்றி இருக்கலாம். இந்த பாதிப்புக்கு அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இதனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் நானும் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டித்து உள்ளோம். இந்த தி.மு.க. அரசு அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் விடப்பட்டபோது விமர்சனம் செய்தார்கள். இதனை விட மோசமானது தி.மு.க. அரசு சாத்தனூர் அணையை திறந்து விட்டதுதான்.
ஆனால் இது அரசு செய்த மிகப்பெரிய தவறாகும். ஒரு பக்கம் தவறு நேரிட்டாலும் அதற்கு மாறாக நிவாரணம் மற்றும் உதவி செய்திருக்க வேண்டும். ஆனால் ரூ.2 ஆயிரம் மட்டும் நிவாரணம் வழங்கினால் மக்கள் என்ன செய்வார்கள்? இந்த பணத்தை வைத்துக்கொண்டு வீட்டை சுத்தம் செய்வதற்கு சரியாகுமா? ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதும் சேதமாகி உள்ளது. இதனை பார்க்கும்போது அரசு ஆணவமாக இந்த நிவாரணத் தொகையை அறிவித்துள்ளது.
மேலும் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டால் 9-வது மாடியில் இருக்கும் நபர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். தூத்துக்குடியில் வெள்ளம் ஏற்பட்டபோது 6 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள். ஆனால் கடலூரில் வெள்ளம் ஏற்பட்டால் 2 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள்.
ஆனால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி போன்ற மக்கள் பாவம் பட்டவர்களா? தூத்துக்குடி, சென்னை மக்கள் புண்ணியம் செய்தார்களா? அங்குள்ள மக்களுக்கு ரூ.6 ஆயிரம். இங்குள்ள மக்களுக்கு ரூ.2 ஆயிரம். அதனையும் தூக்கி போடுகிறீர்கள். மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும் குறித்து பார்வையிட்டு தான் வருகின்றேன். வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நோய் மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என தெரியவில்லை. தி.மு.க. கிளை செயலாளர் மூலம் கணக்கெடுப்பு பணி நடந்துள்ளது. இது வெட்க கேடான செயலாகும். அவர்கள் மூலமாக தான் காசு வரும். அவர்கள் கமிஷன் எடுத்துக் கொள்வார்கள். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனை பார்க்கும் போது மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். தினம் ஒரு மணி நேரம் 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்தால் போதாது. சொல்றது புரிகிறதா யாரை சொல்கிறோம் என தெரிகிறதா? இதனை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்துவார்கள். இதுதான் தமிழ்நாட்டில் நடக்கிறது. எங்கு பாத்தாலும் கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கடும் கோபமாக அரசை பற்றி குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் காசு லஞ்சம் பெற்றுக் கொண்டு வருகின்றனர். தியாகி செந்தில் பாலாஜி என்ற ஒருவர் உள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். மக்களுக்காக சிறைக்கு சென்று உள்ளார் என நினைப்பு. ஆனால் 400 நாட்கள் ஜெயிலில் இருந்து வந்த அவர் அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் என்ன நடக்கிறது அவருக்கு தெரியுமா? ஆனால் அவருக்கு லஞ்சம் பெறுவது தான் தெரியும். இது போன்ற மருத்துவ முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தி.மு.க. போல் போட்டோ பிடித்து செல்வதில்லை. இங்கு சிகிச்சை பெறும் மக்களை தொடர்ந்து பின்பற்றி அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும். மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் சரி செய்ய எவ்வளவு பெரிய போராட்டம் நடத்த தயங்க போவதில்லை.
உங்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு அனைத்தையும் அரசு கொடுக்க அழுத்தம் கொடுத்து செய்து கொடுப்போம்.
இவ்வாறு பேசினார்.
அப்போது மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பொருளாளர் திலக பாமா , மாநில சொத்து பாதுகாப்பு குழு கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர்கள் சண். முத்து கிருஷ்ணன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், மகேஷ், சமூக முன்னேற்ற சங்கம் தலைவர் சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர் தடா. தட்சிணா மூர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் சிதைந்து கடும் சேதமடைந்து உள்ளது.
- தென்பெண்ணை ஆறு குறுக்கே சிறிய பாலம் உள்ளது.
கடலூர்:
தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தென்பெண்ணையாறு கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்கள் கடும் பாதிப்படைந்தது.
கடலூர் அருகே அழகிய நத்தம் பகுதியில் தென்பெண்ணை ஆறு குறுக்கே சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ரஜினி நடித்த ஜெய்லர் படக்காட்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கரையோரத்தில் சிமெண்ட் மற்றும் இரும்பு கட்டிடத்தில் போலீஸ் சோதனை சாவடி இருந்து வந்தது.
இந்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில் சோதனை சாவடி கட்டிடங்கள் இருந்த சுவடு இல்லாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.
ஆற்றின் அழகிய நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் சிதைந்து கடும் சேதமடைந்து உள்ளது.
பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதியடைந்து உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
- பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை.
நெல்லிக்குப்பம்:
கடலுர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தது.
இந்த நிலையில் தொழிலாளர் நல த்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முள்ளி கிராம்பட்டில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அந்த வகையில் கையில் குழந்தையுடன் நின்ற இளம்பெண் மற்றும் மூதாட்டி ஒருவரிடம் அமைச்சர் சி.வெ.கணேசன் குறைகளை கேட்டார்.
அப்போது அவா்கள் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி கதறி அழுதனர்.
இதை பார்த்த அமைச்சர் சி.வெ.கணேசன், உடனே அந்த பெண்களின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறி, அண்ணன் வந்துட்டேன், கவலை படாதே, உங்கள் குடும்பத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என்றார்.
மேலும் இளம்பெண் வைத்திருந்த பெண் குழந்தையை வாங்கிய அமைச்சர், அந்த குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினார்.
பின்னர், தாசில்தாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் வருகிறேன் என்று தெரிந்தும் நீங்கள் வரவில்லை, உடனே இங்கு வந்து பாதிக்கப்பட்ட பகுதியை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுங்கள் என்று கூறி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் கிருஷ்ணராஜன், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் மாருதி ராதாகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், வி.சி.க. நகர செயலாளர் திருமாறன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
- ஆயிரக்கணக்கான வீடுகள், சிறு பாலங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவை பெருமளவில் சேதமடைந்து உள்ளன.
கடலூர்:
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலங்களில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.
இந்த நிலையில் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் தண்ணீர் வடிந்து வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீர் தற்போது கணிசமாக வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றது.
இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான வீடுகள், சிறு பாலங்கள், பாலங்கள், சாலைகள் போன்றவை பெருமளவில் சேதமடைந்து உள்ளன. மேலும் பல்வேறு கிராமங்களுக்கு சாலை துண்டிக்கப்பட்டு பெரும் பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றது.
இது மட்டும் இன்றி பாதுகாப்பு மையங்களில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் உரிய முறையில் உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை எனக் கூறி தொடர்ந்து மறியல் போராட்டமும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மோட்டார்கள் மூலம் தண்ணீரில் வெளியேற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் வடியாத பகுதிகளில் இருந்து பொதுமக்களை படகு மூலமாக தன்னார்வலர்கள் மீட்டு வருவதையும் காணமுடிந்து வருகின்றது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
கடலூர்:
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக சாத்தனூர் அணை நிரம்பியது.
அணையில் இருந்து 2.40 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தென்பெண்ணையாறு கரையோரம் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடங்கியது.
இது மட்டும் இன்றி ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தும் பல கோடி ரூபாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பனை எம்.எல்.ஏ. மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஆணையாளர் அனு மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து வருகின்றனர்.
மேலும் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை தீயணைப்பு துறையினர் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அண்ணா கிராமம் ஒன்றிய தி.மு.க. சார்பில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட 1200 பேருக்கு புடவை, பெட்ஷீட் போர்வை, 5 கிலோ அரிசி மற்றும் உணவு பொருட்கள் ஆகிய தொகுப்புகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்பொழுது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பாளர் ராமன், எம்.எல்.ஏ.க்கள் சபா. ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், ஒன்றிய குழு தலைவர் ஜானகிராமன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.கே. வெங்கட்ராமன் செய்திருந்து அனைவரையும் வரவேற்றார்.
மேல்பட்டாம்பாக்கத்தில் ஆய்வை முடித்து கொண்டு துணை முதலமைச்சர் கடலூருக்கு வந்தார். குமாரபுரத்துக்கு வந்த போது மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் காரை பார்த்ததும் கையை காண்பித்தனர்.
உடனடியாக காரை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை பார்வையிட்டார்.
பொதுமக்கள் அவரிடம் இந்த பகுதியில் அடிக்கடி மழைநீர் தேங்குகிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதன் பின்னர் அவர் கடலூர் புறப்பட்டு வந்தார்.
- ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
- கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் அம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
- மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.
கடலூர்:
சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிக கன மழை பெய்ததால் 1,70,000 கன அடி தண்ணீர் சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.
இதனை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தையா நகரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கால் மூலமாக பேசினார்.
அப்போது வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விரைந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உங்களுடன், எம்.எல்.ஏ மேயர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார்.
அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த முதலமைச்சரை காண்பித்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் யாரும் அச்சப்பட வேண்டாம்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசு மூலமாக எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உள்ளிட்ட அனைவரும் உங்களுக்கு தேவையான அனைத்து மீட்பு நடவடிக்கைகளிலும் உடனடியாக செய்து தர உத்தரவிட்டுள்ளேன் என பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அமைச்சருக்கு வீடியோ கால் மூலமாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.
- வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், வேப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.

கனமழை காரணமாக கடலூர், வடலூர், காட்டுக் கூடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.

கடலூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
- தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக இன்று பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக மாறியது.
இது, புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை பிற்பகலில் புயலாக கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.






